மன அழுத்தத்தைக் குறைக்கிறதா உடற்பயிற்சி?

உடல் இயக்கம் குறைந்துள்ள தற்போதைய நவீன காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மன அழுத்தத்தைக் குறைக்கிறதா உடற்பயிற்சி?

உடல் இயக்கம் குறைந்துள்ள தற்போதைய நவீன காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உடல் மற்றும் மனநிலையை சரியாகப் பராமரிக்க தினமும் 30 நிமிடமாவது லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துதான் பிரதானமாக இருக்கிறது. இதனால் தற்போது உடல்நோய்களை சமாளிக்கவும் சிலர் நோய்கள் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சி செய்கின்றனர். 

அதுபோல உடல் பருமன் என்ற பிரச்னையும் தற்போது பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கங்கள், உடல் இயக்கமின்மை, மன அழுத்தம் என இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமன் பிரச்னையால் நீரிழிவு நோய், இதய நோய் என பல நோய்தாக்கம் ஏற்படுவதால் உடலைக் குறைக்க பலரும் பல வழிகளில் மெனக்கெடுகின்றனர். 

அந்தவகையில், உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் குறைக்கும் என்றும் மனநலம் மேம்பட உதவும் என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும் அதுகுறித்த ஆய்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

சமீபத்தில், அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டி (Iowa State University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அடுத்த 75 நிமிடங்களுக்கு மன அழுத்தம் குறைவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் 'பிராண்டியர்ஸ் இன் சைக்காட்ரி' (Frontiers In Psychiatry) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆய்வில் பல்வேறு விதமான உடற்பயிற்சிகளும் அவற்றின் உடல் மற்றும் மன விளைவுகளும் கணக்கெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் ஏற்ப மனநலம் மேம்பட்டது கண்டறியப்பட்டது. அதில் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மனநலம் மேம்பட்டுக் காணப்பட்டதாகவும் மிதமான நடைப்பயிற்சி மட்டும்கூட போதுமானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உணவுகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் காரணங்களால் உடல் பிரச்னைகள் வருவது இனிவரும் காலங்களில் தவிர்க்க முடியாததுதான். ஆனால், நோய்களில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளும் தேவையும் அவசியமும் இருக்கிறது. 

அந்தவகையில் உடற்பயிற்சி செய்வது நினைவகத் திறனையும் மேம்படுத்தும் என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் 30 நிமிடமாவது லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதனையும் அதிகாலை/காலை வேளையில் செய்தால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். 

சிறு குழந்தைகளுக்குக் கூட மன அழுத்தம் வரும் இந்த காலகட்டத்தில் அவற்றைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சிகளில் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com