Enable Javscript for better performance
Tamarind tree ghosts STORY BY RKV|புளியமரத்துப் பேய்கள் - பேய் பயம் குறித்து உளவியல் சிறுகதை!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  புளியமரத்துப் பேய்கள் - பேய் பயம் குறித்து ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் உளவியல் சிறுகதை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published On : 13th March 2018 01:43 PM  |   Last Updated : 13th March 2018 01:43 PM  |  அ+அ அ-  |  

  storm-kevin-crossley-holland-5

   

   ‘பால்யத்தில் எல்லோருக்குமே பேய்கள் குறித்த பயமிருக்கும். பிறகு அது நாட்பட, நாட்பட தானே உடைந்து பேய்கள் எனப்படுபவை ஏதோ பாதாள லோகத்திலோ அல்லது எம லோகத்திலோ இருப்பவை அல்ல, அவையும் நம்முடன் நிஜமனிதர்களாக உலவிக் கொண்டிருப்பவை தான். என்ன ஒரு கஷ்டமெனில் இந்த நிஜப்பேய்களை நம்மால் சரியாக கணிக்க முடியாமல் போய் அவர்களைத் தாண்டிய அமானுஷ்ய கற்பனை வடிவங்களை சிருஷ்டித்துக் கொண்டு தினம் தினம் பயந்து செத்துக் கொண்டிருப்போம். அந்த நோக்கில் ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் உளவியல் சிறுகதை இது!’

  புளியமரத்துப் பேய்கள்...

  அது ஒரு பட்டரைப் பழைய புளிய மரம் தான். பெருத்த விசேஷம் ஒன்றும் இல்லை அதில்... இற்றுப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத் தண்டில் எக்கச்சக்கமான ஆணிகளை திசைக் கணக்கின்றி அடித்து இறக்கியிருந்தார்கள். பாரதி அக்கா, சியாமளா, சௌம்யா, ஹேமா சகிதம் பள்ளிக்கு நடந்து போகையில் பாரதி அக்கா சொல்லச் சொல்ல பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை ஜானா காதுகுளிர கேட்டிருக்கிறாள். பகலில் காது குளிரும், இரவிலோ மனம் குளிரும், போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து இறுக்க மூடிப் போதாக் குறைக்கு பாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பலநாட்கள் பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும். அந்த மரத்தின் ஐவேஜு அப்படி!

  இப்படிப்பட்ட புளிய மரத்தை நண்பர்கள் புடை சூழ கடப்பதில் ஜானாவுக்கு பிரச்சினை எதுவும் இருந்ததில்லை. 

  இன்றைக்குப் பார்த்தா இவளுக்கே இவளுக்கென்று இந்த ‘மெட்ராஸ் ஐ’ வந்து தொலைக்க வேண்டும்?

  பள்ளியில் இருந்து இன்று காலைக்காட்சியாக "திக்குத் தெரியாத காட்டில்" திரைப்படத்திற்கு கூட்டிப் போயிருந்தார்கள்... படம் பார்க்கப் போகாமல் லீவுலெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டில் இருந்திருக்கலாம், படம் பார்த்துவிட்டு வந்தது தான் தாமதம், இந்தக் கூட்டாளிக் கழுதைகள் ‘டீச்சர்... டீச்சர் ஜானகிக்கு கண் வலி டீச்சர்’ என்று போட்டுக் கொடுத்து எட்டப்பியானார்கள். அந்தக் கழுதைகளை விடுங்கள் இந்த டீச்சரை படத்தில் பார்த்த முதுமலை காட்டுக்குள் தனியே அனுப்பி தொலைந்து போக வைக்க வேண்டும் அந்தக் கடவுள்.

  கண் வலி எல்லோருக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று இந்த மிளகாய் மூக்கு பியூலா டீச்சர் கிளாசுக்குள் கால் வைக்கும் முன்னே ‘அடி பொண்ணே.... லீவுலெட்டர்லாம் கண் வலி சரியானப்புறம் தந்தா போதும்டி, கெளம்பு... கெளம்பு, எடத்தக் காலி பண்ணு’ என்று துரத்தாத குறையாக வெளியில் அனுப்பி விட்டாள்.

