பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...

அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன். காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரிவேலன் ஆகியோர் இருந்தனர்.
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-10

அச்சமயம்... ஏ.எல். நாராயணன்  தான் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த "படித்த பெண்' என்ற படத்தில் பட்டுக்கோட்டையின் இன்னொரு பாடலையும் சேர்க்க நினைத்தார். அதற்குக் காரணம் அதில் இருந்த "தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்ற வரிகள்தான்.

ஏதோ ஒரு காரணத்தால் இந்தப் பாடல் அதில் சேர்க்கப்படாமல் வேறொரு படத்தில் இடம் பெற்றது. அதற்கும் ஏ.எல். நாராயணன்தான் காரணம். அதைத் தொடர்ந்து பல படக் கம்பெனிகளுக்கு பட்டுக்கோட்டையை ஏ.எல்.என். அழைத்துச் சென்று பாடல் எழுத வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். பட்டுக்கோட்டையைப் பற்றி பல செய்திகளை ஏ.எல். நாராயணன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பட்டுக்கோட்டை பாடல் எழுதும்போது தீப்பெட்டியை வைத்துத் தட்டிக் கொண்டே அதன் தாளத்திற்கேற்ப எழுதுவாராம்.
"மகேஸ்வரி' படத்திற்கு, தான் எழுதிய பாடலொன்றை இசையமைப்பாளர் ஜி. ராமநாதனிடம் தீப்பெட்டியைத் தட்டிக் கொண்டே பட்டுக்கோட்டை பாடிக் காட்டியபோது "என்ன நாராயணா கொலைச் சிந்து பாடுகிறவனையெல்லாம் பாட்டெழுதக் கூட்டி வந்துவிட்டாய்?' என்று ஜி. ராமநாதன் கோபமும் கிண்டலும் தொனிக்கக் கேட்டாராம்.

அப்படிக் கேட்ட ஜி.ராமநாதன்தான் பட்டுக்கோட்டை எப்போது வருவார். பாடல் எழுதி வாங்குவதற்கு என்று காத்திருந்தார்.  அதுதான் காலம். அல்லது விதி. அப்படி அவரிடம் அவர் காத்திருந்து எழுதி வாங்கிய பாடல்தான்,
சங்கத்துப் புலவர் முதல் தங்கத் தோடா பொற்பதக்கம் 
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார் 
எனக் - கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்-என்ற  பாடல்.
இப்பாடல் இடம் பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்'. பாடியவர்கள் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். 
பின்னால் வரக் கூடிய சில கட்டுரைகளில் பட்டுக்கோட்டை பற்றியும் அவர் பாடல்கள் பற்றியும் சொல்ல இருப்பதால் இந்தச் செய்தியை முன்னோட்டமாக வாசகர்கள் எடுத்துக் 
கொள்ளலாம்.
 * * *
எம்.ஜி.ஆர். படத்திற்கு இரண்டாவதாக நான் எழுதிய படம் "ஊருக்கு உழைப்பவன்.' இது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தபடம். இது பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த "உத்தம புத்திரன்' படம் இந்தக் கம்பெனி தயாரித்ததுதான்.

பெரிய கம்பெனி தயாரிக்கின்ற படம். அதனால் நன்றாக எழுது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறினார். கூறியதோடு மட்டுமல்ல அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் பணம் கொடுத்தார். அப்போது அவர் பக்கத்தில் வித்வான் லட்சுமணன், சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். இன்னொருவரும் இருந்தார். அவர் யாரென்று நினைவில் இல்லை.

பாடல் எழுதி ஒலிப்பதிவானவுடன் அந்தக் கம்பெனியில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். ஏற்கெனவே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே... நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி எம்.ஜி.ஆர் கொடுத்தாரே என்றேன். நாங்கள் கொடுக்கவில்லையே என்றார்கள்.

அதன்பிறகுதான், எம்.ஜி.ஆர். கொடுத்தால் நான் வாங்க மறுத்துவிடுவேன் என்பதால் கம்பெனிக்காரர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லி அவர் தன் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எத்தகைய மாமனிதர் அவர் என்பதை நினைத்து மலைத்துப் போய்விட்டேன். இன்றைக்கு நடிகர்களில் யாரேனும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குக் கணவராக நடிப்பார் எம்.ஜி.ஆர். கதைப்படி ஒரு பெண்ணுக்குத்தான் அவர் உண்மையான கணவர். இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த தன் சொந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதை எடுத்து அடக்கம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவனாக நடிக்கிறாரே... அந்தப் பெண் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருகிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடை
பெறுகிறது.

