ஸ்ரீதர் கேட்ட விளக்கம்!

"டிரீம்சாங்குக்கு என்ன சிச்சுவேசன் வேண்டியிருக்கிறது? சிச்சுவேசன் இல்லாமல் ஒரு சிச்சுவேசனை உருவாக்கிப் போடுவதற்குப் பேர்தான் டிரீம்சாங். வேலை செய்யும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதைப் போல அல்ல
ஸ்ரீதர் கேட்ட விளக்கம்!

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-15

எம்.ஜி.ஆர். படங்களில் நான் பாடல் எழுதிய ஐந்தாவது படம் "மீனவ நண்பன்'. ஒருநாள் எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்யா ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தேன். அங்கே "மீனவ நண்பன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் "இந்தப் படத்தில் எந்தப் பாட்டு நீ எழுதிய பாட்டு?' என்றார்.

"நான் இதில் எழுதவில்லையே' என்றேன். "உன்னை வைத்து எழுதச் சொன்னேனே' என்றார். "யாரும் என்னைக் கூப்பிடவில்லையே' என்றேன்.

உடனே "புரொடக்ஷன் மேனேஜர் ராஜாராமைக் கூப்பிடு' என்றார். அவரும் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டெழுதச் சொன்னேனே ஏன் எழுதவில்லை?' என்றார். "நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை' என்று சொல்லிவிட்டார். "ஊரில் இல்லையென்றால் ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை? ஸ்ரீதர் படம் என்று சலுகை கொடுத்தால் எதையும் என்னிடம் சொல்வதில்லையா? குறிப்பிட்ட நாளில் படம் வெளி வரவேண்டுமா இல்லையா?' என்று கோபமாகக் கேட்டுவிட்டு என்பக்கம் திரும்பி, "சென்னையை விட்டு எங்குபோனாலும் சொல்லிவிட்டுப் போகச் சொன்னேனே ஏன் என்னிடம் சொல்லவில்லை?' என்று என்னிடமும் கோபத்தைக் காட்டினார்.

நான் ஒரு காரணமாக அதை அவரிடம் சொல்லவில்லை. அதனால் பேசாமல் நின்றேன். அவரும் ஏதோ காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, "இப்போதுதான் வந்துவிட்டாரே இவரை வைத்து ஒரு பாடல் எழுதுங்கள். நான் சொன்னதாக டைரக்டரிடம் சொல்லுங்கள்' என்றார்.

உடனே மேனேஜர் ராஜாராம், "நேற்றுத்தான் படத்திற்கான எல்லாப் பாட்டுக்களும் முடிந்துவிட்டன. இனிமேல் டயலாக் சீன்தான் பாக்கி என்று தயாரிப்பாளரும் டைரக்டரும் பேசிக்கொண்டார்கள்' என்றார் அவர்.

"அப்படியா? சரி, "சானா'வையும், டைரக்டரையும் அழைத்து வாருங்கள்' என்றார் எம்.ஜி.ஆர். அவரும் அவர்களை அழைத்து வந்தார்.

"சானா' என்றால் படத்தின் தயாரிப்பாளர் சடையப்பச் செட்டியார். அவரை "சானா' என்றுதான் மரியாதை காரணமாகச் சுருக்கமாக அழைப்பார் எம்.ஜி.ஆர். அந்தப் படத்தின் டைரக்டர் ஸ்ரீதர்.

அவர்களிடம், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு டிரீம் சாங் போடுங்கள் நன்றாக இருக்கும்' என்று சிரித்த முகத்தோடு கூறினார் எம்.ஜி.ஆர்.

"டிரீம்சாங் போடுவதற்கான சிச்சுவேசன் இல்லையே' என்று சிரித்துக் கொண்டே அவர்களும் கூறினார்கள். 

"டிரீம்சாங்குக்கு என்ன சிச்சுவேசன் வேண்டியிருக்கிறது? சிச்சுவேசன் இல்லாமல் ஒரு சிச்சுவேசனை உருவாக்கிப் போடுவதற்குப் பேர்தான் டிரீம்சாங். வேலை செய்யும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதைப் போல அல்லது வேலைசெய்த களைப்பில் கண்ணயரும் போது கனவு காண்பது போலப் போடுவதுதான் டிரீம்சாங். ரிலாக்சுக்காகப் போடுவதுதானே அது. "அன்பேவா' படத்தில் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடல் வருகிறதே அது என்ன சிச்சுவேசன்? ஏன் உங்கள் "உரிமைக்குரல்' படத்தில் போட்டீர்களே "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே' என்ற பாடல். 

கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை வாலி எழுதியதாக என்னிடம் சும்மா சொல்லி அந்தப் பாடலைப் போட்டீர்களே அது என்ன சிச்சுவேசன்? அது மாதிரித்தான் இந்தச் சிச்சுவேசனும். இந்தப் பாட்டுத்தான் உங்கள் படத்திற்கு அடுத்த ஷூட்டிங்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போய்விட்டார்.

எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்லிவிட்ட பிறகு பாட்டு எப்படிப் போடாமல் இருக்கமுடியும்? என்னுடைய பாடலைப் போட வேண்டுமென்பதற்காக எப்படியெல்லாம் அவர்களிடம் விளக்கம் சொன்னார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதுதான் அவர் என் மீது வைத்திருந்த அக்கறைக்கு எடுத்துக்காட்டு.

அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பாடல் எழுத எப்போது உட்கார்ந்தாலும் வாத்தியாரய்யா என் சந்தத்திற்கு எழுதுகிறீர்களா இல்லை உங்கள் சொந்தத்திற்கு எழுதுகிறீர்களா என்று கேட்பார். அண்ணன் நீங்கள் எப்படி எழுதச் சொல்கிறீர்களோ அப்படியே எழுதுகிறேன் என்பேன். உடனே சொந்தத்திற்கு எழுதச் சொல்வார்.

நாம் எழுதுகிற பல்லவி நன்றாக இருந்தால் டியூன் பண்ணுவார். இல்லையென்றால் நான் ஒரு சந்தம் தருகிறேன் அதற்கு எழுதுங்கள் என்பார்.

அதுபோல அன்றைக்கு டைரக்டர் ஸ்ரீதர் பாடலுக்கான காட்சியைச் சொன்னார். அதைக் கேட்டு நானே ஒரு பல்லவி எழுதினேன். அன்றைய நாளில் பாட்டு எழுதும்போது மியூசிக் டைரக்டர், படத்தின் டைரக்டர், உதவி டைரக்டர்கள், தயாரிப்பாளர் என்று எல்லாரும் சூழ இருப்பார்கள். இன்றைக்கு டியூன் கேஸட்டை இசையமைப்பாளர் கொடுத்து விடுகிறார். வீட்டிற்குப் போய்த்தான் எழுதி வருகிறோம்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் - உன்
அங்கங்களே மன்மதனின் படைக்கலம்
இரவினிலே தீபமாகும் உன்முகம் - நீ
இன்பத்தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்"
இதுதான் அந்தக் காட்சிக்கு நான் எழுதிய பல்லவி.
பாட்டைப் பார்த்த டைரக்டர் ஸ்ரீதர், "என்ன முத்துலிங்கம் படைக்களம் என்று எழுதுவதற்குப் பதில் படைக்கலம் என்று தவறாக எழுதியிருக்கிறாய்?'' என்றார். 
நான் முறையாகத் தமிழ் படித்தவன். அதனால் அவர் சொன்னதும் எனக்குக் கோபம் வந்தது. ஏற்கெனவே ஒரு பாட்டு எழுதும்போது கோபப்படக்கூடாது.

கோபப்பட்டால் நாம் வளரமுடியாது என்று அண்ணன் விசுவநாதனும் இயக்குநர் கே. சங்கர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. அதனால் கோபத்தை அடக்கிக் கொண்டு,
"நீங்கள் சொல்வதுபோல் படைக்களம் என்று போடலாம், படைக்களம் என்றால் போர்க்களத்தைக் குறிக்கும். நான் படைக்கலம் என்று போட்டிருக்கிறேன். படைக்கலம் என்றால் ஆயுதங்களைக் குறிக்கும்'' என்றேன்.

"அவை என்ன ஆயுதங்கள்?'' என்றார். "கண்களை அம்பு என்றும் வேல் என்றும், புருவத்தை வில் என்றும் சொல்வோம். வளைந்த காதுகளை வாள் என்றும் சொல்லலாம்'' என்றேன். உடனே அவர் "இவையா மன்மதன் ஆயுதங்கள்?'' என்று என்னை மடக்கினார்.