  அந்த டீச்சருக்கு என்ன தெரியும் இந்தப் பாடாவதி புளிய மரத்தின் கதையைப்பற்றி! ஒற்றையாய் அதைக் கடப்பதை நினைத்தாலே ஜூரம் வரும் போலிருந்தது ஜானாவுக்கு. ஜானாவின் வீட்டுக்கு வலப்பக்கம் சின்னதாய் ஒரு சோற்றுக்கடை இருக்கிறது. முன்பக்கம் சோற்றுக்கடை, பின்பக்கம் வீடு என்று புழங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த கடைக்காரர்கள்.

  கடைக்காரப் பெண் நல்ல சிவப்பி, புருஷனோ நல்ல கருப்பன். ஆண்வாரிசுகளாகப் பிறந்த ரெண்டும் ரெண்டு விதமான ஜாடையில் அம்மையையும் அப்பனையும் உரித்துக் கொண்டிருந்தன. ஜாடை ஒழிகிறது குணத்தில் அப்பனின் அச்சுக்கள். லேசுபாசாக அந்த வீட்டு ஆண்களின் குரல் காதில் விழும் போதெல்லாமும் ஒரே அதட்டல் மயமாகத் தான் இருக்கும். ஒத்தை ஆளாய் அந்தப் பெண் புருஷ அதிகாரம், பிள்ளைகள் அதிகாரம் ரெண்டுக்கும் எப்படியோ ஈடு கொடுத்துக் கொண்டு வாய்மூடி ஊமைச்சி போல இருந்து வந்தாள்.

  கேளுங்கள்... அந்தச் சிவப்பியம்மாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் கழுத்துச் சுளுக்குமட்டும் கனத்த கல்லைச் சுமந்து கொண்டு இந்தப் புளிய மரத்துக்கு கொண்டு வரப்படுவாள். கூட கோடாங்கி மாத்திரம் உடுக்கை அடித்துக் கொண்டு அந்தம்மாவைச் செலுத்திக் கொண்டு போய் உச்சந்தலை முடியில் சிலதைப் புளியமரத்து நடுத்திண்டில் ஆணி அடித்து அறைந்து விட்டு வருவான். அதற்கப்புறம் ஓரிரு நாள் அந்தம்மாள் தன் சோற்றுக்கடைக்கு பக்கவாட்டில் ஒதுக்கமாய் இருக்கும் சிமென்ட் திண்ணையில் அசந்து போய் முடங்கி பார்க்கும் நேரமெல்லாம் படுத்தே கிடப்பாள்.

  பள்ளிக்கு போகையில் ஒருநாள் பாரதி அக்கா தான் சொன்னாள், இந்தம்மாளுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று, தொத்திக் கொண்ட நாட்களில் இருந்தே பிடித்தபிடியில் போவேனா என்கிறதாம், அந்த ரயில் தண்டவாளத்துப் பேய். ஒவ்வொரு அமாவாசைக்கும் ஆணி அடித்து மாளவில்லையாம். பேய் பிடித்து ஆட்டும் நாட்களில் புருஷனைக் கிட்டக் கண்டால் சங்கைப் பிடித்து கடித்து ரத்தம் உறிஞ்சாக் குறையாக ஆத்திரப் படுவாள் அந்த சிவத்தம்மாள்.

  பாரதி அக்காவுக்கு மட்டும் எப்படியோ எல்லாமும் தெரிந்து விடுகிறது. அவளுடன் பள்ளிக்கு மட்டுமல்ல சாயந்திர தெரு முக்கு விளையாட்டுகளிலும் கூட்டு சேர பிள்ளைகளிடையே போட்டா போட்டி நடக்கும். அத்தனை பிரபலஸ்தியாக இருந்தாள் ஜானாவின் பாரதி அக்கா.

