அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் முதுகுவலியா?

கீழ் முதுகு வலி என்பது இன்று அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. அதிலும், ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகப்பெரும் பிரச்னை என்றுகூட கூறலாம். 
அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் முதுகுவலியா?

கீழ் முதுகு வலி (Lower back pain) என்பது இன்று அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. அதிலும், ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகப்பெரும் பிரச்னை என்றுகூட கூறலாம். 

நீண்ட நேரமாக ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்வது, நிமிர்ந்து நேராக உட்காராமல் கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நீண்ட நேரம் இருசக்கர வாகனம் ஓட்டுவது, முதுகுப்பகுதியில் உள்ள தசைகள், எலும்புகளில் பிரச்னை, குறிப்பாக முதுகெலும்பில் பிரச்னை, திடீரென உடற்பயிற்சி செய்வது, உடல் பருமன் என முதுகு வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. 

எனினும், உடல் பருமன் இன்றி உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் அலுவலகத்தில் பல மணி நேரங்கள் தொடர்ந்து கணினியின் முன் வேலை செய்வதாலும் முதுகு வலியை அனுபவிப்பவர் பலர். 

இதற்கெனவே சில அலுவலகங்களில் முதுகு வலி ஏற்படாத அளவுக்கு வசதியாக நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். ஏனெனில், இந்த முதுகு வலி ஏற்பட நாற்காலிகளும் ஒரு முக்கியக் காரணம்தான். 

இந்நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளனர். ஸ்மார்ட்-சென்சார் கொண்ட நாற்காலிகளைப் பயன்படுத்தினால் முதுகு வலி ஏற்படாது என்று கூறியுள்ளனர். 

தோஹோகு(Tokohu) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து, 'அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு 'கீழ் முதுகு வலி' வருவது ஒன்றும் புதிதல்ல. ஜப்பானில், ஆரோக்கியமான அலுவலகப் பணியாளர்களிலே 10ல் ஒருவருக்கு முதுகு வலி ஏற்படுகிறது. அவ்வப்போது எழுந்து நடப்பது, முதுகை நீட்டி நெளிப்பதன் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் இந்த வலியைக் குறைக்கலாம். ஆனால், வலி ஏற்படுவதற்கு முன்னதாகவே சரியாக அமர்வது, அடிக்கடி எழுந்து நடப்பது போன்ற எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வலி வந்தபின்னர் சரி செய்வது சற்று கடினம்தான்.

எனவே, ஸ்மார்ட் சென்சார்கள் கொண்ட நாற்காலிகளை பணியாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

ஸ்மார்ட் சென்சார்கள் கொண்ட நாற்காலிகளை பயன்படுத்தும்போது தவறான முறையில் நீங்கள் அமர்ந்தால் அது உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். மேலும், சரியான முறையில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது, உடலின் எந்தெந்த பகுதிகள் நாற்காலியின் எந்தெந்த பகுதிகளில் பொருந்த வேண்டும் என்றும் குறிக்கப்பட்டிருக்கும். உங்களது உயரத்துக்கு ஏற்றவாறும் சரிசெய்துகொள்ளலாம். 

இந்த ஸ்மார்ட் நாற்காலிகளை பயன்படுத்துவோருக்கு முதுகு வலி ஏற்படுவது கணிசமாக குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

'ஃபிரன்டியர்ஸ் இன் பிசியாலஜி' ஜர்னலில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதுகு வலியைப் போன்று அடுத்ததாக கழுத்து வலி, தலைவலி ஏற்படுவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதுதொடர்பான தரவுகளை சேகரிக்க உள்ளதாகவும் ஆய்வாளர் ரியோச்சி நாகடோமி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com