திரையுலகம் உணர வேண்டும்!

முதன்முதலில் இந்தியாவில் பேசும்படம் உருவானது 1931-ஆம் ஆண்டு. முதன்முதல் வெளிவந்த பேசும்படம் "ஆலம் ஆரா' என்ற இந்திப் படம்தான்.
திரையுலகம் உணர வேண்டும்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 13

திரைப்பாடல்களைப் பற்றித் தொடர்ந்து சொல்வதற்கு முன் திரைப்படங்களைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லிவிட்டு அதன்பிறகு தொடர்கிறேன். உலகில் இரண்டு துறைகள் வலுவான துறைகள். ஒன்று அரசியல். மற்றொன்று திரைத்துறை. அரசியலில் இறங்குவதற்கு இன்று திரைத்துறைதான் முன்வாசலாக இருக்கிறது. திரைப்படங்கள் மூலம் எதையும் சொன்னால் அது மக்கள் மத்தியில் எளிதாகப் பரவும். மக்கள் மனத்திலும் எளிதாகப் பதியும். அதனால் நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன. தீமைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைகளைப் பரப்ப திரைப்படத்தை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மற்றவர்கள் அதை அலட்சியப்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தோல்வி பெற்றார்கள்.

இந்தியாவில் முதல் மெüனப்படம் 1913-இல் பம்பாயிலிருந்து வெளிவந்தது. படத்தின் பெயர் "ராஜா ஹரிச்சந்திரா'. இப்படத்தை தாதா சாகிப் பால்கே தயாரித்து இயக்கினார். இவர் பெயரில்தான் "தாதா சாகிப் பால்கே' விருதை மத்திய அரசு வழங்குகிறது.

1916-இல் சென்னையில் "கீசக வதம்' எனும் மெüனப் படம் வெளிவந்தது. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். இப்படத்தை ஆர். நடராஜ முதலியார் என்பவர் தயாரித்தார். சென்னையிலிருந்து 1916 முதல் 1932 வரை 108 மெளனப்படங்கள் வெளிவந்தன.

முதன்முதலில் இந்தியாவில் பேசும்படம் உருவானது 1931-ஆம் ஆண்டு. முதன்முதல் வெளிவந்த பேசும்படம் "ஆலம் ஆரா' என்ற இந்திப் படம்தான்.

இதைத் தயாரித்து வெளியிட்டவர் இரானி என்ற பம்பாய்க்காரர். அதே 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழில் வெளிவந்த பேசும்படம் "காளிதாஸ்'.
இதில் கதாநாயகியாக நடித்த டி.பி. ராஜலட்சுமி தமிழில் பேசுவார். கதாநாயகனாக நடித்த நரசிம்மராவ் தெலுங்கில் பேசுவார். மற்றவர்கள் தங்கள் தாய்மொழியான கன்னடத்திலும், இந்தியிலும் பேசுவார்கள். இது பன்மொழி பேசும் படமாக அமைந்தது.

இதில் தமிழ்ப் பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ். இவர்தான் தமிழ்த் திரைப்படத்திற்கு முதன்முதல் பாடல் எழுதிய பாடலாசிரியர். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உறவினர். இவருடைய இயற்பெயர் வெள்ளைச்சாமித் தேவர். பாஸ்கரதாஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் பாடல்கள் மதுரமாக இருக்கும் என்ற காரணத்தால் "மதுர பாஸ்கரதாஸ்' என்று மக்கள் அடைமொழி கொடுத்து அழைத்தார்கள்.

பாரதியார் பாடல்கள் மக்கள் மத்தியில் பரவுமுன்னே இவரது இசைப்பாடல்கள் மக்கள் மத்தியிலே பரவியிருந்தது என்று கவிஞர் சுரதா சொல்வார். மகாத்மா காந்தி மதுரைக்கு முதன்முதல் வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசிய முதல் திரைப்படப் பாடலாசிரியர் இவர்தான். இவர் காந்தியைச் சந்திக்கும்போது உடன் இருந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். அவர்தான், பாஸ்கரதாசைக் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்தக் காலத்தில் சுதந்திரக் கனல் தெறிக்கக்கூடிய பாடல்களை விஸ்வநாத தாஸ் நாடக மேடையில் பாடியதாகச் சொல்வார்கள். அப்படி அவர் பாடியதெல்லாம் பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்களைத்தான்.

