தில்லியில் களம் காணும் விஐபிக்கள்
தில்லியின் 7 தொகுதிகளில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், அங்கீகாரம் பெறாத கட்சிகள் என 100-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட போதிலும், முக்கியக் கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு


தில்லியின் 7 தொகுதிகளில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், அங்கீகாரம் பெறாத கட்சிகள் என 100-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட போதிலும், முக்கியக் கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி நிலவுகிறது
பதினேழாவது மக்களவைக்காக தலைநகர் தில்லியில் நடைபெறவுள்ள தேர்தலில் முன்னாள் முதல்வர், முன்னாள், இன்னாள் மத்திய அமைச்சர்கள், பிரபல பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் என முக்கியப் பிரமுகர்கள் களம் காண்கின்றனர்.
தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
மே 12-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக ஆம் ஆத்மி -காங்கிரஸ் கட்சி இடையே பேச்சுவார்த்தை சில மாதங்களாக நீடித்து வந்த நிலையில், கடைசியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால், வேட்புமனுத் தாக்கல் முடிவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சி ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தது. அதேபோன்று, பாஜகவும் அதன் வேட்பாளர்களை கடைசியில்தான் அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி மட்டுமே வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன்முடிவடைந்தது. ஏழு தொகுதிகளில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், அங்கீகாரம் பெறாத கட்சிகள் என 100-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட போதிலும் முக்கியக் கட்சிகளான பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் போட்டியிடும் விஐபிக்களைக் குறித்து ஒரு பார்வை...
ஷீலா தீட்சித்
வட கிழக்கு தில்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 81 வயதாகும் ஷீலா தீட்சித், தில்லியில் 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். 1998, 2003, 2008-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தில்லி
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். தில்லி அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர். 1986 முதல் 1989 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தில்லி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். 1998-இல் முதல் முறையாக அப்போதைய கோல்மார்க்கெட் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அவர் கேஜரிவாலிடம் தோற்றுப் போனார். அதைத் தொடர்ந்து, 2014 மார்ச்சில் அவர் கேரளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர், நிகழாண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
ஹர்ஷ் வர்தன்
சாந்தினி சௌக் தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் ஹர்ஷ் வர்தன். மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சராக இருப்பவர். தில்லியில் கிருஷ்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1992-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தில்லிக்கான சுகாதாரம், சட்டத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். தில்லியில் பிறந்து வளர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மருத்துவர். கிருஷ்ணா நகர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தில்லி மக்களுக்கு மிகவும் பரீட்சியமானவர். தற்போது மீண்டும் சாந்தினி சௌக் தொகுதியதில் களம் காண்கிறார். இத்தொகுதியில் முன்னாள் எம்பி ஜே.பி. அகர்வால் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொறியியல் பட்டதாரியான பங்கஜ் குப்தா முதல் முறையாகப் போட்டியிடவுள்ளார்.
கெளதம் கம்பீர்
அண்மையில் பாஜகவில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், கிழக்கு தில்லி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். தில்லியைச் சேர்ந்த இவர், இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியவர். ஐ.பி.எல். போட்டியில் தில்லி அணியின் கேப்டனாக இருந்தவர். அண்மையில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தில்லிவாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டில் கிடைக்கப் பெற்ற புகழால் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர். இவர் இத்தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார்.
இதே தொகுதியில் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தில்லி முன்னாள்அமைச்சருமான அரவிந்த் சிங் லவ்லி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் ஷீலா தீட்சித் தில்லியில் முதல்வராக இருந்தபோது கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்.
காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தியால், 2017-இல் பாஜகவுக்கு சென்ற இவர், 2018-இல் மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். தில்லி காங்கிரஸின் சீக்கிய முகமாக அறியப்படுவர். தில்லி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர்.இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் புதுமுக வேட்பாளராக அதிஷி முதல்முறையாக களம் காண்கிறார்.
விஜேந்தர் சிங்
33 வயதாகும் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் தெற்கு தில்லியில் போட்டியிடுகிறார். ஹரியாணா மாநிலம், பிவானி பகுதியைச் சேர்ந்தவர். இவர் முதல் முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். தற்போதைய டபிள்யூபிஓ ஆசியா பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனாக இருப்பவர். பல்வேறு தேசிய, சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். 2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைப் பிரிவில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக இருந்த போது குத்துச்சண்டையில் தேசிய மற்றும் சர்வதேச திறமையின் அடிப்படையில் விஜேந்தர் சிங்கிற்கு ஹரியாணா காவல் துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டது. தெற்கு தில்லி தொகுசியில் பாஜகவின் சார்பில் தற்போதைய எம்.பி. ரமேஷ் பிதூரி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஏற்கெனவே மக்களிடம் அறிமுகமானவர். ஆடிட்டர், வழக்குரைஞரான ராகவ் சத்தா, முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் களம் காண்கிறார். அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.