  பியூலா டீச்சர் ‘வீட்டுக்குப் போடி’ என்றதும் ஜானா ஒன்பதாம் வகுப்பு ‘பி’ செக்சனில் இருக்கும் பாரதி அக்காவை தான் துணைக்குத் தேடிப்போனாள், கூப்பிட்டால் பாரதி அக்கா மறுக்கமாட்டாள் தான் ...ஆனால்அன்றைக்கென்று அவளுக்கு மத்தியானப் பீரியடில் கிராஃப் பரீட்சை வந்து தொலைக்க கணக்கு டீச்சர் எசக்கி கூப்பிடப் போன ஜானாவை வயிற்றைப்பிடித்துக் கிள்ளி;

  ‘ஏண்டி இந்தப் பட்டப் பகல்ல மெயின் ரோட்டோரமா நடந்து போக உனக்கு துணைக்கு ஆளு வேணுமாக்கும், தோலை உரிச்சுப் போடுவேன், உன்னோட சேர்த்து அவளும் கிளாஸுக்கு மட்டம் போடணுமோ... தனியாவே போய்க்கோ, உன்ன ஒன்னும் பிசாசு பிடிக்காது... போ..போ’

  என்று துரத்தி விட்டாள்.

  சியாமளா, சௌம்யாவைக் கூப்பிடலாம்; யாராவது ஒருத்தர் கூட வந்திருப்பார்கள். 

  ஜானாவுக்கு நாக்கில் சனி... சியாமளா, சௌம்யா, ஹேமா, ஜானா எல்லோருமே ஒரே செக்சனில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில். முழுப் பரீட்சை வந்தது, வழக்கப்படி கடைசிப் பரீட்சை முடிந்து அடுத்து ரெண்டு மாசம் லீவுலே... என்று சந்தோசம் பீரிட்டுப் பாய வீட்டுக்கு நடக்கையில் கேலி போல ஏதோ பேச்சு வாக்கில் சியாமளாவைப் பார்த்து; ‘சியாமி நீ அடுத்த வருசமும் கோட்டடிச்சு ஏழாப்புல தான் உட்காரப் போற’ என்று சொல்லி விட்டு நாக்கைக்கடித்து அழகு காட்டினாள்.

  இது சியாமிக்குப் பிடிக்கவில்லை. போதாக் குறைக்கு அவள் ஏற்கனவே ஒரு வருஷம் கோட் அடித்து தான் ஏழாப்பில் உட்கார்ந்திருந்தவளும் கூட, அதே வகுப்பில், அடுத்த வருஷன் அவளுக்கு அடுத்த வகுப்பிலிருந்த தங்கை சௌமி; அக்காவுடன் உட்கார ஒரே வகுப்பில் வந்து சேர அதுவே அவளுக்கு பெரிய இழிமானமாய் இருந்து வந்தது. ஜானா வேறு இப்படிச் சொல்லி விட்டாளா! ரொம்பக் கொதித்துப் போனாள் சியாமி.

  சொல்லி வைத்தார் போல அவள் அந்த வருசமும் ஏழாப்பில் கோட் அடித்து அங்கேயே இருக்க வேண்டியதானது. சௌமியும், ஜானாவும் எட்டாப்பு போனார்கள். ‘கருநாக்கு ஜானா நீ சொல்லித் தாண்டி எங்கக்கா பெயிலாப் போனா என்று சௌமியும் ஜானாவுடன் ‘கா’ விட்டு இந்த வருடம் முழுக்க பேசாமலே இருந்து வந்தாள்.

  ஆகக் கூடி இப்போது ஜானா கூப்பிட்டால் ரெண்டு கழுதைகளுமே மூஞ்சியைக் கூடத் திருப்பப் போவதில்லை. கேளாமல் இருப்பதே நல்லது, என்றெண்ணிய மாத்திரத்தில் ஜானாவுக்கு மறுபடியும் புளிய மரத்துப் பேய்களின் ஞாபகம் வந்து மருட்டியது. கூடவே அங்கே நித்ய கடமையாக ஆணி அடித்துக் கொண்டிருக்கும் சிவத்தம்மாள் ஞாபகமும் வந்து தொண்டை வறண்டது. எண்ணெய் கேனில் கொண்டு போயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு மூடிக் கூடையில் வைத்துக்கொண்டாள் .

  இதொண்ணும் உச்சிக் காலமில்லை; அதனால் பேய்கள் உக்கிரமாய் ஒன்றும் இருக்கப்போவதில்லை. அதனால் தனியே போனாலும் பரவாயில்லை என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளப் பார்த்தாள்.

