Enable Javscript for better performance
Renowned Tamil culture & society| தமிழர் வாழ்வியல்!- Dinamani

சுடச்சுட

  

  தரணி போற்றும் தமிழர் வாழ்வியல்!

  By சி.சதிஷ்குமார், ஆசிரியர்  |   Published on : 20th September 2017 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamil_culture_life

   

  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் கனியன் பூங்குன்றனார். இரண்டே வரிகளில் உலகின் வாழ்வியல் தத்துவத்தை இதைவிட வேறு எவராலும் சொல்லிவிட முடியாது..

  தமிழ் என்பது எழுத்துக்கும், சொல்லுக்குமான இலக்கண மொழி மட்டுமல்ல. எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியலுக்கான இலக்கணம் வகுத்த மொழி. உலகில் இருந்த இருக்கின்ற மொழிகளிலேயே வாழ்வியலை அகம் என்றும், புறம் என்றும் மக்களின் வாழ்வியலை எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொன்ன மொழி தமிழ்மொழி.

  ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் முக்கியம், அவனது அறம், பொருள், இன்பம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்த திருக்குறள் தான் இன்று உலகப்பொதுமறையாக போற்றிக் கொண்டாடப்படுகிறது.

  உறவுகளைப் போற்றுதலும், விருந்தோம்பலும் வெகுசிறப்பான இடத்தை நம் தமிழர் பண்பாட்டை அழகுறச் செய்வதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.

  தாய் தந்தையரை தெய்வமாக மதிக்கும் மாண்பும், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் ஓங்குநிலை இல்லற வாழ்வும் எங்கும் காணவியலாத பண்பாட்டு நெறியாகும். கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையில் தாத்தா, பாட்டிக்களிடம் கிடைக்கும் அறிவுரைகளும், அறவுரைகளும் ஆயிரம் நூலகங்களில் சென்று தேடினாலும் கிடைக்காத பொக்கிசங்கள் ஆகும். விழாக்காலங்களிலும், இல்ல நிகழ்வுகளிலும் உறவினர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதலும், உறவுகளைப் பேணுதலும் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு மிகச்சிறந்த வாழ்க்கைமுறை ஆகும்.

  தனக்கு கிடைத்த ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தால் தமிழ் வளரும் என நினைத்த அதியமான், தன் கன்றை இழந்து நீதி கேட்ட பசுவிற்காக தன் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச்சோழன், தன்னிடம் அடைக்கலம் வந்த புறாவிற்காக தன் தொடைச் சதையை அரிந்து கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, குளிரில் நடுங்கும் மயிலின் துயர் துடைக்க தன் போர்வையைக் கொடுத்த பேகன், தேர்க்காலில் பட்டால் நைந்துவிடுமோ என்றெண்ணி தன் தேரையே முல்லைக்கு கொடுத்த பாரிவேந்தன் இப்படி அறத்தின் வழி ஆட்சி செய்தவர்கள் எல்லாம் தமிழ்வழி வந்த வாரிசுகள் என்பது தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்ப்பனவாகும்.

  தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் போற்றப்பட்டன. அறநெறிகள் தழைத்தோங்கின.

  ஆனால் இன்றைய சூழலில் நவீனத்துவம் என்ற பெயரில் மொத்தத்தையும் இழந்துவிடும் சூழலில் தமிழ்ச்சமூகம் தவித்துக்கொண்டு இருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்து, கூட்டுக்குடும்ப வாழ்வியல் உருக்குலைந்து ஏதோ... அங்கொன்றும், இங்கொன்றுமாக அருங்காட்சியகங்களில் காணப்படும் காட்சிப்பொருளைப்போல குடும்ப உறவுகளைப்போற்றும் குடும்பங்களைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது..

  பெற்றோரைப் பிரிந்து வாழும் வாழ்க்கைமுறை அதிகரிக்கத் தொடங்கிய பின்புதான், விவாகரத்துகள் விஸ்வரூபம் பெற்றன. விடுதிப்படிப்புகள் அதிகரித்தபின்புதான் முதியோர் இல்லங்கள் அதிகம் முளைத்தன.

