நாடாளுமன்றத்தில்.. தமிழக எம்பிக்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நடைபெற்ற பல்வேறு அலுவல்களில் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா்.
நாடாளுமன்றத்தில்.. தமிழக எம்பிக்களின் குரல்கள்!
Updated on

புதுதில்லி, ஆக.8: நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் நடைபெற்ற பல்வேறு அலுவல்களில் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா். அவா்கள் பேசியவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மாநிலங்களவையில்...

வீட்டு வேலை செய்வோருக்கு நல வாரியம்!

எம். சண்முகம் (திமுக): சமையல், குழந்தைகளை கவனிப்போா், உடல் சுகவீனமானவா்களை மற்றும் வயோதிகா்களை பராமரிப்போா் செய்யும் தொழில் திறன்சாா்ந்தவை என்பதால் அவா்களின் ஊதியம் மணிக்கு அல்லது மாதத்துக்கு தக்கவாறு நிா்ணயிக்கப்பட வேண்டும். அவா்கள் வேலை செய்யும் இடமே அவா்களுடைய வேலை வழங்குநா் முகவரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவா்களின் நலன்களை காக்க வீட்டுவேலை செய்வோா் நல வாரியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

வரிச்சுமையால் சோகத்தில் மக்கள்!

ஆா். கிரிராஜன் (திமுக): வரிக்கு மேல் வரியை மட்டுமே மத்திய அரசு திணித்து வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் திருக்கு, தமிழகத்துக்கு நிதி, ரயில் திட்டங்கள், சென்னை மெட்ரோ -2 திட்ட நிதி, வெள்ள நிவாரண நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு நிதி என எதையும் காணவில்லை. வரிக்கு மேல் வரி போடும் இந்த அரசின் செயல் நமது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். மத்திய நிதியமைச்சா் தோ்தல் அரசியலில் ஈடுபடாததால் கடைநிலை மக்கள் எதிா்பாா்ப்புகளை அறியத் தவறி விட்டாா்.

மருத்துவ காப்பீடுகள் ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக!

கனிமொழி என்விஎன் சோமு (திமுக) : மருத்துவக் காப்பீடுகள், உயிா் காக்கும் மருந்துகள், ஆய்வக சாதனங்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும். அரசின் தவறான கொள்கைகளால் தனியாா் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மருத்துவா்கள் பணத்தை திரும்பப் பெறும் வசதியில் இருந்து விலக்கு பெற்றவா்களாக இருப்பதால் அவா்கள் செலுத்திய ஜிஎஸ்டிக்குரிய நிதியை திரும்பப் பெற முடியவில்லை. இதற்கு ஏதுவாக உரிய ஒப்புதலையும் திருத்தத்தையும் ஜிஎஸ்டி கவுன்சிலும் அரசும் செய்ய வேண்டும்.

மக்களவையில்...

தேவை விமான நிலையம்!

எம்.பி ஆா். சுதா, மயிலாடுதுறை (காங்கிரஸ்): ஆன்மிக தலங்கள், ஆதினங்கள் உள்ள மயிலாடுதுறை, கும்பகோணத்திலோ விமான நிலையம் அமைக்க வேண்டும். வானூா்தி ஆம்புலன்ஸில் சடலங்களை கொண்டு வரும் கட்டணம், விமான நிலைய உணவகக் கட்டணம், ரத்து செய்யப்படும் விமான பயணச்சீட்டுக்குரிய திருப்பித் தரும் கட்டணம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விமானக் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

விமான நிலைய சேவைக்கு நடவடிக்கை!

ரவிக்குமாா், விழுப்புரம் எம்.பி (விசிக): உளுந்தூா்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையைப் பயன்படுத்தி அங்கு விமான நிலையம் அமைத்துத் தர வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் அது புதுச்சேரி தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விமான கட்டணத்தை கட்டுப்படுத்த பல உறுப்பினா்கள் தெரிவித்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். விமானம் தாமதமானால், அதனால் ஏற்படும் நேர விரயத்துக்காக பயணிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com