இவ்வாறு அலைந்த அம்மை பின் இதே மஹா சிவராத்திரி நன்னாளில் பின் மயானத்தில் அண்ணன் திருமாலின் ஆலோசனைப்படி சோறு இறைத்து பிரம்ம கபாலம் நீங்கப் பெற்று மேல்மலையனூரில் நாம் உய்ய கோவில் கொண்டதால், அங்காள பரமேஸ்வரிக்கும் உரிய நாள் மஹா சிவராத்திரியாகும். எனவே தான் மஹா சிவராத்திரியன்று எல்லா அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. எனவே அம்மைக்குரிய அந்த சிவராத்திரியின் போது மேல் மலையனூரிலிருந்து குடகனாற்றிலே குறத்தி மீனாக குடத்திலே வந்து நாட்டுக்கல் பாளையம் என்ற ஊரிலே கோவில் கொண்ட, தானே வந்தெம்மை ஆட்கொண்ட அற்புத வரலாற்றைக் காண தங்களை இரு கரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள் அடியேனுடன்.
ஒரு சமயம் எங்கள் குல வணிக மக்கள் சிலர் சதங்கைகள் ஒலிக்கும் மாடுகள் பூட்டிய வண்டிகளில், மஞ்சள், மிளகு, மற்றும் மயில் தோகை முதலியவற்றை ஏற்றிக் கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சோதித்து அருள கருணைக் கடலாம் அந்த அகிலாண்ட நாயகி, உலக மாதவாய், ஏக நாயகியாய், உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும் அன்னை ‘ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி’ சுருக்கம் விழுந்த தோலுடன் தலை நரைத்த கிழவியாய் கையில் கோலூன்றி அவர்களிடம் வந்து... ‘மக்களே வண்டியிலே என்ன கொண்டு செல்கிறீர்கள்?’ என வினவ; அவர்களோ உண்மையைக் கூறாமல் ‘நாங்கள் தவிடும், புண்ணாக்கும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம் தாயே’ என்றனர். அனைத்தையும் அறிந்த அன்னை சிரித்து அப்படியே ஆகட்டும் என்று சென்று விட்டாள்.