Enable Javscript for better performance
madurai veeran, kathavarayan victims of age old h|காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவுகூரா விட்- Dinamani

சுடச்சுட

  

  காதலர் தினத்தைப் பற்றிப் பேசுங்கால் காதலுக்காக... காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவுகூரா விட்டால் எப்படி?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 14th February 2018 05:31 PM  |   அ+அ அ-   |  

  madurai_veeran

   


  நாட்டார் கதைப் பாடல்களில் மதுரை வீரன், பொம்மி & வெள்ளையம்மாள் கதையும் காத்தவராயன், ஆரிய மாலா கதையையும் அறியாதவர்களிருக்க முடியாது. ஆரம்பத்தில் கூத்துக் கலையாகவும், மேடை நாடகக் கலையாகவும் நடத்திக் காட்டப்பட்ட இவர்களது வாழ்க்கையும், படுகொலையும் பின்னாட்களில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி நடிப்பில் திரைப்படங்களாயின. 

  மதுரை வீரன், பொம்மி & வெள்ளையம்மாள் கதை...

  மதுரை வீரனை நாட்டார் தெய்வங்களில் ஒன்றாக்கி விட்டார்கள். சிலர் அவர் அரசிளங்குமாரனாகப் பிறந்து ஜோதிடர்களின் தவறான தந்திர ஆலோசனையால் அரசரால் கைவிடப்பட்ட குழந்தையாகவும் கற்பிக்கிறார்கள். பிறக்கும் போது கொடி சுற்றிப் பிறந்ததால் அரசரின் கட்டளைப்படி காட்டில் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த செல்லி, சின்னான் எனும் வழிப்போக்கர் தம்பதியினரின் கைகளில் சிக்கி அவர்களால் வளர்க்கப் படுகிறது. அக்குழந்தைக்கு வீரன் எனப்பெயரிட்டு அவர்கள் தங்களால் முடிந்த சீருடனும், சிறப்புடனும் வளர்த்து வருகிறார்கள். சின்னான், மதுரை மன்னரின் படைகளுக்குத் தேவையான காலணிகள், தோல் நாணயங்கள் மற்றும் படைக்களன்களைச் செய்து தரும் வேலையைச் செய்து வருகிறார். தன் தந்தைக்கு மதுரை அரசருடன் இருந்த தொடர்பால் பின்னாட்களில்  மதுரை வீரரும் வளர்ந்து வாலிபனாகும் போது மன்னனின் காவல்படை வீரனாகிறார். 

  நாட்டார் பாடல்கள் மதுரை வீரனைச் சித்தரிக்கையில் மிகுந்த ஆண்மை கொண்டவராகவும், காவல் தொழிலுக்கு ஏற்ப கையில் வீச்சரிவாள் ஏந்தியவராகவும் காவல் பரிவார தேவதைகளாக பைரவர் மற்றும் பரியின் துணை கொண்டவராகவுமே காட்டுகின்றன. இவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருத்தி அரசிளங்குமரியான பொம்மி, மற்றவள் ஆடலரசியான வெள்ளையம்மாள். இருவருமே மதுரை வீரனைக் காட்டிலும் குலத்தால் உயர்ந்தவர்கள் எனக் காட்டுகின்றன நாட்டார் பதிவுகள். வளர்ப்பால் அருந்ததிய குலத்தைச் சார்ந்தவரான மதுரை வீரன் பொம்மியைச் சிறையெடுத்து மணந்து கொள்கிறார். இதனால் திருச்சி மன்னரின் துவேஷத்துக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராகிறார். பின்பு தன்னுடைய வீரம் மற்றும் வாக்கு சாதூரியத்தால் மன்னரைச் சமாதானப்படுத்தி ஒரு கட்டத்தில் பாளையத்து மன்னர்களுக்கெல்லாம் பெரு மன்னரான திருமலை மன்னரின் காவல்படைத் தலைவராகவும் ஆகிறார். அங்கு வைத்து தான் அவர் ஆடலரசி வெள்ளையம்மாளைச் சந்திக்கிறார். வெள்ளையம்மாளை ஒருதலையாகக் காதலிக்கும் திருமலை மன்னர் மதுரை கள்ளழகர் கோயில் பகுதியைச் சுற்று கொள்ளையர் நடமாட்டத்தை ஒடுக்க மதுரை வீரனோடு, வெள்ளையம்மாளையும் சேர்த்து அனுப்புகிறார். இந்த இருவர் கூட்டணி கள்ளர் கூட்டத்தை கருவறுக்கவே வெள்ளையம்மாளின் வீரத்தோடு இணைந்த காதலால் கவரப்பட்ட மதுரை வீரன் புறக்கணிக்க இயலாமல் அவளையும் மணந்து கொள்கிறார். மதுரை வீரன் வெள்ளையம்மாளை மணந்திருக்கா விட்டால் அவள் திருமலை மன்னரின் அந்தப்புரப்பாவையாகும் துரதிருஷ்டம் இருந்தது. முன்பே திருச்சி மன்னரைப் பகைத்துக் கொண்டாயிற்று இப்போது வெள்ளையம்மாளால் திருமலை மன்னரும் மதுரை வீரனுக்குப் பகையாளி ஆகி விட்டார். தான் வெள்ளையம்மாளின் காதலுக்காக காத்திருக்க, அவளோ மதுரை வீரனை மணந்து கொண்டாலே என்ற ஆத்திரத்திலும், அகங்காரத்திலும் திருமலை மன்னர் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மதுரை வீரனை இல்லாத குற்றம் சுமத்தி மாறுகால், மாறு கை வாங்கி விடச் சொல்லி ஆணையிடுகிறார். ரத்த வெள்ளத்தில் கொலைக்களத்தில் கிடந்த மதுரை வீரனது உடலைக் கண்டதும் அவரது ஆருயிர்க்காதலிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் மூச்சடக்கி உயிர் நீத்தனர். வீரன் படுகொலை செய்யப்பட்ட அன்றே மதுரை மீனாட்சியம்மை திருமலை மன்னரின் கனவில் தோன்றி வீரன் குற்றமற்றவன் என்பதால், கொடூரமான நயவஞ்சகத்துக்குப் பலியான வீரனுக்குத் தனது கோயிலுக்குள் சிலையெடுத்து அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். ஆனால், நாயக்க அரசுகளில் நிலவிய கடுமையான வர்க்க பேத அரசியலால் வீரனுக்கு கோயிலுக்குள் சிலை அமைக்கப்படவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். மீனாட்சியம்மை மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கே அவளது கட்டளையை விட ஜாதியே முதன்மையானதாகத் தோன்றியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அப்போது வர்க்க பேதம் எத்துணை ஆதிக்கம் செலுத்தியிருக்கக் கூடுமென! அப்படி இருக்கையில் தூய காதலே என்றாலும் அந்தஸ்தும், குலமும் மாறுபட்ட ஒரு ஆணை அவன் வீரனான இருந்தாலுமே போனால் போகட்டும் என்று வாழவிட்டார்களில்லை. 

  அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டாலும் இன்று மதுரை வீரன் பலருக்குக் குலசாமி என்பதை மறுக்க முடியாது.

  காத்தவராயன், ஆரியமாலா கதை...

  மலைப்பழங்குடியான காத்தவராயன் ஆரியமாலா எனும் அரசிளங்குமரியைக் காதலிக்கிறார். ஆனால் அரசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காத்தவராயனைக் கைது செய்து சிறையிலடைக்கப் பார்க்கிறார். அரசனது எதிர்ப்பையும் மீறி காத்தவராயன், ஆரியமாலாவைக் கரம் பிடிக்கிறார். இதனால் வெகுண்டெழுந்த அரசர், காத்தவராயனைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார். அப்போது காத்தவராயன், மானுடரை விட உயர்வான தெய்வங்களே காதல் மணம் புரியும் போது அவர்களது அருளுக்காக ஏங்கி வாழும் சாமானியர்கள் காதலிக்கக் கூடாதா? மணம் புரியக் கூடாதா? என வாதிக்கவே, அரசனின் அகங்காரம் எல்லை மீறி காத்தவராயனை கழுவேற்ற உத்தரவிட்டு விடுகிறார். அதன்படி கழுவேற்றப்பட்டு தனது உயிர் பிரியும் தருவாயில் காத்தவராயன் மீண்டும் உயிர்த்தெழுந்து தனது பூர்வ ஜென்மத்தை நினைவு கூர்கிறார். 

  பூர்வ ஜென்மத்தில் கயிலை நாதரான சிவனுக்கும், அன்னை சக்திக்கும் மகனாகவும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு உற்ற சகோதரனாகவும் வீரபாகு என்ற பெயரில் அவதரித்த ஒரு மாவீரனே காத்தவராயன் எனத் தெரிய வருகிறது. ஏகாம்பர நாதரான சிவனை ஒரு சந்தர்பத்தில் அன்னை பார்வதி எதிர்த்துப் பேசிவிட அதைச் சகிக்க மாட்டாத சிவன், பார்வதியைக் கடுமையாக கோபித்துக் கொண்டு எச்சரிக்கவே, மகனான வீரபாகு, பதிலுக்கு தன் தந்தையான சிவனை எதிர்த்துப் பேசி விட, கோபம் கொண்ட சிவன் இருவரையும் பூமியில் மானிடராகப் பிறப்பீர்களாக என சபிக்கவே வீரபாகு, காத்தவராயன் எனும் பெயரில் மலைப்பழங்குடி பிள்ளையாக அவதரிக்கிறார். இந்த உண்மைகள் எல்லாம் காத்தவராயன் கழுவேற்றப்பட்டதன் பின்பே தெரிய வருகின்றன. 

  காத்தவராயனின் காதல் மறுக்கப்பட்டதின் பின்னணியும் ஜாதி மற்றும் குலம் தான். 

  “என்ன தான் தெய்வத்தின் மறுபிறப்பாயிருந்த போதும், பிறப்பால் அரசிளங்குமரனாக இருந்த போதிலும் காத்தவராயனாலோ அல்லது மதுரை வீரனாலோ தாங்கள் விரும்பிய வாழ்வை, தங்களது மனங்கவர்ந்த பெண்களோடு வாழவே முடியாமலாகி விட்டது. உயிரை விட்டுத்தான் சரித்திரத்தில் நிலைத்திருக்கிறார்கள்.”

  காதலர் தினத்தைப் பற்றிப் பேசுங்கால் காதலுக்காக... காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவு கூரா விட்டால் எப்படி?!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai