ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்!

சரி தினமும் தான் குழந்தைகளை இப்படி அரக்க, பறக்க பள்ளிகளுக்கு அனுப்பித் திரும்புகிறோமே அந்த நேரத்தில் ஏதாவதொரு நொடியில் நம் குழந்தைகளின் மனதில் நம்மிடம் கேட்பதற்கென்றே சில கேள்விகள் இருக்கக் கூடுமென்று
ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்!

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...

பள்ளிக்குக் கிளம்பும் காலை நேரத்தில் ஒவ்வொரு வீடுமே ஒரு போர்க்களம் தான். அதிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளியில் பயிலும் வயதிலிருக்கும் குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி ஓய பள்ளிப்பேருந்தோ அல்லது வேனோ வரும் வரையிலும் வீட்டுக்குள் சம்பிரதாயமாக இடி, மின்னல், மழையோசை கேட்டுக்கொண்டே தான் இருக்கும். ஒருவழியாகப் பிள்ளைகளைத் தயார் செய்து வேனுக்குள் திணித்தோ அல்லது பேருந்துக்குள் ஏறக்கட்டியோ அனுப்பி விட்டு வீட்டுக்குள் நுழைந்து கதவடைத்துத் திரும்பிப் பார்த்தால் உள்ளே பிள்ளைகள் அங்காங்கே கழட்டிப் போட்டு, கிளறிப் போட்டு விட்டுப் போன பொருட்களின் சிதறல்கள் நம்மை மூச்சைடைக்க வைக்கும். அதையெல்லாம் சரி செய்து நிமிர ஏறத்தாழ முழுதாக 1 மணி நேரம் தேவைப்படலாம். இது ஒவ்வொரு வீட்டிலும் தினசரி வழக்கமான கதையே!

சரி தினமும் தான் குழந்தைகளை இப்படி அரக்க, பறக்க பள்ளிகளுக்கு அனுப்பித் திரும்புகிறோமே அந்த நேரத்தில் ஏதாவதொரு நொடியில் நம் குழந்தைகளின் மனதில் நம்மிடம் கேட்பதற்கென்றே சில கேள்விகள் இருக்கக் கூடுமென்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்போமா?

நமக்கு 1000 கேள்விகள் இருக்கலாம் நம்மைச் சார்ந்தவர்களையும், நாம் சார்ந்தவர்களையும் கேட்பதற்கு, ஆனால் குழந்தைகளுக்கு இந்த 10 கேள்விகளுக்கு மட்டுமேனும் அம்மாக்கள் பதில் சொல்லி விட்டால் போதும் அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்குமான பந்தம் இன்னும் நட்புணர்வுடன் இறுகிப் போக வாய்ப்புகளை ஈட்டித் தரும் அந்த 10 கேள்விகள் இது தான்.

  1. டெய்லி எதுக்கு மூணு வேளையும் சாப்பாடு ஊட்டி விடறேன்... சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம், கேக், சாக்லெட்லாம் சாப்பிட்ட சளி பிடிக்கும்,  வேணாம்... வேணாம்னு சொல்றயே? குழந்தைக்கு சளி பிடிக்காம ஐஸ் கிரீம், கேக், சாக்லெட்டெல்லாம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு தடவை கூட யோசிக்க மாட்டேங்கிற?
  3. பூதம் வருது... பூச்சாண்டி வருது... கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடி இருந்தே பயமுறுத்திட்டு இருக்கியே... இன்னைக்கு வரைக்கும், ஒருநாளும் அவங்களைக் காணோமே! எப்போ தான் பூதமும்... பூச்சாண்டியும்... கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி, விஜய் டி.வி, ஜீ தமிழ்னு பார்த்துக் கெட்டுப் போற... நீ ஏன் ஒருநாளாவது என்கூட சேர்ந்து சுட்டி டி.வியும், கார்ட்டூன் சேனலும் பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எத்தனையோ பேர் சொந்தக்காரங்க... பிரெண்ட்ஸ்னு இருக்கலாம்... இருந்துட்டுப் போகட்டும்... ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட  ‘தூங்கு... தூங்கு... தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு’ என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் எப்போ பார்த்தாலும் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை பாடாய்ப்படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுன்னும்... எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத... மண்ணுல விளையாடாத... காத்தடிக்குது ஓடாத கண்ல தூசு விழும், மழைல விளையாடாத... காய்ச்சல் வரும்... இப்படியெல்லாம் அடிக்கடி என்னை கண்ட்ரோல் பண்றியே, சரி  இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு? அதை ஏன் இன்னும் நீ கண்டுபிடிக்கலை?!
  10. ஒரு ஃபங்ஷனுக்குக் கிளம்பினா அந்த டிரஸ் போடு... இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற... ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? 

ஏம்மா ...ஏன்... சொல்லும்மா... ஏன்... ஏன்... ஏன்???

Image Courtesy: google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com