  அதற்குள் ரெண்டாம் மணி அடித்து கிளாசுக்குள் வந்த பியூலா டீச்சர்... முகத்தைச் சுளுக்கிக் கொண்டு;

  ‘ஏண்டி இன்னுமா நீ போகல? கிளாஸ்ல எல்லாத்துக்கும் கண்ணு வலிய ஓட்டவச்சுப்பிடுவ போல இருக்கே. என்னடி அக்கப்போரு உன்கூட... இப்போ நீ போகப்போறியா இல்லா பெரம்புல ரெண்டு சாத்து சாத்தனுமா?’

  என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொல்லவே ஜானாவுக்கு அவமானத்தில் லேசாகக் கண் கலங்கியது. 

  இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான். வகுப்புப்பிள்ளைகள் மாட்டிக்கொண்டால் அவர்களை வார்த்தையாலேயே ஊசி போலக் குத்திக் கிண்டிக் கிழங்கெடுக்காமல் விடவே மாட்டாள்... என்று மனசுக்குள் வைது கொண்டே தன் புத்தகப்பை, மதியச் சாப்பாட்டுக் கூடை சகிதம் பள்ளியில் இருந்து வெளியில் வந்து வீட்டை நோக்கிப் போகும் மெயின்ரோடில் நடக்க ஆரம்பித்தாள்.

  ஈசன் நோட்ஸ் கடை கடந்து போனது... அம்பாள் மெடிகல்ஸ், அய்யனார் லாரி செட், குருவி குளம் ஸ்பீக்கர் செட் கடை. ரோகிணி பாத்திரக் கடை எல்லாம் ஒவ்வொன்றாய் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. 
  மெயின் ரோட்டில் வாகனங்கள் விரைந்தபடி இருந்தன.

  அப்பா... இந்நேரம் இந்தப்பக்கம் டி. வி.எஸ் பிஃப்டியில் வந்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எத்தனை சந்தோசமாய் இருக்கும், ஒரு நிமிஷம் இப்படி நினைத்து விட்டுப் பிறகு அவர் எப்படி இந்நேரம் இந்தப் பக்கம் வரமுடியும்? என்ற ஏமாற்றத்தில் முகம் கசங்கினாள் ஜானா.

  பக்கத்து வீட்டு செக்யூரிட்டி அங்கிள் கூட சாயந்திரமாகத் தான் இந்தப்பக்கமாக வண்டியில் போவார். இப்போது தெரிந்தவர்கள் யாரும் போக வாய்ப்பே இல்லையே, ஜானா யோசித்தவாறு போய்க் கொண்டிருந்தாள் .

  ஜெருசலேம் சபை... என்று போர்டு போட்ட சின்னக் குடில் ஒன்றுவந்தது. அங்கிருக்கும் ஒரு ஊழியக்காரப் பெண்ணை ஜானாவுக்கு தெரியும் என்பதால் பயத்தில் இருந்து தப்பிக்க கொஞ்ச நேரம் அங்கே நுழையலாமா என்று யோசனை வந்தது .

  குடிலுக்கு நேராகப் போய் எட்டிப் பார்த்தால், அங்கே சின்னப் பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் ஏமாற்றத்துடன் ஜானா மேலே நடந்தாள்.

  அடுத்து பத்தெட்டில் முத்து மாரியம்மன் கோயில் வரும். இந்நேரம் கோயில் பூட்டி இருக்கும்.

  அடுத்து சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளிக்கூடம் ஒன்று வரும், அதைத் தாண்டினால் வெறும் பொட்டல் தான் கொஞ்ச தூரத்துக்கு வீடுகளே இருக்காது ...

  அப்புறம் புளிய மரம் தான்.

  அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

  சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக்குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்தியானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போல புத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்களாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்க யோசித்துக் கொண்டு அவள் சாலையின் வலமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

  தூரத்தே ஒரு லாரி தவிர்த்து வேறு எந்த அரவத்தையும் காணோம் சாலை நெடுக...

  கூப்பிடு தூரத்தில் புளியமரம், சுற்றுப்புறம் பெருத்த அமைதியில் உறைந்து, வெயிலில் உறங்கும் பாவனையில் மரங்களின் இலைகள் கூட அசையக் காணோம்.

