வசனமா வசன கவிதையா?

இவர் எழுதிய நாடகங்களில் "அந்தமான் கைதி' என்ற நாடகம் புகழ்பெற்றது இது திரைப்படமாக வந்தபோது எம்.ஜி.ஆர். தான் கதாநாயகனாக நடித்தார். அவர் சிகரெட் பிடிப்பது போல் நடித்த முதலும் முடிவுமான படமும் இதுதான்.
வசனமா வசன கவிதையா?

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-16
அந்தக் காலத்தில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் கவித்துவமாகவும் எழுத்து விதையைத் திரையுலக வயல்களில் தூவிய வசனகர்த்தாக்களில் இளங்கோவன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். இவரது எழுத்து வன்மையை எதிர்க்கும் வன்மை எவரது எழுத்துக்கும் அக்காலத்தில் இருந்ததில்லை. பாகவதர், சின்னப்பா, நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதியவர். இவருக்குப் பிறகு வந்தவர்கள்தாம் அண்ணா, கலைஞரைப் போன்றவர்கள்.

ஒருமுறை அண்ணாவிடம் கண்ணகி கோவலன் கதையை மீண்டும் படமாக்கவிருக்கிறோம். நீங்கள்தான் அதற்கு வசனம் எழுதவேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்ட போது இளங்கோவன் வசனம் எழுதிய கண்ணகி படத்தை ஒருமுறை மீண்டும் பார்க்கவேண்டும் என்றார் அண்ணா.

படத்தைப் பார்த்துவிட்டு இதில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு இளங்கோவன் வசனங்களை அப்படியே வைத்துக்கொண்டு வேறு நடிகர் நடிகையரை வைத்துப் படமாக்கிக் கொள்ளுங்கள். இதைவிட நான் என்ன எழுதிவிடப் போகிறேன் என்றாராம். அண்ணாவே பாராட்டிய வசனகர்த்தா இளங்கோவன்.

பாகவதரை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், முதலில் வசனத்திற்கு இளங்கோவனையும், இசைக்கு ஜி. ராமநாதனையும், பாடல்களுக்குப் பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்துவிட்டு அதன்பிறகு என்னிடம் வாருங்கள் என்பாராம் பாகவதர். 

இளங்கோவன் வெறும் திரைக்கதை வசனகர்த்தா மட்டும் அல்லர். பன்மொழிப் புலமை பெற்றவர். என்னைப் போன்ற ஒன்றும் தெரியாதவனை ஓர் அறைக்குள் தள்ளிக் கதவை மூடிவிட்டு எங்கள் படத்திற்காக இளங்கோவன் உள்ளே வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று தயாரிப்பாளர் சொன்னால் போதும், பட வெளியீட்டாளர்கள் அப்போதே, பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்களாம்.

வசனம் எழுதுகின்றவர்கள் பெயரை முதன்முதல் சுவரொட்டிகளில் போட்டது இளங்கோவன் பெயரைத்தான். அந்த அளவு நட்சத்திர அந்தஸ்து பெற்ற எழுத்தாளர் இளங்கோவன்.

இவரது இயற்பெயர் தணிகாசலம். இவர் "தினமணி' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்.

இளங்கோவன் வசனம் எழுதிய பாகவதர் படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் "சிவகவி'. அதில் ஒருகாட்சி, டி.ஆர். ராஜகுமாரி அரசவை நர்த்தகியாகவும் தியாகராஜபாகவதர் பொய்யாமொழிப் புலவராகவும் நடிப்பார்கள். ராஜகுமாரி பாகவதரை விரும்புவார். இவர் விரும்பமாட்டார். இதைவைத்து சுருக்கமாக ஒரு வசனக் காட்சி.

ராஜகுமாரி : நான் ஆடும்போது அழகாக இல்லையா?
பாகவதர் : பாம்பு படமெடுத்தாடும் போதுகூட அழகாகத்தான் இருக்கிறது!
ராஜகுமாரி : என்னிடம் விஷம் இல்லையே.

பாகவதர் : அஞ்ஞானம் ஆலகால விஷத்தைவிடக் கொடியது.

இப்படித் துணுக்குத் துணுக்குகளாக நறுக்குத் தெரித்தாற் போல் இளங்கோவனது வசன வீச்சு இருக்கும்.

இந்த வசனங்கள் இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? ஆனால் அதில் வருகின்ற ஒரு பாடல் எல்லாருக்கும் நினைவில் இருக்கும்.
கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே 
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே 
நவரசங்களிலும் சிருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடேதும் இலையே
புயம் இரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடை உடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டைக் குறிஞ்சி
இது மட்டுமல்ல. அந்தப் படத்தில் இடம் பெற்ற சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே சுப்பிரமண்ய சுவாமி உனை மறந்தேன்" போன்ற பல பாடல்கள் இன்னமும் நம் நெஞ்சைவிட்டு நீங்காத பாடலாக நிற்கின்றன. 

இதுபோல் எம்.ஜி.ஆர். நடித்த "ராஜராஜன்' என்ற படத்தில் ஒரு காட்சி.

அரசகுமாரி ஒருத்தி அரசகுமாரனைக் காதலிப்பாள். அவளது தோழியும் அவனைக் காதலிப்பாள். அரசகுமாரி எப்படியெல்லாம் தன்னை அலங்கரித்துக்கொள்வாளோ அதுபோல் இவளும் தன்னை அலங்கரித்துக் கொண்டு அரசகுமாரனைக் கவர எத்தனிப்பாள். ஆனால் அரசகுமாரியைத் தான் அவன் காதலிக்கிறான் தன்னையல்ல என்பதை உணர்ந்து கொண்டு தனது ஆற்றாமையை அவனிடம் உவமையாக வெளியிடுவாள்.

