Enable Javscript for better performance
lets go to the world tour!- Dinamani

சுடச்சுட

  

  வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த இடங்களில் ஏதாவதொன்றை பார்த்து விட்டாலே ஜென்ம சாபல்யம்! 

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 02nd January 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  miyami

  விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என  எல்லா நேரங்களிலும் ஃபார்மேட்  மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின்  போல  இயங்க வைத்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே!

  நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலை ஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் லோன் வாங்கி  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று போய் வந்தார்கள். இப்போதைய டிரெண்ட் என்ன தெரியுமா? நீங்கள் உள்நாட்டு அயல்நாட்டு சுற்றுலா போய் வர சில வரையறைகளின் கீழ்  வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. இதன் காரணமாகவோ என்னவோ முந்தைய வருடங்களை விட இப்போது அயல்நாட்டு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

  எப்படி ஆயினும் சுற்றுலா போய் வருவது மனதுக்கு மிக மிக ஆரோக்கியமான விஷயமே. 'வோல்கா முதல் கங்கை வரை' வரை நூலாசிரியரும் இந்தியப் பயண இலக்கிய நூல்களின் தந்தையுமான ராகுல் சாங்கிருத்யாயன் கூற்றுப் படி 'ஓடிக் கொண்டே இருந்தால் தான் அது நதி ஒரே இடத்தில்  தங்கி விட்டால் அது அழுக்கு தேங்கும் குட்டை' என்பதற்கிணங்க மக்களின் பயண ஆர்வங்கள் மேம்பாட்டு வருவது நன்று!

  உலகம் ஒரு குளோபல் கிராமம் என்றான பின் இப்போது  உலகின் எந்த மூலையில் இருந்தும் மற்றொரு மூலைக்கு திட்டமிட்டு குறுகிய காலத்தில் சென்று  திரும்பலாம் என்று நம்புவதால் மக்களின் உலகச் சுற்றுலாக்கள் பெருத்து விட்டன. பள்ளிக் குழந்தைகளிடம் கூட விடுமுறை கழிந்து பள்ளி திறந்த பின்னான உரையாடல்கள் இவ்விதமே நிகழ்கின்றன.


  'நாங்க இந்த வருஷம் துபாய் போனோமே. புர்ஜ் கலீபா மேல இருந்து ஃபோட்டோ எடுத்து ஃபேஸ் புக்ல ஷேர் பண்ணிருக்கோம்.' என்கிறாள் ஒரு பள்ளிச் சிறுமி. அடுத்த வருஷம் கனடா போய் நயாகரா ஃபால்ஸ் பார்ப்போம் , அதுக்கடுத்த வருஷம் ஜாக்கி ஷான் பார்க்க ஷாங்காய் போறோம். அப்புறம் யூ.எஸ் போறோம். சிங்கப்பூர், மலேசியா எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு என்ற ரீதியில் விரிகிறது சிறுவர், சிறுமியரின்  பள்ளிக்கூடக் கலந்துரையாடல்கள். 
   
  இதனடிப்படையில் சுற்றுலாவை மையமாக வைத்து உலகின் 57 நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நகரங்கள் எவை என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. அந்த லிஸ்டில் முதலில் இருக்கும் நகரம் எது? அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நகரங்கள் எவை? என்று இந்தக்  கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


  ஷாங்காய்: ஷாங்காய் என்றால் சீன மொழியில் 'கடலுக்கு மேலே' என்று பொருள். ஹுவாங்ப்பூ நதியின் கரையில் அமைந்த துறைமுக நகரமான ஷாங்காய் எப்போதுமே உலக மக்கள் சென்று வர விரும்பும் முக்கியமான சுற்றுலா தளங்களில் முதலிடம் வகிக்கிறது. புகைப்படத்தைப் பார்த்தாலே நகரத்தின் அழகில் உள்ளம் கொள்ளை போகிறது. 


  பட்டாயா: தாய்லாந்தில் இருக்கும் இந்த பட்டாயா நகரம் 1960 களில் சாதாரண மீன்பிடி கிராமமாகவே இருந்து வந்தது. ஆனால் இங்கிருக்கும் அழகான கடலும் நதியும் சார்ந்த சுற்றுப்புறம் இன்று இதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. இப்போது இங்கே எல்லாத் திசைகளிலும் சுற்றுலாப்  பயணிகள் வந்து தங்கிச் செல்லும்  ரிசார்ட்டுகள்  பல்கிப்பெருகியுள்ளன. 