"இவையல்ல மன்மதன் ஆயுதங்கள். மா, அசோகு, முல்லை, நீலம், தாமரை ஆகிய ஐந்து மலர்கள் சேர்ந்த ஒரு சரத்தைத்தான் மலர்க்கணை என்று இலக்கியம் கூறும். இதைத் தான் மன்மத பாணமென்றும், ஐங்கணையென்றும் சொல்லுவார்கள். இருந்தாலும் நான் சொன்னது போலவும் வைத்துக் கொள்ளலாமே'' என்றேன்.

"இப்படி எத்தனை பேரிடம் போய் விளக்கம் சொல்வாய். சினிமாப் பாட்டு என்ன பதவுரை, பொழிப்புரை விரிவுரை சொல்லக் கூடிய இடமா? அதனால் படைக்கலம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வேறு ஏதாவது எழுது'' என்றார். உடனே அண்ணன் எம்.எஸ். விசுவநாதன் "இல்லை, இல்லை முத்துலிங்கம் நீ எழுதியதில் அங்கங்களே மன்மதனின் படைக்கலம் என்ற வரி மிக நன்றாக இருக்கிறது. அதைமாற்ற வேண்டாம்.  அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் என்று எழுதியிருக்கிறாயே அதில் அடைக்கலம் என்ற வார்த்தையை மாற்றிவிடு. படைக்கலம் என்ற வார்த்தையை மாற்ற வேண்டாம்'' என்றார்.

உடனே நான், "என்னண்ணே நீங்கள் அடைக்கலத்தை மாற்றச் சொல்கிறீர்கள். அவர் படைக்கலத்தை மாற்றச் சொல்கிறார். இரண்டு கலமும் போய்விட்டால் நான் வெறுங்கலமாகவல்லவா இருப்பேன். நீங்கள் ஏன் அடைக்கலம் என்ற வார்த்தையை மாற்றச் சொல்கிறீர்கள்?'' என்றேன்.

"அடைக்கலம் என்றால் யாரோ ஒரு பாதிரியாரைச் சொல்வது மாதிரி இருக்கிறதப்பா.  அதனால் அடைக்கலத்தை மாற்று. விதண்டாவாதம் பண்ணாதே'' என்று கோபமாகக் கூறினார்.

"சரி, அப்படியென்றால் இந்தப் பல்லவியே வேண்டாம். நீங்கள் ஒரு சந்தம் கொடுங்கள் அதற்கு நான் எழுதுகிறேன்'' என்றேன். அப்போதுதான் ஸ்ரீதர் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அவர் எப்போதும் டியூன் போட்டு எழுதுவதைத்தான் விரும்புவார் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். அப்படி மெட்டுக்கு எழுதிய அந்தப் பாடல்தான்...
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ...
என்ற பாடல். அந்தப் படத்தின் ஹிட்டான பாடல்களில் முதலிடத்தில் இருக்கும் பாடல் இதுதான். எனக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட பாடல் என்றும் சொல்லலாம். அந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிந்த பிறகும் முத்துலிங்கத்தை வைத்து ஒரு பாட்டு எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆர். ஏன் சொன்னார்?  

தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள்.  இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவவேண்டும் என்ற எண்ணம்தான். அதைத்தான் மனிதாபிமானம் என்கிறோம். அந்த மனிதாபிமானம் இருந்த காரணத்தால்தான் மக்கள் மனதில் இன்னும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நாங்களாவது அவருடன் பழகியவர்கள். அவரால் பலன் பெற்றவர்கள். அதனால் நாங்கள் அவரைப் பற்றிப் பேசுகிறோம். எழுதுகிறோம். ஆனால், அவரை நேரில் பார்க்காதவர்கள், எந்த விதமான பலனையும் அடையாத இளைஞர்கள்கூட எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அல்லது மறைந்த நாளில் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து மாலை போட்டு வழிபாடு செய்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அவரது மனித நேயமும் மக்கள் செல்வாக்கும் இன்றைய இளைஞனைக் கூட ஈர்த்து வைத்திருக்கிறது என்பதுதானே பொருள். இந்தச் செல்வாக்கு இவரைத் தவிர எந்த நடிகருக்கு இருக்கிறது?

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைவிட அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இருக்கக்கூடிய மந்திர சக்தியும் அவரது இரட்டை இலைச் சின்னமும்தான். இதை யாரும் மறுக்க முடியாது.    
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com