வாரத்திற்கு 5 மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!
By DIN | Published On : 19th October 2021 04:10 PM | Last Updated : 19th October 2021 04:10 PM | அ+அ அ- |

வாரத்திற்கு ஐந்து மணிநேரம் மிதமான உடற்பயிற்சி மேற்கொண்டால் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி என்பது அவசியமானது. உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இன்று பலரும் ஓடியாடி உழைப்பது குறைந்துவிட்டது. மாறாக, கணினித் திரையின் முன்பாக பல மணி நேரம் அமர்த்திருந்தே வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாகவே தற்போது நோய்களும் பல்கிப் பெருகிவிட்டன. குழந்தைகள் கூட உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க உடலுக்கு அசைவு கொடுக்க வேண்டியது என்கின்றனர் உடலியல் நிபுணர்கள்.
இதையும் படிக்க | ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் இணக்கமுடன் இருக்கும் தம்பதிகள்: ஆய்வில் தகவல்!
இந்நிலையில், 2013 முதல் 2016 வரை 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்யும்பட்சத்தில் ஆண்டொன்றுக்கு 46,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மருத்துவம் மற்றும் அறிவியல்' என்ற இதழில் வெளியிடப்பட்டன.
அமெரிக்காவில் புற்றுநோய் ஏற்படக் காரணங்களில் ஒன்று உடல் இயக்கமின்மை. அதாவது, மூன்று சதவீத புற்றுநோய்க்குக் காரணம் உடல் செயல்பாடு இல்லாமை எனத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்களிடையே புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
எனவே, குறைந்தது வாரத்திற்கு 5 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆய்வின் முடிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?