பட்டுக்கோட்டையாரின் "பல்லவி'க்கு மரியாதை!

விசுவநாதன் - ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை எழுதிய முதற்பாடல் "பாசவலை' படத்தில்தான் இடம் பெற்றது. அந்தப் படத்திற்கு
பட்டுக்கோட்டையாரின் "பல்லவி'க்கு மரியாதை!

ஆனந்தத்  தேன்காற்று தாலாட்டுதே! - 9

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைப் பற்றி எம்.எஸ். விசுவநாதன் சொன்னதை பிறகு சொல்கிறேன் என்று  எழுதியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

விசுவநாதன் - ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை எழுதிய முதற்பாடல் "பாசவலை' படத்தில்தான் இடம் பெற்றது. அந்தப் படத்திற்கு இசையமைக்க சேலம் மாடர்ன் தியேட்டர்ஸýக்கு எம்.எஸ்.வி. வந்திருக்கிறார்.

அவரிடம் "பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற பையன் நன்றாகப் பாடல் எழுதுகிறான். அவன் ஒரு பாட்டை எழுதி வைத்திருக்கிறான். நீங்கள் பாருங்கள் உங்களுக்குப் பிடித்தால் அவனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்'- என்று மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளராக இருந்த சுலைமான் என்பவர் கேட்டுக் கொண்டார்.

புது ஆட்களுக்கெல்லாம் இப்போது வாய்ப்புக் கொடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. மெட்டுக்குப் பாட்டெழுதி அனுபவப்பட்ட மருதகாசி போன்றவர்களுக்குக் கொடுத்தால்தான் வேலை சுலபமாக முடியும். அதனால் அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பையனைப் போகச் சொல்லுங்கள் என்று எம்.எஸ்.வி. கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். 

சரி போகச் சொல்கிறேன் இருந்தாலும் இந்தப் பாட்டை ஒருமுறை நீங்கள் பாருங்கள் என்று சுலைமான், பட்டுக்கோட்டையின் பாடலைக் காட்டியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்து எம்.எஸ்.வி. ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துவிட்டாராம். 

இப்படியெல்லாம் கருத்துள்ள பாடல்களை எழுதக் கூடிய கவிஞர்கள் இருக்கிறார்களா? என்று வியப்படைந்த எம்.எஸ்.வி. தன் தலையில் தானே அடித்துக்கொண்டு நல்ல பாடலையும் நல்ல கவிஞனையும் இழக்க இருந்தோமே... என்று வருத்தப்பட்டு கல்யாண சுந்தரத்தை அழைத்துப் பாராட்டி அவர் எழுதிய பாடலுக்கு இசையமைத்தாராம்.

அப்படி அவர் இசையமைத்த அந்தப் பாடல்தான்,
"குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்'
என்ற பாடல். முதன்முதல் பட்டுக்கோட்டைக்குப் பிரபலம் தந்த பாடலும் இதுதான். அதன்பிறகு அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்தவரும் எம்.எஸ்.வி.தான்.

அதில் ஒரு பாடலுக்கான காட்சியைச் சொல்ல எம்.எஸ்.வி.யையும், பட்டுக்கோட்டையையும் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் தன்னுடைய அறைக்கு அழைத்தாராம். அவர் அறையில் சுந்தரம் உட்கார்வதற்கு மட்டும்தான் நாற்காலி இருக்குமாம். வேறு நாற்காலி இருக்காதாம். அதே நேரத்தில் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் வருவதாக இருந்தால் முன்கூட்டியே இன்னொரு நாற்காலி போட்டிருப்பார்களாம். அவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தனக்குமுன் அமர்ந்தால் அது மரியாதைக் குறைவென்று டி.ஆர்.எஸ். கருதியிருப்பாரோ என்னவோ தெரியாது. டி.ஆர். சுந்தரத்தை, டி.ஆர்.எஸ் என்றுதான் சுருக்கமாக மரியாதையாக மற்றவர்கள் அழைப்பார்கள்.

