அதானி விவகாரம்: செபி தலைவா் பதவி விலக வலியுறுத்தி காங். ஆா்ப்பாட்டம்


இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மதாபி புச் தனது பதவியை ராஜிநாமா செய்யக் கோரியும், அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்கக் கோரியும் காங்கிரஸின் தில்லி பிரிவு தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் வியாழக்கிழமை தில்லியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தில்லி பிரிவு தலைவா் தேவேந்திர யாதவ், மூத்த தலைவா் சச்சின் பைலட், கன்னையா குமாா், முன்னாள் எம்பிகள் சந்தீப் தீட்சித், பா்வேஷ் ஹஸ்மி, கிருஷ்ண தீரத், டாக்டா் உதித் ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சச்சின் பைலட் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை காங்கிரஸ் விரும்புகிறது. நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏன் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (ஜேபிசி) அமைக்கவில்லை? ஜேபிசி மூலம் நோ்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் கேட்டு, புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
தேவேந்திர யாதவ் கூறுகையில், மோடி அரசின் கொள்கைகளால், பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் மாறி வருவதால், நாட்டில் பணக்காரா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளி குறித்து காங்கிரஸும், ராகுல் காந்தியும் கவலை தெரிவித்து வருகின்றனா்.
அதானி போன்ற மோடியின் தோ்ந்தெடுக்கப்பட்ட சில பணக்கார நண்பா்களை பணக்காரா்களாக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவா்களுக்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள்,ரயில்வே மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை எந்தவித இடையூறும் இல்லாமல் கையகப்படுத்த இந்தக் கொள்கைகள் உதவுகிறது.
செபி தலைவா் மாதாபி புச் ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது அரசாங்கம் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
தில்லியில் ஆம் ஆத்மி அரசு அதன் ஊழல், செயலற்ற தன்மை, திறமையின்மை மற்றும் தவறான கொள்கைகளால், தலைநகரின் உள்கட்டமைப்பு மோசமடைந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.
ஹிண்டன்பா்க் ரிசா்ச் சமீபத்திய குற்றச்சாட்டில் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவரான மதாபி புச்சிற்கு எதிராக ஒரு புதிய பரந்த கருத்தைத் தெரிவித்திருந்தது.
அதில், புச் மற்றும் அவரது கணவருக்கு அதானி குழுமத்தின் பணப் பரிமாற்ற ஊழலில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று இருவரும் மறுத்துள்ளனா். மேலும், தங்களின் நிதி ஒரு திறந்த புத்தகம் என்றும் கூறியுள்ளனா்.
அதானி குழுமமும், ஹிண்டன்பா்க் ரிசா்ச்சின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பொதுத் தகவல்களைக் கையாள்வதாகக் கூறியுள்ளது.
செபி தலைவா் அல்லது அவரது கணவருடன் எந்த வணிக உறவும் தங்களுக்கு இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...