உடற்பயிற்சிக்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?
By | Published On : 16th November 2021 05:07 PM | Last Updated : 16th November 2021 05:07 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் உடல் உழைப்பு என்பது இன்று பெருமளவில் குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள், புதிய கண்டுபிடிப்புகளால் உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. மேலும் உண்ணும் உணவுப் பொருள்களின் மாறுபாட்டினாலும் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக உண்ணும் உணவாலும் உடல் இயக்கமின்மையால் சாப்பிட்ட உணவு செரிக்காமலும் உடலில் கொழுப்புகள் சேர்வதாலும் உடல் பருமன் ஏற்படுகிறது. அதன்விளைவாக நீரிழிவு, இதய நோய்கள் என்று தொடர்கிறது.
இதனால், உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி செய்வது உடல்நலத்துடன் மனநலத்துக்கும் நல்லது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பதட்டம், மனச்சோர்வு ஏற்படுவது குறைவு என்று கலிபோர்னியா ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்தவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்களைக் காட்டிலும் குறைவான பதட்டம் மற்றும் மனச்சோர்வை கொண்டிருந்ததாக இந்த ஆய்வு காட்டுகிறது.
வீட்டிற்குள் முடங்கியிருத்தலும் உடல் இயக்கமின்மையுமே பதட்டம், மனச்சோர்வுக்கு காரணம் என்று கூறும் ஆய்வாளர்கள், வெளியில் செல்பவர்கள், தொடர்ந்து வீட்டிலேனும் உடற்பயிற்சி செய்தவர்களின் மனநலன் மேம்பட்டு இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகள் 'பிரிவென்ட்டிவ் மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
எந்தவொரு சூழ்நிலையிலும் உடல், மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் இந்த உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் செயல்பாடு மற்றும் இயற்கையோடு செலவழிக்கும் நேரம் ஆகியவை மேம்பட்ட மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. எனவே, உடல்நலத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். இந்த இரண்டும் கிடைக்க நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை, மாறாக, வீட்டிலயோ அல்லது அருகில் உள்ள பூங்காக்களுக்குச் சென்றோ செய்யலாம். முடிந்தவரை இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பெறுங்கள்.