சேவை நோக்கில் மலிவு விலை நாஃப்கின் கண்டுபிடித்த தமிழரின் வாழ்க்கை பாலிவுட்டில் திரைப்படமாகிறது!

இவரது வாழ்க்கை தான் பாலிவுட்டில் அடுத்த மோஸ்ட் வாண்டட் பயோ பிக்  'Pad man'. தமிழ்ப்படுத்தினால் ‘நாஃப்கின் மனிதர்’ என்று பொருள். இதை இயக்கப் போவது இயக்குனர் பால்கி. முருகானந்தமாக நடிக்கவிருப்பது ரஜினிய
சேவை நோக்கில் மலிவு விலை நாஃப்கின் கண்டுபிடித்த தமிழரின் வாழ்க்கை பாலிவுட்டில் திரைப்படமாகிறது!

காந்தியின் வாழ்க்கைச் சித்திரம், ‘காந்தி’ என்ற பெயரிலேயே ரிச்சர்ட் அட்டன்பரோவால் படமாக்கப் பட்டு இன்றளவும் சிறந்த ஆவணப் படமாக உலகம் முழுதும் பார்த்து ரசிக்கப்படுகிறது. சாதனையாளர்களின் வாழ்க்கையை படமாக்குவது அத்தனை எளிதான காரியமில்லை. 

தமிழில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கத்தில் மகாகவி பாரதியார், தந்தை பெரியார் உள்ளிட்டோர் வாழ்க்கை  திரைப்படமாகப் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் தேச முன்னேற்றத்தில், சீர்திருத்தங்களில் பங்காற்றிய மாபெரும் தலைவர்களைப் பற்றி பிற மொழியினரும் எளிதாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்பது நிஜம்.

சமீபத்தில் இப்படி பயோ பிக் ஆக எடுக்கப் பட்டு வசூலிலும் சாதனை புரிந்த படம் ஒன்றைக் குறிப்பிட வேண்டுமெனில் அது ‘டங்கல்’ இந்தித் திரைப்படம்! மல்யுத்த வீரங்கனையான கீதா போகத் சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையான மஹாவீர் சிங் போகத்தின் சாதனைகளையும், அதற்கான அவர்களது வாழ்க்கைப் போராட்டத்தையும் பதிவு செய்தது அந்தத் திரைப்படம். வசூல் ரீதியாக இது இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு வெளியீடு எல்லாமுமாகச் சேர்த்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

‘டங்கல்’ வெற்றி ஒரு எளிய குடும்பத் தலைவரும், மல்யுத்த வீரருமான மஹாவீர் சிங் போகத் எனும் தந்தை அடைந்த வெற்றி! அந்த வகையில் விளையாட்டுத் துறையில் தனது மகள்களைச் தங்கம் வெல்ல வைத்து சாதிக்க வைத்த ஒரு தகப்பனின் மன உறுதிக்குச் சற்றும் குறையாததே தமிழ்நாட்டு, அருணாச்சலம் முருகானந்தத்தின் மன உறுதியும் வெற்றிகளும்!

மோடியின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் வருகிறது கிராமப்புற மகளிர் மாத விடாய் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள். பெரு நிறுவனங்கள் தயாரித்து சந்தைகளில் விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிரபல நாஃப்கின்கள் அனைத்தும் நான்கிலக்க சம்பளக்காரர்களுக்கே கட்டுப்படியாகுமோ, ஆகாதோ?! எனும் நிலையில் கிராமப்புற உழைக்கும் மகளிர் மாத விடாய் காலங்களில் என்ன செய்வார்கள்? அவர்களும் சுகாதாரமான நாஃப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் அவற்றின் விலை ஏழைகளின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கொடுமையான வதையாக இல்லாமல் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தவர் தான் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.

ஏழைப் பெண்களுக்கு தரமான மலிவு விலை நாஃப்கின் தயாரிக்கும் முயற்சியில் ஒரு கட்டத்தில் முருகானந்தம் தனது மொத்தக் குடும்பத்தினரின் வெறுப்பையும் சம்பாதித்தார். ஊர் இவரை பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடியது. சொந்த மனைவிக்கே தன் கணவரைக் கண்டால் மனநலம் சரி இல்லாதவரோ என்ற சந்தேகம் வரும் நிலை. இந்த தொடர் போராட்டங்களைக் கடந்து தான் முருகானந்தம் தனது இலக்கான மலிவு நிலை நாஃப்கினை கண்டறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது வாழ்க்கை தான் பாலிவுட்டில் அடுத்த மோஸ்ட் வாண்டட் பயோ பிக்  'Pad man'. தமிழ்ப்படுத்தினால் ‘நாஃப்கின் மனிதர்’ என்று பொருள். இதை இயக்கப் போவது இயக்குனர் பால்கி. முருகானந்தமாக நடிக்கவிருப்பது ரஜினியின் 2.0 வில்லன் அக்‌ஷய் குமார். இசை மேஸ்ட்ரோ இளையராஜாவாக இருக்கலாம். முருகானந்தத்தின் மனைவி சாந்தியாக நடிக்கவிருப்பது  ‘கபாலியின்  மாய நதியான’  நடிகை ராதிகா ஆப்தே!

முருகானந்தத்தின் கண்டுபிடிப்பைப் பாராட்டிய இந்திய அரசு. அவரது சேவை முயற்சியைப் பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதளித்துக் கெளரவித்திருக்கிறது. மேலும் இந்தியாவின் 25 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அவரது நாஃப்கின்களை அரசே கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும், கிராம ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் ஏழை, எளிய மகளிரைச் சென்றடைய உதவுகிறது. பாலிவுட்டில் இது பயோ பிக் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கைச் சித்திரங்களின் சீஸன் போல! இந்தி நடிகர், நடிகைகளும் இத்தகைய திரைப்படங்களில் நடிக்கத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது பாராட்டத் தக்கது.

முருகானந்தத்தின் வாழ்க்கை சித்திரத்திற்கு இந்தியில் ‘பேட்மேன்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஒரு தமிழரின் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாவது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய விசயம். அதோடு கூட முருகானந்தம் தனது இந்தக் கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக அமைந்த விசயமெனக் குறிப்பிட்டிருப்பது தன் மனைவி சாந்தி மாத விடாய் காலங்களில் அனுபவித்த சங்கடங்களையே! அந்த வகையில் மனைவியின் அசெளகரியங்களைப் புரிந்து கொண்டு அதற்கொரு தீர்வும் கண்டு அதை நாடு முழுக்க அனைத்து மகளிரும் பயன் கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற திட்டமாக ஆக்கியதற்கு அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com