வானம் நீலநிறமாக இருக்கிறதே என்பதற்காகக் கடலும் தன்னை நீலநிறமாக்கிக் கொண்டது!"

வானம் தன்மீது வெண்மையான மேகங்களை மிதக்கவிட்டுக் கொண்டதே என்பதற்காகக்  கடலும் தனக்கு மேலே வெண்மையான நுரைகளை மிதக்க விட்டுக் கொண்டது!"

வானம் தன்மீது நட்சத்திர முத்துக்களைப் பதித்துக் கொண்டதே என்பதற்காகக் கடலும் தனக்குக் கீழே முத்துக்களை வைத்துக்கொண்டது.
இருந்தாலும் வானம்தான் மேலே இருக்க முடியும். கடல் கீழேதான் இருக்கமுடியும். புரிந்து கொண்டேன் வருகிறேன்." என்று இளங்கோவன் அற்புதமான கவிதை நயம் கலந்த வசனங்களை எழுதியிருப்பார்.

இது வசனமா வசன கவிதையா? வசனத்தைக் கூட அன்றைக்குக் கவிதையைப்போல் எழுதினார்கள். இன்று கவிதையாக எழுத வேண்டிய பாடலைக்கூட வசனத்திலும் சேர்த்தியில்லாமல் எழுதிவிட்டு இசையமைப்பாளர்கள் தயவால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

ராஜராஜன் படத்தில் வருகின்ற இந்தக் கரும்பு வரி வசனங்கள் எத்தனைபேருக்கு நினைவிருக்கும்? ஆனால் அதில் வருகின்ற
நிலவோடு வான் முகில் விளையாடுதே - அந்த
நிலைகண்டு எனதுள்ளம் தடுமாறுதே
- என்ற கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல் பலரது நினைவில் இன்னும் இருக்கும். படத்தில் பத்மினி பாடுவதுபோல் இடம் பெற்ற பாடல்.

நாம் பார்க்கும் படத்தில் மற்றைய அம்சங்கள் நம் மனக் கடலில் இருந்து மறதிக்கரையோரம் ஒதுங்கிவிட்டாலும் என்றும் ஒதுங்காமல் நெஞ்சக் கடலுக்குள் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பது பாடல்கள் தான் என்பதை எடுத்துக்காட்டவே இதை விளக்கமாகக் கூறினேன்.

இந்த கு.சா. கிருஷ்ணமூர்த்திதான் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் வருகிற "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேன்ப தேது' என்ற பாடலை எழுதியவர்.

இவருடைய பரிந்துரையால்தான் பி.யு. சின்னப்பா, அஞ்சலிதேவி, கண்ணம்பா, நடித்த "மங்கையர்க்கரசி' படத்திற்கு கவிஞர் சுரதா வசனம் எழுதினார். அதில் பெரும்பாலான பாடல்களை கம்பதாசன் எழுதினார். அதில் "காதல் கனிரசமே' என்ற பாடலை மட்டும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதினார். இதுதான் அந்தப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல்.

இவர் எழுதிய நாடகங்களில் "அந்தமான் கைதி' என்ற நாடகம் புகழ்பெற்றது இது திரைப்படமாக வந்தபோது எம்.ஜி.ஆர். தான் கதாநாயகனாக நடித்தார். அவர் சிகரெட் பிடிப்பது போல் நடித்த முதலும் முடிவுமான படமும் இதுதான்.

எம்.ஜி.ஆர் தனது படத்தின் பாடல்களில் அதிக அக்கறை காட்டியது நீண்டகாலம் பாடல் நிலைத்திருக்க வேண்டும் என்பதால்தான். இசையோடு கருத்துகளைச் சொன்னால் இதயத்தில் அது எளிதில் பதியும் என்பதால்தான் பாடல்களில் அவரது தலையீடு அதிகம் இருந்தது. அந்தக் காலத்துத் திரைப்பட நிறுவனங்கள் அனைத்தும், திறமைக்கும், தொழில் நேர்மைக்கும் முதலிடம் கொடுத்தன. தனிமனிதர் என்ற முறையில் திறமைக்கு மதிப்பளித்து வாய்ப்புக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

ஒரு கம்பெனியில் நாம் தான் பாடல் எழுதவேண்டும் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட நாளில் புரொடக்ஷன் மேனேஜரையும் அனுப்புவார்கள். அவர்கள் தேடுகிற நேரத்தில் நாம் இல்லையென்றால் வேறொரு கவிஞரை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் இல்லையென்றால் இன்னொரு கவிஞரைத் தொலைபேசி மூலம் வரச் சொல்லிவிடுவார்கள்.
இதைத் தவறென்று சொல்ல முடியாது. திரையுலகம் போகும் வேகத்திற்கு இது தவிர்க்க முடியாததும் கூட.

ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் இன்னாரை வைத்துத்தான் இந்தப் பாடல் எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அதை எழுதவேண்டிய கவிஞர் ஊரில் இல்லாவிட்டாலும் அல்லது அவர் எழுதுவதற்குக் காலதாமதம் ஆனாலும் காத்திருந்து எழுதி வாங்கியவர் இந்தத் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

அந்த வகையில் நான் எழுதிய ஒரு பாடலை திரும்பத் திரும்ப எழுத வைத்து ஒரு மாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டார். அந்தப் பாடல் இடம்பெற்ற படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'. 
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com