குழந்தை சருமப் பராமரிப்பு: இந்த 7 விஷயங்களை கவனத்தில்கொள்ளுங்கள்!
By DIN | Published On : 20th October 2022 04:39 PM | Last Updated : 20th October 2022 04:39 PM | அ+அ அ- |

குளிர் காலம் நெருங்கிவிட்டது... இந்த நேரத்தில் அனைவருக்குமே சருமப் பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகளுக்கும்தான். குளிர் அதிகம் இருக்கும்போது குழந்தைகளின் சருமம் மேலும் வறண்டு போகும். எனவே, குளிர் காலத்தில் குழ்நதைகளின் சருமத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு சருமம் வறண்டு காணப்பட்டால் ஒருவித எரிச்சல் ஏற்படும். சருமத்தில் பாதிப்பும் ஏற்படும். சரும அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம்.
குழந்தைகளின் சருமப் பாதுகாப்புக்கு...
நாம் வெளியில் செல்லும்போது மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது போல, குழந்தைகளின் சருமத்திலும் எப்போதும் ஈரப்பதம் வேண்டும். பாதாம் பால் அல்லது சாதாரண பால் கொண்டு சருமத்தை ஈரப்படுத்தலாம். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக பாடி லோஷன் எதாவது போடுங்கள். குறைந்தது தேங்காய் எண்ணெயாவது பயன்படுத்துங்கள்.
மேலும், குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்னதாக, கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உடலுக்குத் தேவையான ஒமேகா அமிலம் கிடைக்கும். பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, இ அதிகம் உள்ளது.
இதையும் படிக்க | தலைமுடி வறட்சியா? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
ரசாயனம் நிறைந்த பவுடர், கண் அழகுப் பொருள்களை குழந்தைகளுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடாது.
குழந்தைகளை குளிப்பாட்டும்போது மிகவும் சூடான நீரை பயன்படுத்தக்கூடாது. அதுபோல சோப்புகளை பயன்படுத்தாமல் கடலைமாவு, பாசிப்பயறு மாவு, பால் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு காட்டன் உடைகளையே அணிவிக்க வேண்டும். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் மற்ற உடைகள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
இப்போது டயப்பர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால், டயப்பரில் நீரை உறிஞ்சக்கூடிய ரசாயனம் அதிகம் கலந்துள்ளதால் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது சரியல்ல. முடிந்தவரை காட்டன் டயப்பரை பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு கண்டிப்பாக டயப்பரை மாற்ற வேண்டும். டயப்பர் அதிகம் பயன்படுத்துவது பிறப்புறுப்புகளில் சருமப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுபோல குழந்தைப் பருவத்தில் தேவையற்ற அணிகலன்கள் போட வேண்டாம். அதுவும் சில நேரங்களில் சரும பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்கும் 'முட்டை டயட்' பற்றி தெரியுமா?