உருளைக்கிழங்கு சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இதில் இருக்கின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும். 

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. அதுபோல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும். 

அதேபோல உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட்டால் முழு நன்மையையும் பெற முடியும் என்று கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள், குடல், இரைப்பைக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு உருளைக்கிழங்கு வரப்பிரசாதமாகும். 

இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உணவில் உருளைக்கிழங்கு வறுவல் இல்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை பார்த்திருக்கலாம். ஆனால், உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது. 

இந்நிலையில் உருளைக்கிழங்கு தொடர்ந்து சாப்பிடுவதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? உடல் எடை, இதய நோய்களில் தொடர்புடையதா? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஆய்வின் முடிவுகள் 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில்' வெளியிடப்பட்டுள்ளன. 

இளமைப் பருவம் என்பது பரிணாம வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான காலகட்டமாகும். அவை பெரும்பாலும் உணவு மற்றும் வாழ்க்கை முறையால் பாதிக்கப்படுகின்றன. வளர்ச்சியைத் தடுக்கும் ஆபத்து காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதே நோய்களில் இருந்து காப்பாற்ற உதவும். 

அந்தவகையில், ஆய்வில் 9-17 வயதுடைய சிறுமிகளுக்கு தினமும் 1 முதல் 1.5 கப் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. இந்த அளவில் எந்தவித பாதக விளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. 

உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றில் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்று கண்டறியப்பட்டாலும் சில முடிவுகளை வரையறுக்க இதுகுறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவை என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. 

ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பொட்டாசியம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com