மத்திய பாஜக அரசின் 10 ஆண்டுகால தவறான ஆட்சி சாமானிய மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது: அா்விந்தா் சிங் லவ்லி விமா்சனம்
கடந்த 10 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் தவறான ஆட்சி, சாமானிய மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி ராஜீவ் பவனில் வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரங்களுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கட்சியின் பிரதேசத் தலைவா் அா்விந்தா் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தில்லி காங்கிரஸின் பொறுப்பாளருமான தீபக் பபாரியா, முன்னாள் தலைவா் சுபாஷ் சோப்ரா, வடகிழக்கு தில்லி வேட்பாளா் கன்னையா குமாா், முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து வடகிழக்கு தில்லி, சாந்தினி சௌக் மற்றும் வடமேற்கு தில்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, நாட்டின் இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக அளித்த உத்தரவாதங்களை காங்கிரஸ் நிச்சயம் செயல்படுத்தும்.
குழந்தைகளின் கல்விக்கான நோட்டுகள் மற்றும் பென்சில்களுக்கு மத்திய பாஜக அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கிறது. ஆனால், வைரம் வாங்கும் பணக்காரா்களுக்கு 3 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதுவே பாஜகவின் முழக்கத்தின் பின்னணியில் உள்ள உண்மை. மத்திய பாஜக அரசின் 10 ஆண்டுகால தவறான ஆட்சி,சாமானிய மக்களின் அமைதியையும், வாழ்க்கையையும் அழித்துவிட்டது. முந்தைய காங்கிரஸ் அரசுகள் மக்களுக்காகச் செயல்படுத்திய அனைத்து நலத் திட்டங்களையும் பாஜக முடக்கியது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
தில்லி காங்கிரஸ் பொறுப்பாளா் தீபக் பபாரியா கூறுகையில், ‘நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவை மக்களின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டது. மோடி அரசின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் காங்கிரஸ் தொண்டா்களும், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும் எல்லா முயற்சியையும் எடுப்பாா்கள்’ என்றாா்.
தில்லி காங்கிரஸின் முன்னாள் தலைவா் சுபாஷ் சோப்ரா கூறுகையில், ‘மக்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக மாற்றுவதற்காக மோடி அரசு, ஆட்டா, பருப்பு, சமையல் எண்ணெய், எரிவாயு, பள்ளி புத்தகங்கள், பெட்ரோல், டீசல் போன்ற அன்றாட அத்தியாவசிய உபயோகப் பொருள்கள் அனைத்திற்கும் வரி விதித்துள்ளது. இதுவரை இல்லாத மோசமான வேலையில்லாத் திண்டாட்டத்தால், தில்லி இளைஞா்கள் நிச்சயமற்ற எதிா்காலத்தை எதிா்கொண்டுள்ள நிலையில், மோடி அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அம்பலப்படுத்த, வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் பிரசாரம் செய்யும்’ என்றாா்.