  புளிய மரம் நெருங்க நெருங்க கிளைகளில் காய்ந்து சருகாகிப் போன செவ்வந்தி மாலைகள் கண்ணுக்குப் புலனாகின. இசக்கிக்கு படைத்திருக்க கூடும் யாரோ! உடைந்த பாட்டில்கள் ஒரு பக்கம் ஓரமாகக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் நெருங்க... தண்டில் அடிக்கப் பட்டிருந்த ஆணிகள் கண்ணில் அறைந்தன. ஆணிகளைக் கண்டால் உள்ளபடிக்கு பயம் இருக்குமிடத்தை விட்டு பெருங்கொண்டதாய் எழுந்து ஆட ஆரம்பித்து விடுகிறது. என்னவோ ஆணி தன் உச்சந்தலையிலேயே அடித்தார் போல.

  சாலை விதிக்கொப்ப இடப்பக்கமாகவே சென்று கொண்டிருந்த ஜானா, என்னவோ புளிய மரத்தின் கண்ணில் மண்ணைத்தூவிய பாவனையில் வலப்புறத்திற்கு மாறிக் கொண்டால் பதுங்கிப் பதுங்கி. எல்லாமொரு ‘ஜாலக்’ தான். பேய் தொற்றிக் கொள்ள நினைத்தால் எப்படிவேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும் என்று சித்தி சொல்லி இருக்கிறாள் முன்பே.

  வலப்புறத்து ரோட்டோரோம் ஒரு வற்றிப் போன ஓடை உண்டு, இப்போது வெறும் வெள்ளை மணல் பரப்பு தான் கண்ணைக் கூச வைத்துக் கொண்டிருந்தது, மழைக்காலங்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் நீரோடும். பாதாளச்சாக்கடைக்கு எனக் குழி தோண்டுகையில் பதிக்காமல் மீந்த பெரிய பெரிய குழாய்கள் நாலைந்து அந்த ஓடையில் தான் நிறுத்தப்பட்டிருந்தன. வெயிலுக்கு அணைவாகச் சில நேரங்களில் ஆடு மாடுகள் நாய்கள் அங்கு ஒதுங்கும் .

  பேய் பயத்திலும் பெரிய பயமாக இப்போது நாய் பயம் வேறு. தெரு நாய்கள் பெருத்துப் போன நாட்கள் அவை.

  ஜானா அந்த ஓடை விளிம்பு வரை போகாமல் அதை ஓட்டிக்கொண்டே தன் வீட்டைப் பார்த்து சலனத்தோடு நடக்கையில்; சலனமே இல்லாமல் ரோடும், வெயிலும் காய்ந்து கொண்டிருந்தன.

  வியர்த்து வழிந்த முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு, எட்டு குயர், பத்து குயர் நோட்டுகளும், புத்தகங்களும் திமிறிய தன் பையை திணறலுடன் தோள்மாற்றிப் போட ஒரு நிமிடம் நின்றவள் தனக்குப் பின்புறமிருந்து முன்னோக்கி நீண்ட பெரிய நிழலைக் கண்டு சன்ன விதிர்ப்புடன் திடுக்கிட்டுப் போனாள்.

  ஐயோ பேய் தான் வந்துடுச்சா! கழுத்தின் ஓம் சக்தி டாலரை கை இறுக்கப் பற்றிக் கொள்ள கண்களை இறுக்கி மூடிக் கொண்டு

  ‘ஓம் சக்தி... பரா சக்தி... ஓம் சக்தி பரா சக்தி’

  என்று முணு முணுத்துக் கொண்டே அழாக்குறையாக ஆணி அடித்தார் போல அசையாது நின்றவள்... இமைகளின் மேல் நிழல் நீங்கி வெள்ளை வெயில் சுடவும் மீண்டும் கண்ணைத் திறந்தாள்
  பேயும் முனியும் தான் உள்ளே சதா எட்டி எட்டிப் பார்த்து அரட்டிக்கொண்டிருக்கின்றனவே.

