தமிழக பிரதான உணவு வகைகளில் முதலிடம் எப்போதும் இட்லிக்குதான். காரணம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை இட்லியை விரும்பாதவர் எவரும் இல்லை எனலாம். மேலும் நோயாளிகளுக்கும் அளிக்க கூடிய முதல் உணவு இட்லிதான்.
ஆனால் பல வீடுகளில் இட்லி இட்லியாக இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கும் ஹோட்டலில் கிடைப்பது போன்று வெள்ளை வெளேரென மெத்தென்று இருக்கும் இட்லியை செய்து விடவேண்டும் என்பது ஆசை. அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் சென்னையை சேர்ந்த காவேரி. மெத்தென்று மிருதுவாக இருக்கும் செட்டிநாடு இட்லி தயாரிப்பதில் வல்லவரான இவர், கார்பரேட் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இட்லியை தயார் செய்து தந்து அதன் மூலம் சிறு தொழிலதிபராக மாறியிருப்பவர். அவரைச் சந்தித்தோம்:
"எனக்கு பூர்வீகம் காரைக்குடி. ஆனால் சின்ன வயதிலிருந்தே படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். விடுமுறை நாட்கள் எல்லாம் காரைக்குடியில் பாட்டி வீட்டில்தான். நாங்க காரைக்குடி போனாலே பாட்டி விதவிதமாக சமைத்து போட ஆரம்பித்துவிடுவார்கள். பலகாரங்களை சாப்பிடுவதோடு இருந்துவிடாமல் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அங்கே கற்று கொண்டு வரும் பலகாரங்களையெல்லாம் சென்னை வந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் செய்து கொடுப்பேன்.