இப்படியும் நடக்கும்...

முத்து, பவளம், மாணிக்கம், வைரம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம், நீலம் இவை நவரத்தினங்கள் என்றேன்.
இப்படியும் நடக்கும்...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 12

ஒருமுறை கே.ஏ. கிருஷ்ணசாமி நடத்திய "தென்னகம்' பத்திரிகைக்குச் சென்றிருந்தேன். அவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்போது  அ.தி.மு.க கட்சிப் பத்திரிகையாகத் "தென்னகம்' தான் இருந்தது. 

கே. ஏ. கிருஷ்ணசாமியை சுருக்கமாக கே.ஏ.கே. என்றுதான் சொல்வோம். எப்படி ஆர்.எம்.வீரப்பனை ஆர்.எம்.வீ. என்று சுருக்கமாகச் சொல்கிறோமோ அதுபோல.

எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கியபோது, இன்றுமுதல் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர். அவரைப் "புரட்சித்தலைவர்' என்றுதான் இனி நாம் அழைக்கவேண்டும் என்றார். அவருக்குப் புரட்சித் தலைவர் என்ற அடைமொழி வந்தது இவரால்தான். அதனால்தான் கே.ஏ.கே. பற்றிக் குறிப்பிட்டேன்.

அந்தப் பத்திரிகைக்கு நான் சென்றிருந்தபோது ஏ.பி. நாகராஜன் கம்பெனியில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏ.பி. நாகராஜனின் அசோசியேட் டைரக்டர் சம்பத்குமார் பேசினார்.

"சின்னவரை வைத்து ஒருபடம் பண்ணுகிறோம். படத்திற்கு "நவரத்தினம்' என்று பெயர். சின்னவர் உங்களை வைத்துப் பாடல்கள் எழுதச் சொல்லியிருக்கிறார். கார் அனுப்பட்டுமா? இல்லை கம்பெனிக்கு நீங்களே வருகிறீர்களா?' என்றார். நானே வருகிறேன் என்று சென்றேன். எம்.ஜி.ஆரை சின்னவர் என்று சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அழைப்பது வழக்கம்.

"லதாவும், சின்னவரும் பாடுவது போல ஒரு காதல் பாடல் எழுதவேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்கிறார். இங்கேயே இருந்து எழுதுங்கள்' என்றார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன். அவரையும் சினிமா உலகில் மரியாதையாக ஏ.பி.என் என்றுதான் அழைப்பார்கள். உடனே நான் ஒரு பல்லவி எழுதினேன்.
கம்பன் பாடாத புதுப்பாட்டு - உன்
கண்கள் பாடுது எனைப் பார்த்து 
கரும்பு வில்லில் கணை தொடுத்து - நீ
காமன் விழாவுக்குக் கொடியேற்று...
இதற்கு குன்னக்குடி அமைத்த இசை அவ்வளவு ஈர்ப்பு இல்லாமல் இருந்தது. உடனே ஏ.பி.என், "படத்திற்குப் பெயர் நவரத்தினம். அதனால் நவரத்தினங்களின் சிறப்பை வைத்து காதல் பாடல் எழுதினால் எப்படியிருக்கும்?' என்றார். நன்றாகத்தான் இருக்கும் அது புதுமையாகவும் இருக்கும் என்றேன்.

"நவரத்தினங்கள் என்னென்ன சொல்லுங்கள். அதைவைத்து எப்படி எழுதுவீர்கள்?' என்றார்.

முத்து, பவளம், மாணிக்கம், வைரம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம், நீலம் இவை நவரத்தினங்கள் என்றேன்.

சிரிப்புக்கு முத்து, விரல் நகத்திற்குப் பவளம், மாணிக்கத்தை உடல் நிறத்திற்கும், வைரம் உறுதியானது என்பதால் நம் காதல் உறுதியானது என்றும் மரகதம் பச்சை நிறமாக இருப்பதால் நம் காதல் என்றும் மாறாமல் பசுமையாக இருக்கும் என்றும், நீலமணியைக் கண்களுக்கும், கருநீலம் என்று கூந்தலுக்கும் சொல்லலாம் என்று ஒவ்வொரு மணியின் சிறப்பைக் கூறினேன்.

உடனே அவர் முகம் மலர்ந்து, "இவையெல்லாம் வரும்படி எழுதுவதற்கு ஏற்ற வகையில் ஒரு பல்லவி எழுதுங்கள் பார்க்கலாம்' என்றார். நவரத்தினம் என்று படத்தின் பெயர் இருப்பதால் இப்படிப் பல்லவி ஆரம்பிக்கலாம் என்று எழுதிக் காட்டினேன்...

ரத்தினம் - நவ
ரத்தினம் - உன்
மேனியெங்கும் மின்னுதே நவரத்தினம்
இத்தினம் - ஒரு
சுபதினம் - இந்த
இன்ப நாளில் பாடுவோம் காதல் மந்திரம்...
இது எப்படி இருக்கிறது என்றேன். "எப்படி இருக்கிறதா? நான் என்ன நினைத்தேனோ... அதை அப்படியே எழுதிவிட்டீர்கள். பிரமாதம்' என்றார். அதன்பிறகு சரணமும் எழுதி டியூன்போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். நன்றாக இருக்கிறது என்றார்.

