இந்தியாவைப் பொருத்தவரை அனைத்துமே வித்தியாசமாகத் தெரிகிறது. சில நேரங்களில் ஆன்மிகம், அரசியல் பொருளாதார ரீதியாக வியாபாரமாக மாறினாலும் ஒரு வரம்புக்குள் உள்ளது. நான் தில்லியில் வசித்து வருவதால் இந்நாட்டின் பல பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போதெல்லாம் வழியில் மரங்களின் கீழ், நடைபாதைகளில் சிலைகள் வைக்கப்பட்டு, விபூதி குங்குமத்துடன் மக்கள் வழிபடுவதை பார்த்திருக்கிறேன். சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ள சாணக்கியபுரியில்கூட இதுபோன்ற காட்சிகளை பார்த்து வருகிறேன். போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளிலும் மக்கள் கவலைப்படாமல் கடவுளை வழிபடுகின்றனர். இதுமட்டுமல்ல கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், குருத்துவாரா போன்ற ஆன்மிகத் தலங்களில் மக்கள் நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் கடவுளை பூஜிக்கும் அவசரத்தில் தங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்துவதையும் பார்த்ததுண்டு.