மனோஜ் திவாரி
போஜ்புரி பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி, பூர்வாஞ்சல் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது வடகிழக்கு தில்லியின் எம்பியாகவும், தில்லி பாஜக தலைவராகவும் இருந்து வருகிறார். தில்லியில் பூர்வாஞ்சல் சமூகத்தவர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வடகிழக்கு தில்லியில் மீண்டும் களம் காண்கிறார் மனோஜ் திவாரி.
இதே தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல் முறையாக திலீப் பாண்டே போட்டியிடுகிறார். இவர் புதுமுக வேட்பாளர் ஆவார். இத்தொகுதியில் ஷீலா தீட்சித், திலீப் பாண்டே ஆகியோரை எதிர்த்து களம் கண்டுள்ளார் மனோஜ் திவாரி.
பர்வேஷ் வர்மா
மேற்கு தில்லி தொகுதியில் தற்போதைய பாஜக எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொகுதியில் இரண்டாவது முறையாக இவர் போட்டியிடுகிறார். இவர் தில்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன். முதுகலைப் பட்டதாரி. காங்கிரஸ் சார்பில் மஹாபல் மிஸ்ரா போட்டியிடுகிறார். முன்னாள் எம்பியான இவர், பூர்வாஞ்சல் சமூகத்தில் பிரபலமானவர். மேற்கு தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பல்பீர் சிங் ஜாக்கர் புதுமுக வேட்பாளராகக் களம் காண்கிறார்.
அஜய் மாக்கன்
புது தில்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் போட்டியிடுகிறார். 2004-இல் புது தில்லி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக இருந்தவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இதே தொகுதியில் பாஜக எம்பியாக இருந்துவரும் மீனாட்சி லேகி பாஜக சார்பில் மீண்டும் களம் காண்கிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரிஜேஷ் கோயல் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஹன்ஸ் ராஜ்
வடமேற்கு தில்லியில் தற்போதைய பாஜக எம்பியாக உள்ள உதித் ராஜுக்குப் பதிலாக பிரபல சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறார். இவர் பஞ்சாப் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதிலும், சூஃபி இசையிலும் பிரபலமானவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். பஞ்சாபி-பாப் பாடல்கள் ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
பாஜகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். இதே தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குகன் சிங், காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் லிலோதியா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
வடமேற்கு தில்லி
பாஜக - ஹன்ஸ் ராஜ்
ஆம் ஆத்மி - குகன் சிங் ரங்கா
காங்கிரஸ் - ராஜேஷ் லிலோத்யா
வடகிழக்கு தில்லி
பாஜக - மனோஜ் திவாரி
ஆம் ஆத்மி - திலீப் பாண்டே
காங்கிரஸ் - ஷீலா தீட்சித்
புதுதில்லி
பாஜக - மீனாட்சி லேகி
ஆம் ஆத்மி - பிரிஜேஷ் கோயல்
காங்கிரஸ் - அஜய் மாக்கன்.
கிழக்கு தில்லி
பாஜக - கெளதம் கம்பீர்
ஆம் ஆத்மி - அதிஷி
காங்கிரஸ் - அர்விந்தர் சிங் லவ்லி
சாந்தினி செளக்
பாஜக - ஹர்ஷ் வர்தன்
ஆம் ஆத்மி - பங்கஜ் குப்தா
காங்கிரஸ் - ஜே.பி. அகர்வால்
தெற்கு தில்லி
பாஜக - ரமேஷ் பிதூரி
ஆம் ஆத்மி - ராகவ் சத்தா
காங்கிரஸ் - விஜேந்தர் சிங்
முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து விவரம்
கெளதம் கம்பீர் (பாஜக) ரூ.145.15 கோடி
மனோஜ் திவாரி (பாஜக) ரூ.24.27 கோடி
பர்வேஷ் வர்மா (பாஜக) ரூ.15.51 கோடி
அஜய் மாக்கன் (காங்.) ரூ.24.57 கோடி
விஜேந்தர் சிங் (காங்.) ரூ.8.62 கோடி
ஷீலா தீட்சித் (காங்.) ரூ.4.92 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...