ஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு கட்டி புற்றுநோயாக இருக்கலாம்! - மருத்துவர் நேர்காணல்!
- டாக்டர் ஆர். பாலாஜி
என்னுடைய 20 வருட அனுபவத்தில் சமீபமாக நான் ஆர்வமாக செய்யக்கூடிய அறுவை சிகிச்சை தைராய்டு அறுவை சிகிச்சை. ஏனெனில் மற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளுமே புதிதாகப் படித்து முடித்தவர்கள்கூட செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், தைராய்டு அறுவை சிகிச்சைகள் ஏன் மிகவும் முக்கியம் என்றால் ஆரம்பத்தில் தைராய்டு அறுவை சிகிச்சையின்போது வெறும் கட்டியை மட்டும் அகற்றினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனுள் ஆழமாகப் போகும்போது கட்டியை எடுப்பது முக்கியமல்ல, அங்குள்ள தைராய்டு சுரப்பியில் இருந்து குரல்வளைக்குச் செல்லக்கூடிய நரம்புகள் பாதிக்கப்படும்போது குரல்வளம் இல்லாமல் போய்விடும்.
அதற்கு மேலே மற்றொரு குரல்வளை நரம்பு ஒன்று இருக்கிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், ஆரம்ப காலங்களில் நாங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆனால் பிற்காலத்தில்தான் அது எவ்வளவு முக்கியமான நரம்பு என்பது தெரிய வருகிறது. ஒரு குரல் 'கணீர்' என்று இருக்கும் தன்மைக்கு அந்த நரம்புதான் காரணமாகிறது. ஆக, இந்த இரண்டு நரம்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அடுத்து பாரா தைராய்டு சுரப்பிகள் இருக்கின்றன. தைராய்டு சுரப்பியின் நான்கு ஓரங்களிலும் அதாவது மேலே இரண்டு, கீழே இரண்டு என பாரா தைராய்டு சுரப்பிகள் இருக்கும். அதுதான் நமது உடலில் கால்சியம் சமநிலைக்கு மிக முக்கியமான சுரப்பி. உதாரணத்திற்கு அறுவை சிகிச்சையின்போது பாரா தைராய்டு சுரப்பியை நீக்கிவிட்டால் அவர்கள் வாழ்க்கை முழுக்க கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். கால்சியம் மாத்திரை ஒரு நாளைக்கு மூன்று வேளை என ஒரு 20 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டால் ஒரு லாரியில் ஏற்றும் அளவிற்கான கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கும்.
அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து படிப்படியாகச் செல்லும்போது முழுக்க முழுக்க தைராய்டில் உள்ள கட்டியை மிகக் குறைந்த அளவு ரத்தப்போக்குடன் மேற்கொண்டு வருகிறோம். நரம்புகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராத அளவுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இரண்டு முக்கிய நரம்புகள் மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளை பாதுகாக்கும் வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
சமீப காலங்களில் தைராய்டு கட்டி அறுவை சிகிச்சையில் தழும்புகள் வேண்டாம் என நோயாளிகள் கேட்கிறார்கள். அதாவது எண்டோஸ்கோபி அல்லது ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை கேட்கிறார்கள். அதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம், குணமாவது முக்கியமா அல்லது வெளியில் தெரியும் அந்த சிறிய தழும்பு முக்கியமா என்பதைப் பார்க்க வேண்டும்.
தழும்பு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று மருத்துவர்கள் எண்டோஸ்கோபிக் மூலமாக மேற்கொள்ளும்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். பரந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கும் சிறிய இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அதேபோல தைராய்டு கட்டியில் கேன்சர் இருக்கும் அபாயம் தெரிந்தால் எண்டோஸ்கோபி அல்லது ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டிய தேவையில்லை. முழுமையாக குணமடைவது மட்டும்தான் நம்முடைய முழு நோக்கமாக இருக்க வேண்டும்.
தைராய்டு சுரப்பியில் ஒரு பக்கம் மட்டும் சிறிய கட்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு மிகவும் சிறிய கட்டிகள் என்று சொல்லப்படக்கூடிய சிஸ்ட்டுகள் இருக்கும். அது புற்றுநோய் அல்ல என உறுதி செய்யப்பட்டு விட்டால் அந்த நோயாளிகளுக்கு வாய் வழியாக துளை போட்டு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். உடலின் வேறு பகுதியில் துளை போட்டு ரோபோடிக் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம்.
எந்த வகையான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் விட்டுவிடுவது நல்லது. நோயாளியான நீங்கள் முடிவெடுத்தால் அது இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். முடிவுகள் இருவருக்குமே திருப்தி இருக்காது.
ஏனென்றால், 2 செமீ அளவில் மிகச்சிறிய துளை போட்டுவிட்டு 10 செமீ அளவு பெரிய கட்டிகளை வெளியே எடுக்க முடியாது. இதெல்லாம் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள். ஏனெனில் இப்போது பலரும் கூகுளில் பல விஷயங்களை அரைகுறையாக தெரிந்துகொண்டு அவர்களும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். முழுமையாக தெரியாத விஷயங்கள் ஆபத்தானது.
ஒரு சில நோயாளிகள் தைராய்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் அவர்களுடைய இனிமையான குரலை இழந்துவிட்டனர். அவர்களுடைய வாழ்க்கையே முடிந்ததாகக் கூறினர். அது என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம்தான் நான் தைராய்டு அறுவை சிகிச்சை குறித்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதனின் அடையாளம் குரல்தான். குரலுக்கு ஒரு தனி சக்தி இருக்கிறது. எனவே அந்த குரலை தக்கவைக்க வேண்டும் என இந்த துறையில் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறோம்.
கழுத்தின் முன்பகுதியில் கட்டி வந்து வேகமாக வளர்ச்சி அடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 15 வயதுக்குக் கீழே, 65 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தைராய்டு சுரப்பியில் கட்டி வந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. ஏனென்றால் இவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. வேகமாக வளரக் கூடியது.
அதுவே இடைப்பட்ட வயதினருக்கு கட்டி வேகமாக வளர்கிறது என்று மருத்துவர்கள் சொன்னால் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆண்களுக்கு தைராய்டு சுரப்பியில் கட்டி இருந்தாலே அதை நீங்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஆண்களுக்கு வருகிற தைராய்டு கட்டி பல நேரங்களில் புற்றுநோயாக மாறுகிறது.
தைராய்டு சுரப்பியில் முதல் கட்ட பரிசோதனையில் புற்றுநோய் இல்லை என்று முடிவுகள் வருகின்றன. ஆனால் அடுத்தகட்ட பயாப்சி பரிசோதனையில் புற்றுநோய் எனத் தெரிகிறது. அதனால் கட்டி இருந்தால் முழு பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். கட்டிகளை உடனே அகற்றிவிட வேண்டும்.
புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோய் மட்டும்தான் எளிதில் குணப்படுத்தக்கூடியது. 100% குணப்படுத்தக்கூடியதும்கூட. மற்ற புற்றுநோய்களை கட்டுப்படுத்தவே முடியும். தைராய்டு புற்றுநோயை குணப்படுத்த முடியும். அதனால் தைராய்டு சுரப்பியில் கட்டி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
(கட்டுரையாளர் - காது, மூக்கு, தொண்டை(ENT) தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்)