
கோடைக்காலத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது அல்லவா? பொதுவாகக் கோடைக்காலமான மார்ச் முதல் ஜூன் வரையிலான காலங்களில் வெயில் போதும்போதும் என்றளவுக்கு சுட்டெரிக்கும். அதிலும், அக்னி நட்சத்திர காலங்களில் சொல்லவே தேவையில்லை... நம்மை பாடாய்ப் படுத்திவிடும்.
சரி, கோடை வெயிலை எப்படிச் சமாளிக்கலாம், அதற்கான எளிய வழிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
* வெயிலைச் சமாளிக்க முதலில் சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் முக்கியம். உடலுக்கு பிரச்னையில்லாத, காற்றோட்டமான தளர்வான ஆடைகளை அணியலாம்.
* கோடை வெயில் அதிகரிக்கும்போது உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், உடலில் அதிக நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உலர்ந்த உதடுகள், நாக்கு வறட்சி, தலைவலி, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இதனைத் தடுக்க தண்ணீர் அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம், அதைத் தவிர மோர் போன்ற குளிர்ச்சியான பாணங்களை உட்கொள்ளலாம்.
* கோடைக் காலத்தில் சிறுநீரக கல் உள்ளிட்ட ஏராளமான உடல்நல பாதிப்புகளைப் போக்க வாரம் 2 அல்லது 3 இளநீர் கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம்.
* வெயில் காலத்தில் நிறைய ஐஸ்கட்டிகள் தேவைப்படும். ஃப்ரிட்ஜில் உள்ள டிரேயில் வைத்தால் போதாது. சிறுசிறு பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் ஊற்றி டைட்டாக ரப்பர் பேண்ட் போட்டு செங்குத்தாக நிறுத்தி வைத்தால், தண்ணீர் உறைந்தவுடன் அப்படியே பிளாஸ்டிக் பையுடன் எடுக்க சுலபமாக இருக்கும்.
* கோடையில் அதிகப்படியான கார உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
* முதல்நாள் இரவே கசகசாவை ஊறவைத்து, மறுநாள் தேங்காய்ப்பாலை விட்டு மைய அரைத்து பேஸ்ட்டாக்கி உடலில் தடவிக் குளித்தால் வியர்க்குரு, அரிப்பு இரண்டும் குறையும்.
* குளிக்கும் நீரில் படிகாரத்தைப் போட்டுக் குளித்தாலும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
* மொட்டை மாடி முழுவதும் சணல் கோணிப்பைகளைப் போட்டு அதன்மேல் தண்ணீரை ஊற்றினால் மதிய நேர வெப்பத்தில் இருந்து சற்று தப்பிக்கலாம். அதேபோன்று மாலை 4 மணிக்கு மேல் கோணியை நனைத்துவிட்டால் இரவு வீடு குளு குளுவென்று இருக்கும்.
* வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வேணல் கட்டிகள், வேர்க்குரு வந்துவிடும். இதற்கு சந்தனத்தை சிறிது பன்னீரில் கலந்து பூசலாம். எரிச்சல், அரிப்பு அடங்கும். இளநுங்கின் உள்ளே இருக்கும் நீரை எடுத்துப் பூசலாம். குழந்தைகள் வெயில் நேரத்தில் வெளியில் அதிகம் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
* பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதினால் உடல் சூட்டைக் குறைக்கலாம்.
* நீர்ச்சத்துள்ள காய்கறிகளான கீரைகள், வெள்ளரி, ப்ரக்கோலி, பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். எலுமிச்சை, புதினா, தேன் போன்ற உணவுகள் உடலின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கும்.
* வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
இந்தமாதிரியான சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினாலே வெயிலை ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.