"கொக்குப் பறக்குதடி பாப்பா' - "கதர்க் கப்பல் கொடி தோணுதே' என்ற பாடல்களெல்லாம் பாஸ்கரதாஸ் இயற்றியது. அவற்றைத்தான் விஸ்வநாததாஸ் பாடினார். அதற்காக ஆங்கிலேய அரசால் விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் "வள்ளி திருமணம்' நாடகத்தில் கழுகாசலக் காட்சியில் அவர் பாடிக் கொண்டிருந்த போதே உயிர் துறந்தார்.
இன்றைக்கு நூற்றாண்டுக்கு முன்பே தனது வீட்டிற்குத் "தமிழகம்' என்று பெயர் வைத்த தமிழ் உணர்வாளர் பாஸ்கரதாஸ்.

அந்நாளில் எஸ்.ஜி. கிட்டப்பா, கொடுமுடிக் கோகிலம் என்று போற்றப்பட்ட கே.பி. சுந்தரம்பாள் போன்றவர்கள் பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்களில் பல பாடல்களைப் பாடி  புகழ்பெற்றார்கள். இவரது பாடல்களை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். பாஸ்கரதாஸýம் 1942-இல் மறைந்துவிட்டார்.

இன்றைக்கிருப்பவர்களுக்கு பாஸ்கரதாஸ் என்றால் யாரென்றே தெரியாது. மறைந்த நடிகர் கே. சாரங்கபாணி மணிக்கணக்காக பாஸ்கரதாஸ் பற்றிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

1932-ஆம் ஆண்டு வெளிவந்த "காலவரிஷி' என்ற படம்தான் முழுமையாகத் தமிழ்பேசி வெளிவந்த படம். இது பம்மல் சம்பந்த முதலியாரால் முதலில் நாடகமாக எழுதப்பெற்றது. அதன்பிறகுதான் அது பம்பாயில் படமாக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியானது.

1934-ஆம் ஆண்டு எங்கள் சிவகங்கையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் "சவுண்ட் சிட்டி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தென்னிந்தியாவில் முதன்முதல் சென்னையில் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் உயர்வுக்கு வழிகாட்டியவர் இவர்தான். 1939-இல் தனது 39-ஆவது வயதில் அவரும் மறைந்துவிட்டார்.

1936-இல் "மிஸ் கமலா' என்றொரு படம். இதன் கதை வசனம் பாடல்களை எழுதி இயக்கிய முதல் தென்னிந்தியாவின் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமி. அது மட்டுமல்ல இவருக்குப் பாடவும் தெரியும். இசையமைக்கவும் தெரியும். "சினிமா ராணி' என்ற பட்டம் பெற்றவர்.

இந்தியாவில் இவருக்கு முன் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் ஜட்டன்பாய் என்பவர். இவருடைய மகள்தான் இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய பிரபல இந்தி நடிகை நர்கீஸ்.

1934-இல் 14 படங்களும், 1935-இல் 33 படங்களும், 1936-இல் 45 படங்களும், 1937-இல் 41 படங்களும் தமிழ்நாட்டில் வெளிவந்தன.

1937-இல் வெளிவந்த "பாலாமணி அல்லது பக்காத் திருடன்' என்ற படத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதன்முதல் பாடல்கள் எழுதினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதல் திரைப்படத் துறையில் காலெடுத்து வைத்தவர் பாரதிதாசன்தான்.

1938-இல் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் போற்றப்பட்ட வ. ராமசாமி ஐயங்கார் என்ற "வ. ரா.' கதை வசனம் எழுதித் தயாரித்த "இராமானுஜர்' என்ற படத்திற்கும் பாரதிதாசன் பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் அது.

