

-அன்னா ஜோஸ்
பெண்கள் பலருக்கும் தற்போது உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையால் திருமணமான, குழந்தை பெற்ற பெண்கள் மட்டுமன்றி இளம்வயது பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இளம்வயதிலேயே பிசிஓஎஸ், கருப்பையில் நீர்க்கட்டிகள், மாதவிடாய் சுழற்சி ஒழுங்கின்மை உள்ளிட்டவற்றால் திருமணத்திற்குப் பின்னரும் கர்ப்பமாவதில் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி விளக்குகிறார் லக்னெள வெல்னஸ் கிளினிக் உணவியல் நிபுணர் டாக்டர் ஸ்மிதா சிங்.
நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...
உணவு குறித்த கலாசார, சமூகக் கட்டுப்பாடுகள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?
கலாசார எதிர்பார்ப்புகள், பொறுப்புகள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு உணவுப்பழக்கவழக்கம் சரியாக இருப்பதில்லை. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுகிறார்கள்.
உணவு தேவையான அளவைவிட அதிகமாகச் சாப்பிடும்போது நீரிழிவு, தைராய்டு, இதய நோய்கள் போன்ற வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதேநேரத்தில் மிகக் குறைவாகச் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உடலுக்கு அவசியம் தேவைப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் இல்லாமல் போவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். ஒரே அளவு உணவு, அது தயாரிக்கப்படும் விதத்தைப் பொருத்து வெவ்வேறு ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டிருக்கலாம். நாம் தயாரிக்கும் உணவில் என்னென்ன சத்துகள் அடங்கிய பொருள்களைச் சேர்க்கிறோம் என்பதைப் பொருத்து பயன்கள் இருக்கின்றன.
பெண்கள் பலரும், வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுமுடித்து மீதமான அல்லது பழைய உணவையே சாப்பிடுகிறார்கள். சிலர் வீணாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து சூடுசெய்து சாப்பிடுகிறார்கள். இது உணவில் ஊட்டச்சத்து குறைவதற்கு வழிவகுப்பதுடன் உடல்ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும். பெண்களின் உடல்நலனுக்கு சமச்சீரான உணவு அவசியம். அவ்வாறு இல்லையெனில் பெண்களுக்கு வளர்சிதை மாற்றக் கோளாறுகள், உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகம்.
பிசிஓஎஸ், கர்ப்பம், மெனோபாஸ்(மாதவிடாய் நிறுத்தம்) உள்ளிட்டவற்றால் பெண்கள் அதிகமாக ஹார்மோன் மாற்றங்களைச் சந்திக்கிறார்கள், இது உணவு முறையை எவ்வாறு சிக்கலாக்குகிறது?
இன்று 60% க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பிசிஓஎஸ் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் உடலில் மாதவிடாய் சுழற்சிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி ஆவதில்லை.
ஆரோக்கியமற்ற மோசமான உணவுப் பழக்கம், உடல் பருமன், இரவு நேரங்களில் தாமதமாகச் சாப்பிடுவது உள்ளிட்டவை இந்த பிரச்னைகளை மோசமாக்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் உணவு முறைகளும் உணவுகளும் அதிகரித்துவிட்டன. ஆனால் அவை அனைத்தும் ஆரோக்கியமானவை அல்ல. இதுவே ஹார்மோன் மாற்றங்கள், ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக அமைகிறது.
பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்டும் காலத்தில் அதைச் செய்வதில்லை. பாலூட்டும்போதுதான் அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் குறிப்பாக புரதம், கால்சியம் தேவைப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு ஏற்கெனவே உடல் பலவீனமாக இருக்கும். இத்துடன் போதுமான ஊட்டச்சத்து இல்லை என்றால் நீண்ட கால எலும்பு பிரச்னைகள் வரலாம், வரும் காலத்தில் மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தையும் இது அதிகரிக்கும். அதனால் பெண்கள் குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.
பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
பெண்கள் பொதுவாக மன அழுத்தம், மனச்சோர்வில் இருக்கும்போது அதனைக் குறைப்பதற்கு நன்றாகச் சாப்பிடுவதாகக். கூறப்படுகிறது. அவ்வாறு சாப்பிடும்போது மன அழுத்தம் குறைவதாகவும் பலராலும் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு சாப்பிடுவது ஒரு சமூக அழுத்தமாகும். இதைப்பற்றி யாரும் விவாதிப்பதில்லை. பெண்கள் பலரும் தங்களுக்கு பசி இல்லாதபோதும் கட்டாயத்தின்பேரில் உடனிருப்பவர்கள் சாப்பிடுவதற்கு துணையாக தானும் சாப்பிடுகிறார்கள். அதேபோல அவர்கள் பசிக்கும் நேரத்தில் சாப்பிட முடிவதில்லை. இவையெல்லாம் ஒரு ஆரோக்கியமற்ற உணவு முறையாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்களும் மனதை ஒருமுகப்படுத்துவதும் சரியான உணவு முறைக்கு எவ்வாறு உதவுகின்றன?
விழிப்புணர்வுதான் முதல் படி. பெண்கள் தங்களுடைய உடல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவு உங்களுக்கு ஆற்றலையும் மகிழ்ச்சியையும் அளித்தால் அது நல்லது. அதுவே உங்களை மந்தமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர வைத்தால், அது ஆரோக்கியமானதல்ல.
உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்று உணவுகள் அத்தியாவசியமானவை. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 15-20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடல் தசைகளை உருவாக்க உதவுகிறது. உடல், குளுக்கோஸைப் பயன்படுத்தும் விதத்தை மேம்படுத்துகிறது.
உணவில் குறைந்தபட்சம் 4 நிறங்கள் இருக்க வேண்டும். அதிக பழங்கள், காய்கறிகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்கின்றன. ஒரு ஆரோக்கியமான மனமும் அவசியம். இதற்கு தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்யலாம். கண்டிப்பாக சாப்பிடும்போது செல்போன், டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியும். இல்லையெனில் அதிகமாக நாம் சாப்பிடுவோம்.
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்களைப் பாதித்துள்ளதா?
ஆம். ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமே வரும் டைப் 2 நீரிழிவு நோய் இப்போது இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்.
நவீன காலகட்டத்தில் வேலை கலாசாரம், அதிக வேலை நேரம், ஒழுங்கற்ற உணவு, அதிக மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணிகளாகும். நம் உடல் சொல்லும்போது நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும். உடலுக்கு தேவையில்லையென்றால் 'வேண்டாம்' என்று ஒதுக்கிவிட வேண்டும். மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்வது தூக்கத்தை மேம்படுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.