டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

டெங்கு வைரஸ் ஏற்படாமல் தடுக்கவும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடவும் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

ஏடிஸ் கொசுவினால் ஏற்படும் டெங்கு வைரஸால் காய்ச்சல், தலைவலி, சோர்வு, குமட்டல், வாந்தி, தசை வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இது பிளேட்லெட்டுகள் எனும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். 

நம் உடலில் 1.5 லட்சம் அல்லது 4 லட்சம் பிளேட்லெட் எண்ணிக்கை டெங்கு காய்ச்சலின்போது, 20,000 - 40,000 ஆகக் குறையும். இதனை சரிசெய்ய இரும்புச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி 12 சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

பப்பாளி இலைகள், மூலிகைகள், மாதுளை, தேங்காய் தண்ணீர், மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் டெங்கு பாதிப்பு ஏற்படுவதையும் தொற்றினால் ஏற்படும் விளைவுகளையும் குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

நீர்ச்சத்து

டெங்கு காய்ச்சலின்போது காய்ச்சல், வியர்வை, வாந்தி இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, காய்ச்சிய நீரை அதிகம் பருக வேண்டும் மேலும் பழச்சாறு உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சூப், எலுமிச்சை நீர், தேங்காய் தண்ணீர், இளநீர், கூழ், கஞ்சி சாப்பிடலாம். இது விரைவாக குணமடைய உதவும். 

ஊட்டச்சத்து உணவுகள்

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும். பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், வைட்டமின் கே நிறைந்த கீரைகள் அதிகம் சாப்பிடுவது டெங்கு ஏற்படாமல் தடுக்கவும் டெங்குவில் இருந்து குணமாகவும் உதவும். 

புரதச்சத்து 

கோழி, மீன், முட்டை, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்களை வழங்குகின்றன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சாலமன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆளிவிதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள். இவை அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளன. 

இரும்புச்சத்து

வைரஸ் தாக்குதலில் இருந்து தடுக்கவும் நோயை எதிர்த்துப் போரிடவும் இரும்புச்சத்து அவசியம். இறைச்சி, பீன்ஸ், பருப்பு, கீரை உள்ளிட்டவை உணவில் இடம்பெற வேண்டும்.  

மஞ்சள்

மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அனைத்து வகையான உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். பாலுடன் மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 

பப்பாளி 

டெங்குவில் இருந்து காக்கவும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்யவும் உதவும் முக்கியப் பொருள் பப்பாளி. பப்பாளி இலைச்சாறு டெங்குவில் இருந்து விரைவாக குணமடைய உதவுகிறது. மேலும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அந்த வகையில் வைட்டமின் சி நிறைந்த பப்பாளியும் சாப்பிடலாம். பப்பாளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, காயங்களை குணப்படுத்த உதவுகிறது, செரிமானத்தைத் தூண்டுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது.

மாதுளை, கொய்யா, கிவி உள்ளிட்ட பழங்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் 

பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள், பொருந்தா மற்றும் துரித உணவுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இல்லை. மாறாக இவை உடல் செயல்பாட்டைக் குறைக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com