  ஆனால் அந்த நிழல் பேயுமில்லை... முனியுமில்லை

  பக்கத்து சோற்றுக்கடையின் சொந்தக்காரி, அந்த சிவத்தம்மாவின் கருத்த புருஷன் தான் ஜானாவை தாண்டிக் கொண்டு ரோட்டில் போய்க் கொண்டிருந்தான் .

  போன மூச்சு திரும்பி வந்தது.

  வீட்டுக்குத்தான் போகிறான் போலும். இந்த ஆளைத் தொடர்ந்து போனால் போதும் வீடு வரை.

  அப்பாடா என நிம்மதி பெருமூச்சுடன் அவன் பின்னே நடையை எட்டிப் போடப்போகையில் பின்னால் மறுபடி கொலுசுச் சத்தம்.

  ‘ஏதடா துன்பம்’ என்றெண்ணும் முன் ஓடைப்புறத்து குழாய் ஒன்றில் இருந்து நைலக்ஸ் சேலையை இழுத்து விட்டுக் கொண்டவளாய் பெட்டிக் கடை மீனாட்சி ஜானாவுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடி! இனி பயமே இல்லை. ஒற்றைக்கு ரெண்டு பேர் துணை கிடைத்த பின் என்ன பயம்?

  முன்னால் போய்க்கொண்டிருந்த கருப்பன் ஒரு நிமிஷம் திரும்பி ஜானாவைப் பார்த்து சிரித்தான்.

  பதிலுக்கு ஜானாவும் சிரித்து வைத்தாள்.

  ஒரு வழியாய் வீடு வந்தது .

  புத்தகப் பையை மூலையில் கடாசி விட்டு ஓட்டமாய் போய் அம்மாவிடம் தான் புளிய மரத்தைக் கடக்கப் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னால் தான் மனசாறும் போலிருந்தது அவளுக்கு.

  துவைக்கும் கல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டு அம்மா துணிகளுக்கு சோப்பு போடப் போட நுரைக்குமிழிகளை கிள்ளிக் கிள்ளி உடைத்துக் கொண்டே இவள் சொன்ன கதையைச் சன்னப் புன்னகையோடு கேட்டுக் கொண்டே வந்த அம்மா கடைசியில் கருப்பனையும், மீனாட்சியையும் பற்றிச் சொல்லும் போதுமட்டும் களுக்கென சிரித்து; 

  ‘ம்ம்...அப்போ நிஜப்பேய்க கூட பயமில்லாம நடந்து வந்தன்னு சொல்லு’ என்றவாறு பிழிந்த துணிகளை உலர்த்த கொடிப் பக்கமாக நகர்ந்தாள் .

  ‘நிஜப் பேய்களா... ஏம்மா! ஜானாவின் முதிராத குழந்தை முகம் கேள்வியில் விரியக் கண்டு அம்மா யோசனையுடன்; ‘அதொண்ணுமில்லை பாட்டி கேப்பமாவுச்சீடை பண்ணிருக்கா, போய்த் தின்னுட்டு கண்ணுக்கு மருந்து வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாக்கு ஃபோனப் போடு போ’ என்று பிளாஸ்டிக் வாளியுடன் கிணற்றுப்பக்கம் தண்ணீர் இறைக்கப் போய் விட்டாள் .

  பாட்டி தந்த கேப்பச் சீடையை மென்று விழுங்கும் போது ஜானாவுக்கு குழப்பமாக இருந்தது;

  அந்த சோற்றுக்கடை சிவத்தம்மா புருஷன் தன்னைப் பார்த்து சிரித்தானா, இல்லை பெட்டிக் கடை மீனாட்சியைப் பார்த்து சிரித்தானா? குழப்பத்துடன் அம்மாவைப் போலவே ‘களுக்’கென்று சிரித்துக் கொண்டு ‘நிஜப் பேய்கள்’ என்று ஒருமுறை மெல்லச் சொல்லிப் பார்க்கையில் திடீரென்று தான் பெரிய மனுஷியானார் போல் ஒருபிரமை வந்தது ஜானாவுக்கு.

  அன்றைக்கு அமாவாசை சிவத்தம்மாள் வழக்கம் போல் புளிய மரத்தில் ஆணி அடிக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறாளென உடுக்கை சத்தம் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது ஊருக்கும் ஜனாவுக்கும்.

  Image courtesy: Google


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp