கம்பீருக்கு கௌரவம் அளிக்குமா கிழக்கு தில்லி?
கிழக்கு தில்லி தொகுதியில் ஜங்புரா, ஓக்லா, திரிலோக்புரி, கோண்ட்லி, பட்பர்கஞ்ச் , லட்சுமி நகர், விஸ்வாஸ் நகர், கிருஷ்ணா நகர், காந்தி நகர், ஷாதரா ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.


கிழக்கு தில்லி தொகுதியில் ஜங்புரா, ஓக்லா, திரிலோக்புரி, கோண்ட்லி, பட்பர்கஞ்ச் , லட்சுமி நகர், விஸ்வாஸ் நகர், கிருஷ்ணா நகர், காந்தி நகர், ஷாதரா ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மக்களவைத் தொகுதியில் 11,28,885 உள்ளனர்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மகேஷ் கிரி வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 11,96,731 வாக்குகளில் அவர் 5,72,202 வாக்குகள் (47.83%) பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜ்மோகன் காந்தி 3,81,739 (31.91%) வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் 2,03,240 (16.99%) வாக்குகளும் பெற்றனர். இதில் மகேஷ் கிரி 1,90,463 (15.92%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முந்தைய 2009 மக்களவைத் தேர்தலில் சந்தீப் தீட்சித் வெற்றி பெற்றிருந்தார்.
கிழக்கு தில்லியின் தற்போதைய பாஜக எம்.பி. மகேஷ் கிரிக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை. கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீருக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் அர்விந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மி சார்பில் அதிஷி மர்லினா ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பல சர்வதேச வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட கௌதம் கம்பீர் (37) முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார்.
அர்விந்தர் சிங் லவ்லி (50), தில்லி கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். தில்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2013-இல் பதவி வகித்தவர். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதிஷி மர்லினா (37) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி. தில்லி கல்வித் துறையின் ஆலோசகர். இவரும் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கெளதம் கம்பீர் மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்தும், சுற்றுச்சூழல் மாசு விவகாரத்தில் ஆம் ஆத்மி இரட்டை வேடம் போடுவதாகக் கூறியும் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.
அர்விந்தர் சிங் லவ்லி, வணிக நிறுவனங்கள் மீதான சீலிங் நடவடிக்கை, போதிய அளவில் போக்குவரத்து வசதி இன்மை, உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் தாமதம், காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள் ரத்து ஆகிய விவகாரங்களை முன்வைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், தில்லியில் காங்கிரஸ் ஆட்சியின் 15 ஆண்டு கால சாதனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
அதிஷி தனது பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி ஆட்சியில் கூடுதலாக 8,000 வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்ட தாகவும், காங்கிரஸ் ஆட்சியின் போது கல்வித் துறையில் எவ்வித முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறி வருகிறார். தில்லியில் கல்வி நிறுவனங்கள் பற்றாக்குறை, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய பிர்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி வருகிறார்.
இந்தத் தொகுதியில் முஸ்லிம்கள் 16%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 12 %, பிராமணர்கள் 20%, தாழ்த்தப்பட்டோர் 15%, பஞ்சாபிகள் 14 %, சீக்கியர்கள் 5 %, வைசியர்கள் 10 % உள்ளனர். கிழக்கு தில்லியில் உள்ள ஓக்லா, ஜங்புரா, திரிலோக்புரி, மதன்பூர் காடர், கோண்ட்லி, ஷாதரா ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் நடுத்தர வகுப்புப் பிரிவினர் அதிகம் வசிக்கின்றனர். பிரீத்தி விஹார், நிர்மாண் விஹார், காந்தி நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக சமுதாயத்தினர், வேலைக்குச் செல்வோர் அதிகமாக வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் சுமார் 150 அங்கீகாரமற்ற காரணிகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஷீலாம்பூர், திரிலோக்புரி, ஓக்லா, ஜஹாங்கீர்புரி ஆகிய தொகுதிகளில் அதிகமான குடிசைப் பகுதிகள் உள்ளன.
மதன்பூர், திரிலோக்புரி, ஜில்மில் ஆகிய பகுதிகளில் குடிசைப் பகுதிகள், அங்கீகாரமற்ற காலனிகள், மறுகுடியேற்ற காலனிகள் உள்ளன. குழாய்களில் குடிநீர் விநியோகம் இப்பகுதி மக்களின் தேவையாக உள்ளது. ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் 1980-களில் கட்டப்பட்ட குடியிருப்புகளின் மறுமேம்பாடு அவசியம் என குடியிருப்புவாசிககள் கூறுகின்றனர். பாண்டவ நகர், கணேஷ் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. குடியிருப்புகளும் நெருக்கமாக அமைந்துள்ளதால் இடநெரிசல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்துவதில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மயூர் விஹார் பேஸ்3-இல் மெட்ரோ ரயில் வசதி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
யாருக்கு வாக்கு?
எஸ். கிருஷ்ணசாமி (மயூர் விஹார் பேஸ் 3): குடிநீர், மின்சாரம், போக்குவரத்து நன்றாக உள்ளது. பாதுகாப்புதான் குறைபாடாக உள்ளது. தில்லியில் மயூர் விஹார் பேஸ் 1, பேஸ் 2 பகுதியில் மெட்ரோ சேவை உள்ளது. ஆனால், பேஸ் 3 பகுதியில் இல்லை. இதைச் செயல்படுத்த வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலை மக்களிடம் உருவாகும் நிலை உள்ளது.
இல்லத்தரசி சுதா: மயூர் விஹாரில் பெண்கள் பாதுகாப்பு உள்பட பொதுப் பாதுகாப்பில் இன்னும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எங்கள் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு அதிகமாகவே உள்ளது. இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் கட்சிக்குத்தான் எங்கள் ஆதரவு.
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் பி.வி. சுப்ரமணியன் (மயூர்விஹார் பேஸ் 1- பாக்கெட் 1 பகுதி): எங்கள் பகுதியில் சாக்கடை வசதி சரிவர இல்லை. சாக்கடை, சாலைப் பணிகள் சரிவர நடைபெற வில்லை. குடிநீர் விநியோக நேரத்தில் ஒழுங்கு இல்லை. அதேவேளையில், மின்விநியோகம் சிறப்பாக உள்ளது. மாநகராட்சி பூங்காக்கள் சரியில்லை. நாங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்.
குடும்பத் தலைவி சாந்தி: எங்கள் பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. எங்கள் பகுதியில் திருட்டுப் பயம் அதிகம் உள்ளது. இவற்றைச் சரி செய்யும் கட்சிகள்தான் தற்போதைய தேவையாக உள்ளது.
திரிலோக்புரியைச் சேர்ந்த லட்சுமி (65): எங்கள் 28-ஆம் பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளது. குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், வெளியில் இருந்து கேன் தண்ணீரை வாங்கிக் குடித்து வருகிறோம். பூங்காவில் எவ்வித வசதியும் இல்லை. எனவே, இந்த முறை வாக்களிக்க வேண்டுமா என்ற அதிருப்தியில் உள்ளேன்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
1999 முதல் நடைபெற்ற நான்கு மக்களவைத் தேர்தலில் இருமுறை பாஜகவும், இருமுறை காங்கிஸும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட கட்சியின் சின்னங்கள்தான் வாக்காளர்களிடம் பிரபலமாக உள்ளன. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித் தனியாக களம் காண்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பிரியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்தத் தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கிழக்கு தில்லி கம்பீருக்கு கௌரவம் அளிக்குமா என்பது மே 23-இல் தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...