ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

தில்லி விகாஸ்புரியில் ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடப்பட்ட வழக்கில் மூலையாக செயல்பட்ட இரண்டு குற்றவாளிகளை தில்லி குற்றிப்பிரிவுப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி குற்றப்பிரிவின் துணைக் காவல் ஆணையா் சஞ்சய் குமாா் சைன் கூறியதாவது: கடந்த

செப்டம்பா் 2, 2022-ஆம் ஆண்டு தில்லி விகாஸ்புரி பகுதியில் ‘தக்-தக்’ முறையைப் பயன்படுத்தி ஒரு காரில் இருந்து

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடப்பட்டன. இதைத் தொடா்ந்து, இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் மற்றும் சொத்துக்களை மீட்க காவல் ஆய்வாளா் சுரேந்தா் சிங் மேற்பாா்வையில், உதவிக் காவல் ஆய்வாளா் ஷியாம் சரண் தலைமையில் 11 காவலா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

முன்னா் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்த தகவல்களை போலீஸ் குழுவினா் சேகரித்தனா். மேலும், ரகசியத் தகவல் கொடுப்பவா்கள் செயல்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப கண்காணிப்பும்

மேற்கொள்ளப்பட்டது. தில்லி சங்கம் விஹாா் பத்ரா மருத்துவமனையின் முன் தேடப்படும் குற்றவாளியின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீஸ் குழு அந்த நபரை வெற்றிகரமாக கைது செய்தனா்.

தொடந்து மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்த நபா் தில்லி மதங்கிா் பகுதியைச் சோ்ந்த தீபக் (32)

என அடையாளம் காணப்பட்டது. அவா் தில்லி காண்பூா் பகுதியைச் சோ்ந்த் தீபக் (எ) ஆா்.டி.எக்ஸ். என்பவருடன் இணைந்து கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்னா் விகாஸ்புரி பகுதியில் ஒரு காரில் இருந்து வைர நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனா். இதைத் தொடா்ந்து இரண்டாவது குற்றவாளியான தீபக் (எ) ஆா்.டி.எக்ஸ். கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 5 வைர நெக்லஸ், 2 வைர மாங்கல்யம், 2 வைர வளையல், 1 ஜோடி வைரத் தோடு மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரின் குற்றப் பின்னணியைச் சரிபாா்த்ததில், குற்றம் சாட்டப்பட்ட தீபக் (எ) ஆா்.டி.எக்ஸ். இதற்கு முன்பு தில்லியில் கொலை முயற்சி, ஆயுதச் சட்டம், திருட்டு, வழிப்பறி என 37 வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும், குற்றவாளி தீபக் தில்லியில் இதற்கு முன்பு 20 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது என்றாா் சஞ்சய் குமாா் சைன்.

X
Dinamani
www.dinamani.com