பயணத்தை விரும்புபவரா நீங்கள்? நன்மைகளும் சில குறிப்புகளும்

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பயணத்துக்கான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திக் காட்டுவது என்பதே பெரும் சவாலும் சாதனையும்தான்.
பயணத்தை விரும்புபவரா நீங்கள்? நன்மைகளும் சில குறிப்புகளும்
Published on
Updated on
3 min read

வீடு, வேலை, அன்றாடம் வசிக்கும் இருப்பிடம் அனைத்தையும் விட்டுவிட்டு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சில நாள்கள் வேறு ஒரு உலகத்தில் சென்று வசிக்கும் இனிமையான அனுபவம்தான் 'பயணம்'.

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பயணத்துக்கான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திக் காட்டுவது என்பதே பெரும் சவாலும் சாதனையும்தான். அவ்வாறு அதனை செயல்படுத்தும்போது திட்டமிட்ட இடத்தில் காலடி எடுத்துவைக்கும்போது வரும் உணர்வுக்கு ஈடு இணை எதுவுமில்லை. அந்த மகிழ்ச்சியை அளவிட கருவிகள் இல்லை. ஏனெனில் இன்று பயணம் குறித்து திட்டமிட்ட பலரும் அதனை சரியாக செயல்படுத்த முடிவதில்லை.

தினமும் காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் சென்று வந்து, குடும்பத்தினருடன் சிறிது நேரம் கழித்து, பின்னர் உறங்கி மீண்டும் மறுநாள் காலையில் எழுந்து... இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் உடலையும் மனதையும் புத்துணர்வாக்க அன்றாட நடவடிக்கைகளில் இருந்து அவ்வப்போது விடுபட்டு பிடித்த இடங்களுக்கு சென்றுவர வேண்டும். சாகசங்கள் நிறைந்த புதிய இடத்திற்கு பயணம் செய்து கிடைக்கும் அந்த நிகரற்ற உணர்வை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அனுபவிக்க வேண்டும். 

அவ்வாறு பயணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்துப் பார்க்கலாம். 

பயணம் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, கம்ப்யூட்டரில் 'cache' களை நீக்கி 'பிரஷ் அப்' செய்வது போல உங்களுடைய மூளைப் பதிவில் பழைய கசப்பான நினைவுகள் எல்லாம் மறந்து புத்துணர்வு அடைகிறது. 

இன்று மனநலம் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். எந்தவித மருத்துவ உதவியின்றி உங்கள் மனதை நீங்களே சரிசெய்ய வேண்டும் என்றால் பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். மனம் சோர்வாகும் நேரத்தில் இந்த புதிய பயணம் 'ரீசார்ஜ்' செய்கிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது. 

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு தனியே செல்ல இன்று பலரும் பயன்படுகின்றனர். அவ்வப்போது அருகில் உள்ள இடங்களுக்கு தனியே பயணித்தால் பயம் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்துவிடும். 

ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ளும்போது உலக அறிவு பெற முடியும். மேலும் புதிய பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். 

மலைப் பகுதிகளுக்கு 'ட்ரெக்கிங்' செல்லும்போது உடலுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவது 30% குறைவதாகவும் மாறாக நினைவுத் திறன் அதிகரிப்பதாகவும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

பயணம் உங்களுக்கு புதிய சிந்தனைகளை ஏற்படுத்தும். உடலும் மனமும் ஒரு நிலையில் இருந்தால் மட்டுமே புதிய சிந்தனைகள் தோன்றும். அந்த ஒருநிலைப்படுத்தலை பயணம் தருகிறது. 

இறுதியாக, வாழ்க்கைப் பாடங்கள் என்பது நாம் தேடிப் பெறுபவை. அன்றாட வாழ்க்கையை விடுத்துச் செல்லும்போது மட்டுமே அதீத அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும் பெற வேண்டும் எனில் பயணம் மேற்கொள்ளுங்கள். 

பயணம், மனித வாழ்வின் ஆசீர்வாதம். உலகத்தையும் உங்களையும் சுய ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்களை புரிந்துகொள்ள வைக்கிறது. 

எனவே, அவ்வப்போது உங்களை நீங்களே 'ரீசார்ஜ்' செய்துகொள்ளவும், புத்துணர்வு அடையவும், அனுபவங்களைப் பெறவும் பயணம் செய்யுங்கள்! 

கவனத்தில் கொள்ளவேண்டியவை! 

அலுவலக வேலை செய்யும் பலரும் இன்று லேப்டாப், மொபைல் என வேலைச் சூழலையும் உடன் கொண்டு செல்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தினசரி வாழ்க்கை அலுத்துப் போவதால்தான் சில நாள்கள் அதற்கு விடுப்பு அளிக்கிறோம். அவ்வாறு இருக்கையில், அலுவலக வேலையையும் சூழலையும் எடுத்துச் செல்லாதீர்கள். 

அடுத்ததாக யாருடன் பயணம் செய்ய விருப்பமோ அவர்களுடன் செல்லலாம், முடிந்தவரையில் தனிமையில் பயணம் மேற்கொள்ளலாம். 

பயணத்தின் இடையே 'டென்ஷன்' ஆகாத அளவுக்கு திட்டமிட்டுச் செல்லலாம். அவசியம் தேவைப்படும் பொருள்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள். 

உங்களுக்கு எந்த மாதிரியான பயணம் எந்த மாதிரியான இடங்கள் பிடிக்குமோ அதற்கேற்பவாறு திட்டமிடுங்கள். 

உங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இருப்பவர்களை மட்டும் உடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் அவர்கள் உங்களுக்கு தொல்லையாகக் கூட மாறிவிடலாம்.

அதுபோல பயணம் என்றால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சென்று பயணிக்க வேண்டும் என்பதில்லை. உள்ளூர் பேருந்திலேயே மனதுக்குப் பிடித்த பாடலுடன் சில கிலோமீட்டர்கள் பயணித்தலே போதுமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com