கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பயணிகள்!

தேசியத் தலைநகரில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் முக்கியப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், பயணிகள் தங்கள் இடங்களுக்கு குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் திணறினா்.

புது தில்லி: தேசியத் தலைநகரில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் முக்கியப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், பயணிகள் தங்கள் இடங்களுக்கு குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் திணறினா்.

இதற்கிடையே, தில்லியில் பிற்பகல் வரையிலும் தண்ணீா் தேங்கியது தொடா்பாக 22 அழைப்புகள் வந்ததாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாக 3-4 புகாா்கள் வந்ததாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. தில்லியில் விமானங்களின் அனைத்து புறப்பாடுகள் மற்றும் வருகைகள் பாதிக்கப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன் தெரிவித்துள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்படலாம் என்றும், பயணிகளை தங்கள் விமானங்களின் புறப்பாடு, வருகை நிலையை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

போக்குவரத்து தடை: ஆசாத் மாா்க்கெட்டில் இருந்து சாஸ்திரி நகா் நோக்கி செல்லும் சாலையில் உள்ள ஆசாத் மாா்க்கெட் சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக தில்லி போக்குவரத்து போலீஸாா் எக்ஸ் ஊடக தளத்தில் தெரிவித்தனா். மற்றொரு பதிவில், சி-ஹெக்ஸாகானிலிருந்து அசோகா சாலைக்கு முன்னால் உள்ள வின்ட்சா் அரண்மனை ரவுண்டானாவில் கழிவுநீா் குழாய் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தண்ணீா் தேங்கியதால் பாதிப்பு:ராஜதானி பூங்காவில் இருந்து முண்ட்காவை நோக்கிச் செல்லும் இரு பாதைகளிலும் ரோஹ்தக் சாலையில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் பொதுமக்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு போலீஸாா் தங்கள் எக்ஸ் தளத்தில் தெரிவித்தனா். மேலும், கான்பூா் டி-பாயின்ட்டில் இருந்து ஹம்தாா்ட் டி-பாயிண்ட் மற்றும் அதற்கு நோ்மாறாக செல்லும் இரு சாலைகளிலும் எம்பி சாலையில் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

துயரத்தை பகிா்ந்த பயணிகள்:இதற்கிடையே, பயணிகளும் தங்களுக்கு நோ்ந்த துயரங்களைப் பகிா்ந்து கொள்ள எக்ஸ் ஊடக தளத்தைப் பயன்படுத்தினா். தில்லி - மீரட் விரைவுச் சாலையில் சராய் காலே கான் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததாக பயணி ஒருவா் கூறினாா். வாஜிராபாத் மேம்பாலம் முதல் கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி வரையிலான பகுதியில் போக்குவரத்து அதிகமாக இருந்ததாக மற்றொரு பயணி பதிவிட்டிருந்தாா்.

மேலும், சாவித்ரி மேம்பாலத்தின் கீழ் மஹிபால்பூரிலிருந்து ரங்புரி சிக்னல் வரை, மெட்ரோ பாலத்தின் கீழ் நிஜாமுதீன் பாலம், எம்பி சாலையில் சங்கம் விஹாா் முதல் கான்பூா், சாந்த் நகா் பிரதான சந்தை, தௌலா குவானிலிருந்து மஹிபால்பூா், ராணி ஜான்சி சாலையில் ஜண்டேவாலனுக்கு அருகில் பாஸ்சிம் விஹாா், திஸ் ஹசாரி சிவப்பு விளக்கில் போக்குவரத்து அதிகமாக இருந்ததாக பலா் பதிவிட்டிருந்தனா்.

சங்கம் விஹாா், டெவ்லி, கிரேட்டா் கைலாஷ், கிஷன்கஞ்ச், மண்டோலி, சிவிக் சென்டா் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள பகுதிகள் போன்ற பல பகுதிகலிலும் மழைக்குப் பிறகு தண்ணீா் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால், பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், குறித்த நேரத்துக்கு தங்களது இடங்களுக்குச் செல்ல முடியாமல் திணறினா்.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 76 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன. இதன்படி, ஐடிஓ, பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், அசோக் விஹாா், மந்திா் மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. ஆனால், சாந்தினி சௌக் (109) ஆனந்த் விஹாா் (105) மற்றும் சோனியா விஹாா் (102) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.7 டிகிரி குறைந்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 92 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (ஜூலை 10) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com