  மியாமி: அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் முக்கிய நகரம் மியாமி. இங்கே கியூபாவின் செல்வாக்கு அதிகமிருந்தாலும் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்  அமெரிக்க நகரங்களில் எப்போதும் இதற்கு மிகப் பெரும் இடமுண்டு. புகழ் பெற்ற மியாமி கடற்கரை இந்தியாவில் பல மொழி  திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.


  புக்கெட் தீவு: 576 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புக்கெட் தீவு தாய்லாந்தின் பெரிய தீவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதைத் தவிர  மேலும் 32 குட்டி குட்டித் தீவுகள் தாய்லாந்தில் உள்ளன. இங்கே பெருமளவு டின் மற்றும் ரப்பர் உற்பத்தி செய்யப்படுவதால் பொருளாதார வளம் மிக்க தீவுகளில் இதுவும் ஒன்று.


  குவாங்ஷூ: சீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான இந்த குவாங்ஷூ தென் மத்திய மாகாணமாகிய குவாங்டங் பகுதியில் அமைந்துள்ளது. 
   
   
  தைபே: தைவான் தலைநகரமான தைபே அங்கிருக்கும் சுவையான தெருவோர உணவகங்கள் மற்றும் இரவுக்  கடைகள் மூலமாக சுற்றுலாப் பயணிகளை   ஈர்க்கும் திறனைப் பெற்றுள்ளது. இந்தத் தெருவோர உணவகங்களில் அசைவ உணவுகள் அனைத்தும் அவ்வப்போது பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப உடனடியாக தயாராகின்றன. தொட்டியில் மிதந்து கொண்டிருக்கும் மீன் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு இணங்க அடுத்த  நொடியில் எண்ணெய்யில் பொறிக்கப் பட்டு  தட்டில் வைக்கப் படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அந்த உணவின் சுவையை!
   


   
  ரோம்: பழைய ரோம் நகரம் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ரோமுலஸ் மற்றும் ரீமஸ் சகோதரர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் பட்டது என்கிறது வரலாறு. ரோம் 'உலக நாகரீகத்தின்  தொட்டில்' என்று பாராட்டத்  தக்க வகையில் அங்கே எங்கெங்கு காணினும் நவீன மயம்.

    


  சியோல்: தென் கொரியாவின் தலைநகரான சியோலின் மக்கள் தொகை 10 மில்லியனுக்கும் அதிகம்.மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம் என்றாலும் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் சியோலும் முன்னணியில் இருக்கிறது. 


   
    
  அனடோலியா: மத்திய தரைக்கடலின் கரையோரப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த துருக்கிய நகரம் அதன் ஸ்படிக  நீல நிற கடற்கரைக்காக சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப் படுகிறது. 

   
    
  கோலாலம்பூர்: தெற்கு மலேசிய தீபகற்பத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் மலேஷியாவின்  தலைநகர், சுற்றுலாப் பிரியர்கள் கோலாலம்பூரை  'நுகர்வோரின்  சொர்க்கம்' என்று அழைத்து கொண்டாடுகிறார்கள்.  
   
    


   

  இஸ்தான்புல்: உலக  நகரங்களில் பாதி ஆசியாக் கண்டத்திலும் பாதி ஐரோப்பாக் கண்டத்திலுமாக அமைந்திருக்கும் ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புலுக்கு  உண்டு.
   
    

  துபாய்: உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக 163 மாடிகள் கொண்ட புர்ஜ் கலீபா எனும் கட்டிடம் துபாயில் தான் அமைந்துள்ளது. இதற்காக மட்டுமல்ல இந்தக் கட்டிடம் கட்டப் படுவதற்கு முன்பும் கூட துபாய்க்கு  உலக சுற்றுலாப் பயணிகளின் பயண லிஸ்டில் எப்போதும் முதலிடம் உண்டு. 
  புகைப்படத்தில் உள்ள நகரங்கள் மட்டுமல்ல இதே போன்ற  சிறந்த சுற்றுலாத் தளங்கள் உலகெங்கும் இன்னும் விரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு விடுமுறை காலத்தின் போதும் பயணிகள்இந்த லிஸ்டை சோதித்துக் கொள்ளலாம். இன்னமும் பார்க்காத இடங்களில் காத்திருக்கலாம் நமக்கான சுவாரஸ்யங்கள்! 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai