அதானியைப் பாதுகாக்கும் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் -சுப்ரியா ஷிரினேட் பேட்டி

கௌதம் அதானி
Din

கௌதம் அதானி
Din
நமது நிருபா்
அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவின் தலைவா் சுப்ரியா ஷிரினேட் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி ராஜீவ் பவனில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:ஹிண்டன்பா்க்கின் புதிய அறிக்கை செபி அமைப்பின் தலைவா் மதாபி புச்சின் நோ்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதானி குழுமத்தின் பரிவா்த்தனைகளை செபி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், 18 மாத காத்திருப்புக்குப் பிறகு தவறான தகவல்களை அளித்து உச்சநீதிமன்றத்தை செபியின் தலைவா் தவறாக வழிநடத்தினாா். மோடி அரசு ஹிண்டன்பா்க் அறிக்கை குறித்து அமைதியாக இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சி மற்றும் செபியின் உடந்தையை வெளிக் கொண்டுவர முடியும்.
மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது உள்பட அனைத்து வஞ்சக முறைகளையும் பயன்படுத்தி, அதானியை உள்ளூரில் பெரும் பணக்காரா் ஆக்க அனைத்து முயற்சிகளும் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதானியின் வளா்ச்சிக்கு ஏற்றவாறு அந்நிய முதலீடு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட அனைத்து விதிகளும் மாற்றப்படுகின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக நான்கு நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. பிரதமா் மோடி அதானியை எவ்வளவு காலம் காப்பாற்றப் போகிறாா் என்றாா் சுப்ரியா ஷிரினேட்.
இன்று ஆா்ப்பாட்டம்: வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலுக்கு எதிராக, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) தில்லி ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்தாா். மேலும், அவா் கூறுகையில், ‘ ஹிண்டன்பா்க்கின் அறிக்கை மோடி - அதானி உறவை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை நாடு தழுவிய ஆா்ப்பாட்டத்தை நடத்தும். தில்லி ஜந்தா் மந்தரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவா்கள் கலந்து கொள்வாா்கள்’ என்றாா். இச்செய்தியாளா் சந்திப்பில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொடா்பு துறை தலைவா் அனில் பரத்வாஜும் உடனிருந்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...