இரண்டு நாள்கழித்து ஏ.பி. என் கம்பெனிக்கு என்னை அழைத்தார்கள். சென்றேன். "நீங்கள் எழுதிய காதல் பாடலைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது வேறொரு காட்சிக்குப் பாடல் எழுதவேண்டும்' என்று சொல்லிக் காட்சியை விளக்கினார்:
"குடிகாரர்கள் நிறைந்திருக்கும் பகுதியில் தனியே ஒரு பெண் சென்றால் என்னாகும்? எப்படிப்பட்ட நிலையிலும் கோபப்பட்டு, வீட்டைவிட்டு ஒரு பெண் நள்ளிரவில் வெளிவரக் கூடாது. வந்தால் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் பாடல் எழுதவேண்டும்' என்றார்.

அவரே ஒரு குறிப்பும் கொடுத்தார், "மான்கள் ஓடிவரலாம், மயில்கள் ஓடிவரலாம். மங்கைப் பருவமுள்ள பெண் இரவில் வீட்டைவிட்டு ஓடிவரக் கூடாது என்பது போல் பல்லவி எழுதுங்கள்' என்றார். நீங்கள் சொன்னதே நன்றாக இருக்கிறது. அதையே ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாம் என்று...
மானும் ஓடி வரலாம்
மா நதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா - தன்
மானம் மறந்து ஓடி வரலாமா..?
என்று வாயால் சொல்லிக் காட்டினேன். 
"இதுவே நன்றாக இருக்கிறது. எழுதுங்கள். சரணத்திற்கு டியூன்போட்டு எழுதிக் கொள்ளலாம்' என்றார்.
நல்ல - பாதையில் எங்குமே போய் வரலாம் 
குடி - போதையில் நடுவே வரலாமா? 
பொறுமையை ஒருகணம் விட்டுவிடலாம் - உயர்
பெண்மையின் தன்மையை விடலாமா?
என்று ஒரு சரணமும் அதுபோல் மேலும் இரண்டு சரணமும் எழுதினேன். எம்.ஜி.ஆர். ஒப்புதலுடன் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அது படமும் ஆக்கப்பட்டது.

ஒரு பெண்ணைத் திருத்த எம்.ஜி.ஆர் குடித்துவிட்டுப் பாடுவதைப்போல இந்தக் காட்சி இருந்ததால் இது எம்.ஜி.ஆர் இமேஜைப் பாதிக்கும் என்று பலர் சொன்னதால் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். "அந்தப் பாடல்தான் நன்றாக இருக்கிறது. அதை ஏன் நீக்கினீர்கள்?' என்று விநியோகஸ்தர்கள் கேட்க படம் வெளிவந்த இரண்டாவது வாரத்தில் இப்பாடல் காட்சி மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனாலும் படம் ஓடவில்லை. அந்தப் பாடலை மீண்டும் வெட்டிவிட்டனர். டூயட் பாடல் ஒன்று இதற்குமுன் எழுதினேனே அந்தப் பாடல் ஒலிப்பதிவே செய்யப்படவில்லை.

"மானும் ஓடிவரலாம் பாடல்' இசைத் தட்டில் இருக்கிறது. படத்தில் சேர்க்கப்படாததால் என் பெயர் படத்தின் டைட்டிலில் இடம் பெறவே இல்லை. ஆனால் இசைத்தட்டில் இடம் பெற்றது எம்.ஜி.ஆர். படங்களில் இப்படியும் நடந்திருக்கிறது.

அதுபோல் ஆஸ்கார் மூவிஸ் சார்பில் எம். பாஸ்கர் தயாரித்து இயக்கிய "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல் அதில் இடம்பெறவில்லை. ஆனாலும் டைட்டிலில் என் பெயர் இடம் பெற்றது. 

அந்தப் பாடல் அதே கம்பெனி தயாரித்த "பெளர்ணமி அலைகள்' என்ற படத்தில் இடம் பெற்றது. சங்கர்கணேஷ் இசையில் வெளிவந்த அந்தப் பாடல்... தேன்பாயும் வேளை - செவ்வான மாலை...  என்று தொடங்கும்.

இப்படித்தான் "கூண்டுக்கிளி' என்ற படத்திற்கு விந்தன் எழுதிய பாடல் அதில் இடம் பெறாமல் "குலேபகாவலி' என்ற படத்தில் இடம் பெற்றது. அந்தப் பாடல்தான் மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ... என்ற பாடல். இதை இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி ஒரு விழாவில் குறிப்பிட்ட போதுதான் எல்லாருக்கும் இச்செய்தி தெரிந்தது.

"நவரத்தினம்' படத்திற்கு எழுதிய பாடல்களைப் பற்றி இதுவரை எந்தப் பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் இதுவரை நான் குறிப்பிட்டதில்லை. தினமணியில்தான் முதன் முதலில் குறிப்பிடுகிறேன்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com