ஆற்றுப்படுத்துதல்! பாலியேட்டிவ் கேர் என்பது என்ன? நோயாளிகளுக்கு, முதியோருக்கு ஏன் அவசியம்?

'பாலியேட்டிவ் கேர்' எனும் சிறப்பு மருத்துவப் பராமரிப்பு சிகிச்சை பற்றி...
Palliative Care
கோப்புப்படம்ENS
Published on
Updated on
3 min read

தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் ஒரு சிறப்பு சிகிச்சை முறைதான் 'பாலியேட்டிவ் கேர்'. இது ஏன் தேவைப்படுகிறது? யாருக்கெல்லாம் அவசியம்?

'பாலியேட்டிவ் கேர்' என்பது சிறப்பு துணை மருத்துவ சிகிச்சை/பராமரிப்பு என்று கூறலாம். நோயாளிகளின் உடல் மற்றும் மன வலியைக் குறைக்கக்கூடிய ஒரு சிறப்பு மருத்துவ சிகிச்சை முறை. மிகவும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கண்ணியத்துடனும் மன உறுதியுடனும் நோய்களை எதிர்கொள்ள உதவும் ஒரு பலதுறை அணுகுமுறை.

இந்த சிகிச்சை நோயாளியின் வலி, மன அழுத்தம், நோய் அறிகுறிகள் ஆகியவற்றைக் குறைத்து அவர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மேம்படுத்தும். வயது வரம்பின்றி அனைத்து வயதினருக்கும் நோயின் தன்மை எப்படி இருந்தாலும், தேவைப்படும்பட்சத்தில் அவர்களுக்கு இந்த சிகிச்சை தரப்படுகிறது.

குறிப்பாக மரணத்தை நெருங்கியிருக்கும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் நோய் அறிகுறிகள், மன அழுத்தம் ஆகிவற்றில் இருந்து விடுபடுகிறார்கள். செவிலியர்கள், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள், உளவியலாளர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் இந்த சிகிச்சை பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நோயாளிகளை மிகவும் அன்புடன் கவனித்து அவர்களை உணர்ச்சிரீதியாக வலிமையாக உணரச் செய்வர். டிமென்ஷியா, புற்றுநோய், இதய செயலிழப்பு, சிறுநீரக பிரச்னை, நுரையீரல் நோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியைக் குறைக்க உதவுகிறது. நோயாளியின் குடும்பத்தினருக்கும் இந்த சிகிச்சையில் ஆறுதல் அளிக்கப்படுகிறது.

ENS

ஒரு நோயின் ஆரம்பத்தில் இருந்தே மருத்துவச் சிகிச்சையுடன் இந்த சிறப்பு கவனிப்பும் வழங்கப்படலாம் அல்லது நோயாளிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது முதல் தொடங்கலாம். எனினும் வயதானவர்களுக்கு முன்கூட்டியே தொடங்குவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதில் ஐசியு எனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, பிறந்தவுடன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மகப்பேற்றின்போது பெண்களுக்கு, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை என பல பிரிவுகள் உள்ளன.

இந்த சிகிச்சையில் ஈடுபடுபவர்கள் மிகவும் மென்மையானவராக அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும், நோயாளியின் தேவையை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும், ஒருபோதும் கோபப்படவோ, அருவறுப்புடன் நடந்துகொள்ளவோ கூடாது. இதற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் பிள்ளைகள், நோய்வாய்ப்பட்ட தங்கள் பெற்றோர்களைக் கவனிப்பது பல்வேறு காரணங்களால் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் முதியவர்களை கவனித்துக்கொள்ளும் இந்த சிகிச்சை முறை அவசியம் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் முதியவர்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், இது அவர்களின் இறப்பை தள்ளிப்போட உதவும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

நோயைக் குணப்படுத்துவது இதன் நோக்கமல்ல, நோய்க்கான சிகிச்சையினால் ஏற்படும் வலி, மூச்சுத் திணறல், சோர்வு, பதற்றம், குமட்டல் என மருந்துகளின் பக்க விளைவுகளை நிர்வகிக்க உதவும்.

ஆஸ்டர் ஆர்.வி. மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராகவேந்திர ராமஞ்சுலு, இந்த பாலியேட்டிவ் கேர் சிகிச்சை இறுதிக்கட்ட நோய்களுக்கு மட்டுமானது அல்ல. குணப்படுத்தும் நோய்களுக்குமானதும்கூட. நோய்களின் ஆரம்ப நிலையிலேயே இந்த சிகிச்சையைத் தொடங்குவதன் மூலமாக மருத்துவ சிகிச்சைகளை எளிதாக்கலாம், சிக்கலைகளையும் குறைக்கலாம். ஏனெனில் வயதானவர்களிடையே இது பசி, தூக்கம், மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் மருத்துவ சிகிச்சையில் அதிக வலி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல், மலச்சிக்கல், குழப்பம் போன்ற பிரச்னைகளை நோயாளிகள் எதிர்கொள்கின்றனர். சிறப்பு மருத்துவக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் கவனிப்புகள் நோயாளிக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும். நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப இதற்கென மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. வீட்டில் இருந்தும் இந்த சிறப்பு கவனிப்பு சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். நோயாளிக்கு உதவுதல், மன நல ஆலோசனைகள் என அனைத்தும் இதில் அடங்கும்.

இந்த பாலியேட்டிவ் கேர் சிகிச்சையின் செலவு, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், பொது சேவையா அல்லது தனியார் சேவை தேவையா? நோயாளியின் நோயின் தீவிரம், எந்த அளவிலான பராமரிப்பு தேவை என்பதைப் பொருத்தது என ராமையா மருத்துவமனையின் டாக்டர் அஷ்வின் குல்கர்னி கூறுகிறார்.

இருப்பினும் மிகவும் குறைந்த விலையில் அல்லது இலவச சிகிச்சை வழங்கும் இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் சமூக அமைப்புகள் பல இருக்கின்றன.

கேரள அரசு, இந்த நோய் சிறப்பு பராமரிப்பை ஆரம்ப சுகாதார அமைப்பில் இணைத்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களும் இதனை பின்பற்றி வருகின்றன.

ஒரு நோய்க்கு சிகிச்சை அளிப்பது வழக்கமானது மற்றும் சாதாரணமானது. ஆனால் அதைவிட அந்த சிகிச்சையை நோயாளி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரது உடலும் மனமும் வலிமையுடன் இருக்க வேண்டும். அதற்கு இந்த நோய்த் தடுப்பு பராமரிப்பு அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Summary

What is Palliative Care? what is the purpose and what to expect from this special treatment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com