குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?

ஸ்மார்ட்ஃபோன், டிவி போன்ற திரைப் பயன்பட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி...
குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?
Envato
Updated on
3 min read

ஸ்மார்ட்ஃபோன், டிவி போன்றவற்றால் குழந்தைகளின் திரை நேரம் (screen time) அதிகரித்து வருவது அவர்களுக்கு அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. வரும் காலங்களில் இதன் ஆபத்து மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு காலத்தில் மனிதனுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சிந்தனையைத் தூண்டும்விதமாகவும் இருந்த புத்தக வாசிப்பு, இன்று கணிசமாகக் குறைந்துவிட்டது. புத்தக காகிதத்தின் வாசனை, நூலக அமைதி எல்லாம் அதிகமிருந்த நிலை, இன்று டிஜிட்டல் யுகத்தில் மாறிவிட்டது.

இக்கால குழந்தைகளுக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் (ஸ்மார்ட்போன், டிவி போன்றவை) தான் மிகப்பெரிய பொழுதுபோக்காக உள்ளன. கதைகள், பாடல்கள், தகவல்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே காட்டப்படுகின்றன, கற்பிக்கப்படுகின்றன.

வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது, வீட்டிற்குள்ளேயே இருக்கும் நகர வாழ்க்கை முறை, குழந்தைகளைக் கவனிக்க பெரியவர்கள் இல்லாதது, 2 வயதிலேயே மழலையர் பள்ளிகளில் சேர்ப்பது என வாழ்க்கைச் சூழல் மாறியுள்ளதும் குழந்தைகளின் திரை நேர அதிகரிப்பிற்குக் காரணம்.

ENS

கையில் புத்தகங்களுக்கு பதிலாக இந்த நவீன கால குழந்தைகள், கையில் ஸ்மார்ட்போன்களைத்தான் வைத்திருக்கின்றனர். 2 வயது குழந்தை முதல் பதின் வயது குழந்தை வரை இதுதான் நிலை. அதேபோல குழந்தை சேட்டை செய்கிறது என்றாலோ, சாப்பிட மறுக்கிறது என்றாலோ டிவியை 'ஆன்' செய்துவிடும் பெற்றோர்கள் அதிகம். வெளியுலக சுற்றுச்சூழலும் அப்படியே இருக்கிறது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் அறிமுகமான ஆன்லைன் கல்வி, இன்றைய குழந்தைகளின் திரைமோகத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால் குழந்தைகளிடையே தற்போது நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

குழந்தைகள் புத்தகம் மூலமாக புகைப்படங்களை பார்க்கும்போதும் அவற்றை வாசிப்பதின் மூலமே அவர்கள் நினைவுத்திறன் மேம்படும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

தினமும் 3 முதல் 4 மணி நேரம் திரைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. மின் புத்தகங்களைப் படித்தல், வேகமான வீடியோ கேம்களை விளையாடுதல், கல்வி சார்ந்த வீடியோக்களைப் பார்த்தல் போன்ற செயல்களில் குழந்தைகளை நாம் ஈடுபடுத்தும்போது அது கல்வி சார்ந்த அறிவுத்திறனை வளர்க்கும் என்று நம்புகிறோம். மாறாக அது அறிவுத்திறனை அது சிக்கலாக்குகிறது.

Envato

கவனம் சிதறுதல், டிவியை அணைக்கும்போதோ, ஸ்மார்ட்போனை திரும்பப் பெறும்போதோ எரிச்சல் அடைதல், எழுத்துகளின் மூலமாக கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிரமம், தூக்கக் கோளாறுகள், பாடங்களை நினைவில் கொள்வதில் சிரமம், சமூகத்திலிருந்து விலகி இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

2020 -2022 ஆண்டு கால இடைவெளியில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு இந்த பிரச்னை மிகவும் அதிகரித்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

திரையில் படிக்கும்போது அது அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டினாலும் எழுத்துகள் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் படிக்கும்போது எதிலும் கிடைக்காத ஒரு ஆழமான ஈடுபாடு கிடைக்கிறது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் உளவியலாளர், கல்வி சிகிச்சையாளர் டாக்டர் ஜமீலா கே வாரியர் இதுபற்றி கூறுகையில்,

"நல்ல அறிவாற்றல் என்பது கவனத்தை ஒருநிலைப்படுத்துவது, தெளிவாகச் சிந்திப்பது, கற்றுக்கொள்வது, கற்றவற்றை நினைவில் வைத்துக்கொள்வது, சரியான முடிவு எடுப்பது, தகவல்களைத் திரட்டுவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதேபோல, திரையில் படிப்பதைவிட புத்தகங்களில் படிப்பதுதான் சிறந்தது" என்று கூறுகிறார்.

