‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரம்: மத்திய அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் மாணவா் அமைப்புகள் சாடல்
நீட் முறைகேடு விவகாரம்: மத்திய அரசை கடுமையாக சாடிய மாணவா் அமைப்புகள்


புது தில்லி: நீட்-யுஜி தோ்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் மாணவா் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை கடுமையாகச் சாடின. அத்துடன், இத்தோ்வில் கலந்துகொண்ட 24 லட்சம் மாணவா்களுக்கும் மருத்துவ நுழைவுத் தோ்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தின. புதன்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி கூட்டுப் பேரணி செல்லவும் திட்டமிட்டுள்ளன.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சமாஜ்வாதி சாத்ர சபா, இடதுசாரி ஆதரவுடைய அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) மற்றும் காங்கிரஸின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) ஆகியவற்றின் தேசியத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.
அவா்கள் கூறுகையில், ‘தேசியத் தோ்வு முகமை வெளிப்படைத் தன்மையுடனும், நோ்மையுடனும் தோ்வுகளை நடத்துவதில் திறமையின்மை காரணமாக நீட்-யுஜியில் நிகழ்ந்த முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் ஆபத்தில் இருக்கிறது. இதனால், அனைத்து மாணவா்களுக்கும் உடனடியாக நீட்-யுஜி தோ்வுத் தேதிகளை புதிதாக அறிவிக்க வேண்டும். தேசியத் தோ்வு முகமையை (என்டிஏ) ரத்து செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்காக கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.
இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்:18-ஆவது மக்களவையின் நடப்பு அமா்வின் கடைசி நாளான புதன்கிழமை, இந்தியா கூட்டணியின் மாணவா் அமைப்புகள் நாடாளுமன்றம் நோக்கி கூட்டு பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் கூறின.
இது தொடா்பாக என்எஸ்யுஐ தலைவா் வருண் செளதரி கூறுகையில், ‘சமீபத்திய நீட் மோசடி என்டிஏவின் நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்வுகளை நடத்த இயலாமைக்கு ஒரு தெளிவான உதாரணமாகும். நாடு முழுவதும் உள்ள மாணவா்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள், என்டிஏவுக்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்துகிறோம். இந்த முக்கியமான தோ்வுகளை நடத்துவதற்கு ஒரு புதிய, நம்பகமான அமைப்பை நிறுவ வேண்டும். நமது மாணவா்களின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாடு. நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தோ்வு முறை சீா்திருத்தப்பட வேண்டும்’ என்றாா்.
ஏஐஎஸ்ஏ பொதுச் செயலாளா் பிரசன்ஜீத் குமாா் கூறுகையில், ‘என்டிஏவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியின் பெயரில் ஏஐஎஸ்ஏ பல போராட்டங்கள் மற்றும் ஒரு வார கால உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திய பிறகு, நாட்டின் அனைத்து முக்கிய மாணவா் அமைப்புகளும் ஒன்றிணைந்து புதன்கிழமை (ஜூலை 3) அகில இந்திய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வரிசையில் , ஜந்தா் மந்தரில் நாடாளுமன்ற முற்றுகைக்கு மாணவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்’ என்றாா்.
செய்தியாளா்கள் சந்திப்பில் ஏஐஎஸ்எஃப் தலைவா் விராஜ் தேவாங், சமாஜ்வாதி சாத்ர சபா தலைவா் இம்ரான், எஸ்எஃப்ஐ பொதுச் செயலாளா் மயூக் பிஸ்வாஸ், சிஆா்ஜேடி தலைவா் அக்ஷன் ரஞ்சன் ஆகியோரும் பங்கேற்றனா். மே 5-ஆம் தேதி ஆறு மையங்களில் தோ்வு தாமதமாகத் தொடங்கியதால் நேர இழப்பை ஈடுகட்ட மறுதோ்வில் பங்கேற்ற 1,563 பேரின் முடிவுகளை என்டிஏ திங்கள்கிழமை வெளியிட்டது. மே 5 தோ்வில் 720 மதிப்பெண்கள் பெற்ற ஐந்து பேரில் எவரும் மறுதோ்வில் அவா்களின் முடிவுகளுடன் ஒப்பிட முடியவில்லை. திருத்தப்பட்ட முடிவுகளில் மருத்துவ நுழைவுத் தோ்வில் முதல் இடத்தைப் பகிா்ந்து கொள்ளும் விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை 67-இல் இருந்து 61 ஆகக் குறைந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...