பி.ஆர்க் படிப்பிற்கான NATA தேர்வு எழுத இணையத்தில் டிசம்பர் 24 முதல் விண்ணப்பிக்கலாம்!
அரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டு பி.ஆர்க். கோர்ஸ் பயில ரூ. 2 லட்சம் வரை செலவாகும். தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை செலவாகும்.


நாட்டின் உள்கட்டமைப்புகளை வடிவமைப்பதில் கட்டடக் கலை வல்லுநர்கள் பாடுபட்டு வருகின்றனர். நகர வடிவமைப்பு, சாலைத் திட்டங்கள், தொழிற்பூங்காக்கள் என நாம் அன்றாடம் காணும் செயற்கை காட்சி வடிவங்களின் பின்னே பல ஆயிரம் கட்டடக் கலை வல்லுநர்களின் மன எண்ணங்கள், கைவண்ணங்கள் மறைந்துள்ளன.
பிரமாண்ட கட்டடங்களைக் காணும் போதெல்லாம் அதன் பின்னணியில் ஒரு கலை வல்லுநரின் ஆளுமையும், பல நூறு பேரின் உழைப்பும் நம் கண் முன் வந்து செல்கின்றன. தலைமுறைகளை மட்டுமல்ல, நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த கலைச் சின்னங்களில் உள்ள நுட்பம், ஆற்றல் யாரோ சிலருக்கு மட்டும் கிடைத்த வரம் அல்ல.
இதேபோன்ற கலை ஆர்வம், கற்பனை வளம் இன்றைய இளைஞர்கள் பலரின் மனதிலும் இல்லாமல் இல்லை. அதைக் கண்டறிந்து மெருகூட்டி, கூர் தீட்டி அங்கீகரிக்கக் காத்திருக்கிறது மத்திய அரசின் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர். இதற்காக இந்த அமைப்பு நடத்தும் தேர்வுதான் NATA. (National Aptitude Test in Architecture).
இந்தத் தேர்வு குறித்து நமக்கு விளக்குகிறார் திருச்சி RVSKVK கட்டடக் கலையியல் கல்லூரியின் முதன்மையர் ஜெகன் பழனிசாமி:
"கட்டடக் கலை என்பது கட்டட வடிவமைப்பு மற்றும் எழில் தோற்றம் மட்டுமல்ல. பல்நோக்கு மருத்துவமனை, திரையரங்குகள், விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பல அடுக்கு வானளாவிய multi storey apartments நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற, பல்வகை தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களைக் கட்டும்போது அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஆற்றல் அவசியம். அந்த ஆற்றல் கட்டடக் கலையியல் வல்லுநர்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த குறிப்பிடத்தக்க அம்சம் இத்துறையை சிவில் இன்ஜினியரிங் துறையில் இருந்து வேறுபடுத்துகிறது.
பெரும்பான்மையான மாணவர்களிடம் பி.ஆர்க். படிப்பை பெரிய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மட்டுமே பயில முடியும் என்ற எண்ணமும், அதற்கு JEE போன்ற கடினமான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. ஆனால், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து பிளஸ் 2-இல் 50 மதிப்பெண்கள் பெற்ற 17 வயதுடைய மாணவர்கள், பத்தாம் வகுப்பு முடித்து கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து டிப்ளமா முடித்தவர்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் நடத்தும் தேசிய கட்டடக் கலையியல் திறனறித் தேர்வில் (NATA) வெற்றி பெற்றால் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்.ஐ.டி. அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் என 450 கட்டடக் கலையியல் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பி.ஆர்க். பயில முடியும்.
2006 முதல் நடைபெற்றுவரும் NATA தேர்வு கடந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்றது. நிகழாண்டு பேப்பர்-பேனா முறையில் ஆப் லைனில் நடைபெறவுள்ளது. தேர்வு வரும் 2017, ஏப்ரல் 16-ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கக் கடைசிநாள் 2017, ஜனவரி 29. விண்ணப்ப கட்டணம் ரூ. 1250. ஜனவரி 31-ஆம் தேதிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
2017, ஏப்ரல் 16-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 10- ஆம் தேதி வெளியாகும். தேர்வு 3 மணி நேரம் 2 பிரிவுகளாக நடைபெறும். முதல் 90 நிமிடங்களில் கணிதம் தொடர்பான 30 வினாக்களும், பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும் இடம்பெறும். 2 மதிப்பெண்கள் வீதம் 120 மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 90 நிமிடங்களில் 2 வினாக்களில் வரைபடத் தேர்வு நடைபெறும். 40 மதிப்பெண்கள் வீதம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 200.
இந்தத் தேர்வில் 2 பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்கள் (50) பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள கட்டடக் கலையியல் கல்லூரிகளில் பி.ஆர்க். முதலாமாண்டு சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள தரவரிசைப் பட்டியலில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும்.
அரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டு பி.ஆர்க். கோர்ஸ் பயில ரூ. 2 லட்சம் வரை செலவாகும். தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை செலவாகும். பெரும்பான்மையான கல்லூரிகளில் இதற்கான கல்விக்கடன் வசதி செய்யப்படுகிறது.
இந்தப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு, தனியார் துறைகள் உள்பட குறைந்தபட்சம் ஒருநூறு துறைகளில் வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது. உதாரணமாக, நகர வடிவமைப்பாளர், திட்ட மேலாளர், வீடுகட்டுவதற்கான ஆலோசகர், வரலாற்றாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், கட்டட ஆய்வாளர், ஒப்பந்ததாரர், கட்டுமான மேலாளர், வடிவமைப்பு தணிக்கையாளர், நிலப்பட வல்லுநர், சூழல் திட்ட வடிவமைப்பாளர், கண்காட்சி வடிவமைப்பாளர், வீடு மறுகட்டமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, சொத்து மதிப்பீட்டாளர் போன்ற எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளன.
தேசிய கட்டடக் கலையியல் திறனறித் தேர்வு (NATA) சமூகத்திற்கு சேவையாற்ற திறமையான கட்டடக் கலை வல்லுநர்களை உருவாக்குவதற்கான ஒரு தேர்வு ஆகும்.
தற்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்போது ஆயிரக்கணக்கான கட்டடக் கலை வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...