ரிஷிதா கன்னா
குரங்கு அம்மையும் பெரியம்மையும் ஒன்றா? குரங்கு அம்மை தொற்றக்கூடியதா? நீச்சல் குளங்களில் இது அதிகம் பரவுகிறதா?
குரங்கு அம்மை குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் பெங்களூரு ஆஸ்டெர் சிஎம்ஐ மருத்துவமனையின் தொற்று நோயியலாளர் டாக்டர் சுவாதி ராஜகோபால்.
நீச்சல் குளங்கள்தான் குரங்கு அம்மை பரவலுக்கு மூலக் காரணமா?
நீச்சலில் ஈடுபடுவதால் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படாது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்போது, குறிப்பாக அவர் பயன்படுத்திய துணிகள், நீச்சல் உடை உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தும்போது பரவ வாய்ப்புள்ளது.
குரங்கு அம்மை உடலுறவின் மூலமாகப் பரவுமா?
ஆம், குரங்கு அம்மை உடலுறவின் மூலமாகப் பரவும். அதனால் மட்டும் என்றும் அர்த்தமல்ல. பாதிக்கப்பட்டவருடன் அருகாமையில் இருக்கும்போதும் பரவலாம்.
உயிருக்கு ஆபத்தா?
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சிலருக்கு லேசான அறிகுறிகள் தென்படலாம். குரங்கு அம்மையால் உயிரிழப்பு ஏற்படுவது குறைவுதான்.
குரங்கு அம்மை தடுப்பூசி புதிதாக உருவாக்கப்பட்டதா?
குரங்கு அம்மை தடுப்பூசி ஏற்கெனவே உள்ளது. வைரஸ் பாதிப்பு மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
தொற்றும் தன்மை கொண்டதா?
கரோனா வைரஸைவிட குரங்கு அம்மை தொற்றும் விகிதம் குறைவு. பாதிக்கப்பட்டவரின் புண்கள், சுவாச நீர்த்துளிகள், அவர் பயன்படுத்திய பொருள்களின் மூலமாகப் பரவலாம். ஆனால், வேகமாக பரவும் வாய்ப்பு குறைவு.
பெரியம்மையும் குரங்கு அம்மையும் ஒன்றா?
இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஆனால், அதன் பாதிப்பு மற்றும் தொற்றும் தன்மை மாறுபடும். குரங்கு அம்மை பாதிப்புகள் குறைவு, தொற்றும் தன்மையும் குறைவு. பெரியம்மையைவிட உயிரிழப்பும் குறைவு.
தமிழில்: எம். முத்துமாரி