குழந்தையை வாழ்த்திப் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தன் சொந்தக் குழந்தை இறந்துவிட்டதே அதை நினைத்துப் பாடுவாரா? இந்தக் குழந்தைக்கு வாழ்த்துப் பாடுவாரா? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பாடல் வருகிறது. இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாகப் பாடவேண்டும்.

எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது" என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.

வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக் ரோட்டில் இருந்தது. விசுவநாதன் அண்ணன் டியூன் போட நான் பாடல் எழுதினேன்.
நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது
நினைக்கும்போது பாசமென்னும் அலையடிக்குது
என் - கண்ணுக்குள்ளே குழந்தையென்னும்
மலர் சிரிக்கின்றது
என் - கவிதைக்குள்ளே மழலை ஒன்று
குரல் கொடுக்கின்றது
எது - நடக்கும் எது நடக்காது
இது - எவருக்கும் தெரியாது
எது - கிடைக்கும் எது கிடைக்காது
இது - இறைவனுக்கும் புரியாது'
இதுதான் நான் எழுதிய பல்லவி.
அங்கிருந்த எல்லாருக்கும் இந்தப் பல்லவி பிடித்துவிட்டது. அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் பல்லவி பிரமாதம் என்று பாராட்டினார். விசுவநாதன் அண்ணனும் நன்றாக இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார்.

என்றாலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு குறைந்தது மூன்று பல்லவியாவது எழுதவேண்டுமல்லவா. ஆனால் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத்தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன். நான் எழுதுகின்ற பல்லவிக்கு டியூன் போடுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன். தெற்கு போக் ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்.

அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன். காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரிவேலன் ஆகியோர் இருந்தனர்.

இந்த வாரம் "தென்னகம்' பத்திரிகையில் நீங்கள் எழுதிய "பிள்ளைத்தமிழ்' மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார்.

எம்.ஜி.ஆரைப் பற்றி எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். உலா, எம்.ஜி.ஆர் அந்தாதி ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.

ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து "பிள்ளைத்தமிழ்' இலக்கியம் எழுதுகிறோம். எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது.

வேகமாகச் சென்று அண்ணன் விசுவநாதனிடம் எழுதிக்காட்டினேன். நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் நீயே ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார்.

வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்துவிட்டார். அந்தப் பாடல் இதுதான்,
"பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக் காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக் காகப் பாடுகிறேன்        - இது பல்லவி
நீலக்கடல் அலைபோல
நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே
நீராடி நீ வாழ்க
காஞ்சிமன்னன் புகழ்போலே
காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென
கண்மணியே நீ வாழ்க"
என்று முதல் சரணமும்,  இதுபோல் இன்னொரு சரணமும் எழுதிவிட்டேன்.
இன்னொரு பல்லவியும் எழுதிவிடு. அதற்கும் மெட்டுப் போடுவோம் என்றார் 
எம்.எஸ்.வி.
தேவ லோக வாசலிலே - ஒரு
தெய்வக் குழந்தை நிற்கிறது
பூவில் வாழும் தேவதைகள் - பசும் 
பொன்போல் வாழ்த்துச் சொல்கிறது'
என்று எழுதினேன்.
அதற்கும் மெட்டுப் போட்டவுடன் மறுநாள் சத்யா ஸ்டுடியோவில் "நவரத்தினம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பித்தோம். அப்போது ஏ.பி. நாகராஜன், நடிகை லதா, ப. நீலகண்டன் ஆகியோர் இருந்தனர்.

பாடலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்தக் காட்சிக்கு "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது" - என்ற பல்லவி பொருத்தமாக இருக்கிறது என்றார். இயக்குநர் ப. நீலகண்டன் "தேவலோக வாசலிலே' என்ற பல்லவி இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்றார்.

பாடலைப் போடுவதற்கு முன்பு இந்தப் பாடல் எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதை அவர்களிடம் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டுத்தான் பாடலைப் போட்டுக் காண்பித்தார். அதனால் அவர்கள் அந்தக் கருத்தைச் சொன்னார்கள்.

நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் "பிள்ளைத் தமிழ்பாடுகிறேன்" என்ற பல்லவிதான் பாப்புலராகும். ஆகவே இதையே வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.

அவர் சொன்னதுபோல் இந்தப்பாடல்தான் அதில் பிரபலமானது. அவரைப் போல பாடலைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது. சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த ஒரே நடிகர் அன்றைக்கு அவர்தான்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com