பெண்கள்தான் புற்றுநோயால் அதிகம் இறக்கின்றனர்

நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக புற்றுநோயால் இறந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக புற்றுநோயால் இறந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. 

இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதம் ஆண்களிடையே ஆண்டுதோறும் 0.19% குறைந்துள்ள அதேநேரத்தில் பெண்களிடையே 0.25% அதிகரித்துள்ளது, மேலும் ஒட்டுமொத்தமாக(இரு பாலினமும் சேர்த்து) 0.02% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2000- 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில், 23 வகை புற்றுநோய்களால் மொத்தம் 1.2 கோடி மக்கள் இறந்துள்ளனர். இதில் கணையப் புற்றுநோயினால் ஏற்படும் இறப்பு ஆண்டுக்கு 2.7% அதிகரித்துள்ளது.(இதில் ஆண்களில் 2.1%, பெண்களில் 3.7%). 

உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனை இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. 'ஜேசிஓ குளோபல் ஆன்காலஜி' இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

2000- 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் நுரையீரல், மார்பகம், பெருங்குடல், லிம்போமா(நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்), மல்டிபிள் மைலோமா(பிளாஸ்மா செல்களில் ஏற்படும் புற்றுநோய்), பித்தப்பை, கணையம், சிறுநீரகம் மற்றும் மீசோதெலியோமா(நுரையீரல், இதயம் அல்லது அடிவயிற்றின் புறணியில் ஏற்படுவது) போன்ற புற்றுநோய்களில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், வயிறு, உணவுக்குழாய், ரத்த புற்றுநோய், தொண்டை மற்றும் தோல் புற்றுநோய்கள் இரு பாலினத்தவரிடமும் குறைந்து வருகிறது. 

மேலும் இதில் தைராய்டு மற்றும் பித்தப்பை புற்றுநோய் தவிர, மற்ற புற்றுநோய்களில் இறப்பு விகிதம் ஆண்களைவிட பெண்களில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தொண்டைப் புற்றுநோய் பெண்களைவிட ஆண்களில் இறப்பு விகிதம் 6 மடங்கு கூடுதலாக உள்ளது. நுரையீரல்(2.9), சிறுநீர்ப்பை (2.3), வாய்ப் புற்றுநோய்(2.2) மற்றும் கல்லீரல்(1.9) ஆகியவை ஆண்களை அதிகம் தாக்குகின்றன. வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களில் இறப்பு விகிதம் இரு பாலினத்தவரிடமும் சம அளவில் உள்ளது. 

பெண்களைப் பொறுத்தவரை கருப்பை வாய், கருப்பை புற்றுநோய்கள் 17.6% என்ற அளவில் பாதிப்பு உள்ளது. ஆண்களில் அதிகம் ஏற்படும் புரோஸ்டேட் மற்றும் ஆண் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் 3.7% ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com