வார்த்தைகளின் காட்சி பதிவு, புத்தகத்தைக் கையில் பிடிப்பது, அதன் பக்கங்களை / தடிமனை மதிப்பிடுவது, பக்கங்களைத் திருப்புவது என தொடு உணர்வுடன் கூடிய கற்றலாக இருக்கும். ஒரு பக்கத்தை முடிக்கும்போது கிடைக்கும் உணர்வு ஆன்லைன் திரையில் கிடைப்பதில்லை. அதேபோல கருத்துகளை உள்வாங்கி படிக்கும்போது அவர்களால் எளிதில் அவற்றை நினைவுகூர முடியும். ஆனால், ஆன்லைனில் வேகமாக கடந்து செல்லும்போது அது மனதில் பதிவதில்லை. புத்தகத்தில் படிக்கும் வார்த்தை புத்தகத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று மூளையின் ஹிப்போகேம்பஸில் நன்றாகக் பதிந்துவிடும். நாம் நினைவுகூறும்போத புத்தகத்தில் இருக்கும் இடமும் ஞாபகத்துக்கு வரும். இதெல்லாம் புத்தக படிப்பில் மட்டுமே சாத்தியம்.

ENS

திரை மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள்

திரையில் படிப்பது என்பது மிகவும் வேகமான நவீன செயலாகும். ஆனால் வேகமாக படிக்கும்போது பல விஷயங்கள் விட்டுப்போகின்றன. அதாவது மேலோட்டமாக விரைவாக படிக்கும்போது எளிதில் குழந்தைகள் சோர்வடைகின்றனர். ஆழமான புரிதலைவிட வேகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த மனப்பான்மை, மூளையில் முழுமையாக பதிவாவதும் இல்லை. இதனாலே கவனச் சிதறல், சிந்தனைத் திறன் குறைவது போன்ற அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதேபோல திரையில் தோன்றும் நீல ஒளி, அறிவிப்பு ஒலிகள், ஹைப்பர்லிங்குகள் ஆகியவற்றால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. முன்மூளைப் புறணியின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இது மூளை மந்தநிலை மற்றும் நினைவுத்திறன் இழப்புக்கு வழிவகுக்கும். திரைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக இளம் வயதினர், கருத்துகளை வெளிப்படுத்துவதிலும் கதைகளை நினைவுபடுத்துவதிலும் அதிகம் சிரமப்படுகிறார்கள், இது வயதானவர்களிடம் காணப்படும் அறிவாற்றல் குறையை பிரதிபலிக்கிறது. எனவே புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். புத்தகம், டிஜிட்டல் சுமையில் இருந்து குழந்தைகளைக் காத்து நீடித்த நினைவாற்றல், தெளிவான சிந்தனையை வழங்குகிறது" என்று டாக்டர் சாதிக் தெரிவித்தார்.

ஆன்லைன் கற்றலும் புத்தகமும் ஒரு ஒப்பீடு!

ஆன்லைன் கற்றல்

பிரெயின் ஃபாக், பிரைன் ராட் (மூளைச் சிதைவு) எனும் நினைவாற்றல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சிந்திக்கும் திறன் குறையலாம், சிந்தனைகளை இணைப்பது கடினமாக இருக்கலாம்.

அதிகப்படியான அறிவுச் சுமை, விரைவில் சோர்வடைவது.

டிவி, ஸ்மார்ட்போன்களில் உள்ள புளூலைட்டை பார்க்கும்போது முன்முனை புறணி செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

திரையில் வேகமாக படித்துவிட்டு மேலோட்டமாக கடந்து செல்வது நினைவுத்திறனை வளர்ப்பதில்லை.

புத்தகத்தில் படிப்பது

பார்ப்பது, தொடுவது, நுகர்வது, பக்கத்தைத் திருப்புவது என பல செயல்பாடுகள் இருக்கும்.

கருத்துகளை உள்வாங்கும் திறன், காட்சி சார்ந்த திறன் அதிகரிக்கும்.

தகவலை பகுத்தறியும் திறன் அதிகரிக்கும்,

ஸ்மார்ட் சாதனங்களைப் பார்ப்பதைவிட 20% அதிகமாக படிப்பார்கள்.

புத்தகங்களில் படிப்பதன் மூலமாக நன்கு நினைவில் பதியும்.

எனவே, குழந்தைகளுக்கு புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள், கண்டறிதல் மாதிரியான சிந்திக்க வைக்கும் புத்தகங்கள், அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்.

எல்லாவற்றையும்விட குழந்தைகளைத் தினமும் ஓரிரு மணி நேரம் வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.

Summary

Children health: Avoid screen time, print offers robust cognitive development

குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?
பெண்களுக்கு உடல் பருமன், பிசிஓஎஸ், தைராய்டு, சீரற்ற மாதவிடாய்... ஏற்படக் காரணம் என்ன?
குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?
ஆன்லைனில் படிப்பதால் நினைவாற்றல் குறையுமா? மூளைக்குப் பாதிப்பா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com