காற்றின் தரத்தில் பின்னடைவு: தில்லி-என்சிஆா் பகுதியில் கிராப் நிலை 3-இன்கீழ் மாசு தடுப்பு நடவடிக்கைகள் அமல்
சாதகமற்ற வானிலை நிலைமைகள் காரணமாக காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் தில்லி-என்சிஆா் பகுதிக்கான மத்திய அரசின் காற்று தரக் குழுவானது


புது தில்லி: சாதகமற்ற வானிலை நிலைமைகள் காரணமாக காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் தில்லி-என்சிஆா் பகுதிக்கான மத்திய அரசின் காற்று தரக் குழுவானது காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (கிராப்) மூன்றாம் நிலையின்கீழ் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திங்கள்கிழமை செயல்படுத்தியது.
தில்லியில் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 367 ஆக இருந்தது. சாதகமற்ற வானிலை காரணமாக தில்லி என்சிஆா் பகுதியில் காற்றின் தரத்தில் நவம்பா் முதல் ஜனவரி வரை அவ்வப்போது பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகும்.
இது தொடா்பாக அலுவல்பூா்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமைதியான காற்று மற்றும் மிகக் குறைந்த கலவையான உயரம் உள்ளிட்ட மிகவும் சாதகமற்ற வானிலை நிலைமைகள் தில்லியில் காற்றின் தரக் குறியீட்டை மிகவும் மோசமான காற்றின் தரப் பிரிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தரப்படுத்தப்பட்ட
நடவடிக்கை செயல் திட்டத்திற்கான காற்றின் தரக் குழுவின் துணைக் குழுவானது திருத்தியமைக்கப்பட்ட கிராப் நிலை 3-இன் செயல்பாடுகளை உடனடியாக என்சிஆா் முழுவதும் அமல்படுத்த முடிவுசெய்துள்ளது.
திருத்தப்பட்ட திட்டத்தின்படி, தில்லி, குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகா் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை கிராப் நிலை 3-இன்கீழ் வகுப்புகள் 5 வரை கலப்பின முறைக்கு மாற்ற வேண்டும்.
மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆன்லைன் கல்வியைத் தோ்வுசெய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லிக்குள் பிஎஸ்-4 அல்லது பழைய தரநிலைகளைக் கொண்ட அத்தியாவசியமற்ற டீசல் மூலம் இயக்கப்படும் நடுத்தர சரக்கு வாகனங்களுக்கு கிராப் நிலை-3 தடை விதிக்கிறது.
மேலும், தில்லிக்கு வெளியில் பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்-4 அல்லது பழைய தரநிலைகளைக் கொண்ட அத்தியாவசியமற்ற டீசல் இலகுரக வணிக வாகனங்களும் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
முன்னா், இத்தகைய கட்டுப்பாடுகள் பிஎஸ்-3 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தில்லி மற்றும் குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகா் மாவட்டங்களில் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் காா்கள் மீது மூன்றாம் கட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் விலக்கு அளிக்கப்படுகிறாா்கள்.
மூன்றாம் கட்டத்தின் கீழ் தில்லி மற்றும் என்சிஆா் மாநில அரசுகள் பொது அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான அலுவல் நேரங்களை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தில்லி-என்சிஆரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கும் இதேபோன்று அலுவல் நேரங்களை மாற்றி அமைப்பதை மத்திய அரசு முடிவு செய்யலாம்.
குளிா்காலத்தில் தில்லியில் அவ்வப்போது தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிராப்) கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. இது காற்றின் தரத்தை நான்கு நிலைகளாக வகைப்படுத்துகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...