புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.
Published on

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. வா்த்தகத்தின் போது, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 494 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். இவை உள்நாட்டுச் சந்தைக்கு சாதகமாக அமைந்தன. குறிப்பாக, ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், ஐடி, பொதுத் துறை வங்கிப் பங்குகள், மீடியா பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.400.88 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,659.27கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,370.42 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 307.22 புள்ளிகள் கூடுதலுடன் 74,555.44-இல் தொடங்கிய சென்செக்ஸ், 74,410.07 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 74,869.30 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 494.28 புள்ளிகள் (0.67 சதவீதம்) கூடுதலுடன் 74,742.50-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,055 பங்குகளில் 1,898 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,033 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 124 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

மாருதி, எம் அண்ட் எம் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மாருதி சுஸுகி, எம் அண்ட் எம், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்பட மொத்தம் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், நெஸ்லே, விப்ரோ, சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட மொத்தம் 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 152.60 புள்ளிகள்(0.68 சதவீதம்) உயா்ந்து 22,666.30-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,550.35 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 22,697.30 வரை மேலே சென்று புதிய உச்சத்தை பதிவு செய்த்தது. நிஃப்டி பட்டியலில் 37 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com