அதற்கடுத்து 1940-இல் அகில உலக நாதசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த "கவிகாளமேகம்' என்ற படத்திற்கு கதை வசனம் பாடல்கள் எழுதினார்.

பத்திரிகைத் துறையிலிருந்து படத்துறைக்கு நான் வந்ததும் தன்னிடம் இருந்த இருநூறு பழைய தமிழ்ப்பாட்டுப் புத்தகங்களை திருவாரூர் தியாகராசன் என்னிடம் கொடுத்திருந்தார். நானும் அவரும் "அலை ஓசை' பத்திரிகையில் பணியாற்றினோம். அதற்கு முன் ஈ.வெ.கி. சம்பத் நடத்திய "தமிழ்ச்செய்தி' என்ற செய்திப் பத்திரிகையில் அவர் ஆசிரியராக இருந்த போது நான் அங்கு பணியாற்றியவன்.

என் மீதும் என் கவிதை மீதும் மிகுந்த ஈடுபாடுடையவர். அதனால் பழைய பாட்டுப் புத்தகங்களை என்னிடம் அப்படியே தந்துவிட்டார். திருவாரூர் தியாகராசன் என்றால் இன்றைக்குப் பலருக்குத் தெரியுமோ தெரியாதோ "சின்னக் குத்தூசி' என்றால் அனைவருக்கும் தெரியும். திராவிட இயக்க வரலாறுகளை என்னைப் போன்றவர்கள் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டோம்.

அவர் கொடுத்த பாட்டுப் புத்தகத்தில் "கவி காளமேகம்' என்ற பாட்டுப் புத்தகமும் இருந்தது. அதில் காளமேகப் புலவர் இயற்றிய ஒரு வெண்பாவும் இருந்தது. அந்தப் படத்தை அவர் பார்த்திருந்ததால் அந்த வெண்பாவைப் பற்றிய சுவையான கருத்தையும் அந்தக் காட்சியையும் என்னிடம் சொன்னார். அதே வெண்பாவை சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஒரு விழாவில் பேசி அவையோரை ரசிக்க வைத்தார்.

கொசு வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஜமீன்தார் கேட்டபோது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள். காளமேகப் புலவரிடம் கேட்டபோது சிலேடையாக ஒரு வெண்பாப் பாடினார். அது இதுதான்.
ஈரைந்து தேர்ப் பெயரான் ஈன்ற முதல் மகனின் 
தாரத்தை வெளவியவன் தாம் வாழும் - பேரூரில்
வெவ்வழலை வைத்து விரைந்தவனின் தந்தையவன்
இவ்விடத்தில் வந்தால் இரா...
ஈரைந்து என்றால் பத்து. பத்துக்கு சமஸ்கிருதத்தில் தசம். தேர் என்பதற்கு சமஸ்கிருதச் சொல் ரதம். ஆக ஈரைந்து தேர்ப்பெயரான் என்றால் தசரதன். அவனது முதல் மகன் இராமன். அவனுடைய தாரம் சீதை. வெளவியவன் என்றால் கவர்ந்து சென்றவன் என்று பொருள். சீதையைக் கவர்ந்து சென்றவன் யார்? இராவணன்.

அவன் வாழும் பேரூர் இலங்கை. அதில் வெவ்வழலை வைத்தவன் யார்? அநுமான். வெவ்வழல் என்றால் கொடிய நெருப்பு.

அநுமனுடைய தந்தை யார்? வாயு பகவான். வாயு என்றால் காற்று. ஆக காற்று இங்கு வந்தால் கொசுக்கள் வராது. இதுதான் பாட்டின் பொருள்.

இதைச் சொல்வதற்குக் காரணம், அந்நாளில் திரைப்படத்துறையில் தமிழ்ச் சுவையை எப்படியெல்லாம் கொடுத்து மக்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டியிருக்கிறார்கள் என்பதை இன்றைய திரையுலகம் உணர்ந்து கொண்டு திருந்த வேண்டும் என்பதற்காகத்தான்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com