கால் மணிநேரம் விசுவநாதனையும், பட்டுக்கோட்டையையும் நிற்கவைத்தே பாடல் எழுதுவதற்கான காட்சியை விளக்கியிருக்கிறார் டி.ஆர்.எஸ். உடனே ஒரு தாளை எடுத்து "நீங்கள் சொன்ன காட்சிக்கு இந்தப் பல்லவி பொருத்தமாக இருக்குமா பாருங்கள்' என்று ஒன்றை எழுதிக் காட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. உடனே அழைப்பு மணியை அடித்து இரண்டு இருக்கைகள் கொண்டுவந்து போடச் சொல்லி அவர்களை அமரச் சொன்னாராம் டி.ஆர்.எஸ்.

அறையை விட்டு வெளியே வந்ததும் "என்னய்யா மற்றவர்கள் எழுதாத பல்லவியை நீ எழுதிவிட்டாய். பல்லவியைப் பார்த்ததும் நாற்காலி நமக்குப் போடச் சொன்னாரே. இங்கே ஆஸ்தான கவிஞராக இருக்கக்கூடிய மருதகாசிக்குக் கூட இந்த அளவு மரியாதை கொடுத்ததில்லையே...  அது என்ன பல்லவி?' என்று எம்.எஸ்.வி. கேட்டிருக்கிறார்.
"வேறொன்றும் இல்லை அண்ணா. 

நீண்டநேரமாக நம்மை நிற்கவைத்தும் அவர் அமர்ந்து கொண்டும் பேசினாரல்லவா அது எனக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அதனால், மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள் - மனிதரை மனிதராய் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' - என்று எழுதிக் காட்டினேன் என்று சொல்லியிருக்கிறார் பட்டுக்கோட்டை.

"அடப்பாவி சினிமா உலகில் முரடன் என்று பெயர் பெற்ற சகலகலாவல்லவரான பி.யு. சின்னப்பாவையே சாட்டையால் அடித்தவராயிற்றே டி.ஆர்.சுந்தரம்.

உன்னைப் போன்றவர்களை ஏன் கூட்டி வந்தாய் என்று என்னைப் போட்டு அடித்தால் நான் என்னய்யா செய்வது? அவ்வளவுதான். இனி மாடர்ன் தியேட்டர்ஸில் நமக்கு இடமில்லை'யென்று பட்டுக்கோட்டையிடம் கோபத்துடனும், வருத்தத்துடனும் சொல்லிக் கொண்டிருந்தாராம் எம்.எஸ்.வி.

இப்படி ஏதாவது இவர்கள் நினைப்பார்கள் என்று எண்ணிய டி.ஆர்.எஸ். அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து பட்டுக்கோட்டையின் துணிச்சலைப் பாராட்டினாராம். எம்.எஸ்.வி. சொன்ன இந்தச் செய்தியை முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் "சினிமா எக்ஸ்பிரஸ்'பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதன்பிறகு தான் இந்தச் செய்தியே பலருக்குத் தெரியும்.

அதற்குப்பிறகு எழுத வந்தவர்களெல்லாம் அவர்களே நேரில் இருந்து பார்த்ததைப் போல அந்த நிகழ்ச்சியை எழுதத் தொடங்கிவிட்டார்கள். முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்தோம் என்று யாரும் சொன்னதில்லை. "வாமனன்' என்ற எழுத்தாளரைத் தவிர.

கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் விவசாயிகள் மாநாட்டுக்காக  "கண்ணின் மணிகள்' என்ற  நாடகம் கோவையில் அந்நாளில் நடைபெற்றது. அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் இடம் பெற்றன.

அந்தப் பாடலைப் பற்றியும் அவரைப் பற்றியும் மறைந்த நடிகர் ஓ.ஏ.கே. தேவரும், நகைச்சுவை வசனம் எழுதுவதில் கைதேர்ந்த ஏ. வீரப்பனும், ஏ.எல். நாராயணனிடம் பாராட்டிப் பேசி இவர்தான் அந்தக் கவிஞர் என்று கல்யாணசுந்தரத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

அப்போது ஏ.எல். நாராயணன் "படித்த பெண்' என்ற படத்திற்குக் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நாடகத்திற்காக எழுதிய, பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்றை இடம் பெறச் செய்து அவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com