  தாத்தாக்களும், பாட்டிக்களும் இல்லாத இல்லங்களில் இருந்துதான் குற்றங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. இவையெல்லாம் யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. ஒவ்வொரு மனிதரும் தனது இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தை சற்று நிறுத்தி நிதானத்துடன் சிந்தித்தாலே போதும் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு தானே கிடைத்துவிடும்..

  விடியல் உலகுக்கு அல்ல, உள்ளுக்குள்ளேயே விடிய வேண்டும். ‘உள்ளுக்குள் விடிந்தால் உலகம் தானே வெளிச்சமுறும்’ என்பதை மீட்டெடுக்க வேண்டுமெனில், தமிழர் பண்பாடுகள் மீண்டும் தழைக்க வேண்டும். தமிழர் நாம் அதில் கொண்டாடித் திளைக்க வேண்டும்.

  மரத்தடிப் பஞ்சாயத்துக்கள் எனப்படும் ஊர்ப்பெரியவர்கள் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில் நீதி இருந்தது. குற்றங்கள் அதிகம் இல்லை. அவ்வளவு தூரம் தமிழரின் வாழ்வியலில் நேர்மையும், செயல்பாடும் குடிகொண்டு இருந்தன. ஆனால் இன்று நீதிமன்றங்கள் பெருகிவிட்டன. ஆனால் நீதியைத்தான் காண முடியவில்லை. எல்லாவற்றையும் பெரும்பாலும் நிதியே தீர்மானிக்கும் என்னும் நிலைக்கு வாழ்க்கைமுறை மாற்றம் பெற்றுவிட்டது. எல்லோரிடமும் பணம் இருக்கிறது, பொருள் இருக்கிறது, வீடு இருக்கிறது.

  ஆனால்...

  • நிம்மதியான வாழ்க்கை இல்லை. 
  • சுகாதாரமான சூழல் இல்லை. 
  • நோய்களில்லாத உடல் இல்லை. 
  • உற்சாகமான மனம் இல்லை..

  இவையெல்லாம் மீட்டெடுக்க வேண்டுமெனில் நாம் ஒன்றே ஒன்றுதான் செய்ய வேண்டும். தமிழரின் வாழ்வியல் நெறிகளைக் கொண்டாடத் தொடங்க வேண்டும். நமது பாட்டனும், பூட்டனும் பின்பற்றிய குடும்ப உறவுகளைப் பின்பற்றிய வழிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டும். கைபேசிகளுக்கு சற்று விடைகொடுத்துவிட்டு நம் குழந்தைகளோடும் கொஞ்சிப்பேச வேண்டும். விழாக்காலங்களுக்கு விடை சொல்லாமல், பணிகளுக்கும் சற்று ஓய்வு கொடுத்து உறவுமுறைகளோடு சற்று இளைப்பாற வேண்டும். பல்லாங்குழி ஆடும் சத்தமும், பச்சைக்குதிரை தாண்டும் காட்சியும் அரங்கேற வேண்டும்.

  கூட்டாஞ்சோறு சமைத்து வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு சாப்பிடத் தொடங்குங்கள்; உறவினர் வீட்டு இல்லநிகழ்வுகள் அனைத்திலும் விடுபடாமல் உங்கள் வரவை உறுதி செய்யுங்கள்..இயன்றவரை குடும்ப விழாக்களில் உங்கள் குழந்தைகள் பங்கேற்பதையும் ஊக்கப்படுத்துங்கள்.. இவை எல்லாம் எளிதில் சாத்தியமான நிகழ்வுகளே! இமயமலை ஏறிச் சாதிக்கும் நிகழ்வுகள் அல்ல, உங்கள் இதயத்தில் ஏற்றுச் சாதிக்க வேண்டிய விசயங்கள்..

  தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்..

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai