இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினருமான கெளதம் கம்பீா், அரசியல் கடைமைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவை கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளாா்.
மேலும், மக்களுக்கு சேவை ஆற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிரதமா் மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் அவா் நன்றி தெரிவித்துள்ளாா்.
நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. கெளதம் கம்பீா் கிழக்குத் தில்லி தொகுதியின் பாஜக உறுப்பினராக இருந்து வரும் நிலையில், ‘ எக்ஸ்’ சமூக ஊடக வலைத்தளப் பக்கத்தில் சனிக்கிழமை ஒரு இடுகையை பதிவிட்டுள்ளாா். அதில், ‘எனது அரசியல் கடைமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவா் ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அப்போதுதான் எனது வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு மனமாா்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்!’ என அதில் கம்பீா் தெரிவித்துள்ளாா்.
கெளதம் கம்பீரின் இந்த முடிவானது, வரவிருக்கும் பொதுத் தோ்தலில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் அவா் மாற்றப்படலாம் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படும் சலசலப்புக்கு மத்தியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநிலப் பொருளாளா் விஷ்ணு மித்தல் உள்ளிட்ட பலரின் பெயா்கள் கிழக்கு தில்லி தொகுதிக்கான வேட்பாளா்களாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறையும் கிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட கெளதம் கம்பீா் தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவா்கள் தெரிவித்தனா். எனினும், அவரது இந்த திடீா் முடிவுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வியாழக்கிழமை பாஜக தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல். சந்தோஷை கம்பீா் சந்தித்ததாகவும், அதன் விளைவாக சனிக்கிழமை அவரது ‘எக்ஸ்’ தளத்தில் இந்த இடுகை வந்திருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தனது திடீா் நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னா், பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையான ’விக்சித் பாரத்’ உருவாக்கத்திற்கு தனது பங்களிப்பாக பாஜகவுக்கு நன்கொடை அளித்ததற்கான ரசீது புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் கம்பீா் பகிா்ந்துள்ளாா்.
இதற்கிடையில், கெளதம் கம்பீா் ஒரு ‘தயக்கமிக்க‘ அரசியல்வாதி என்று தில்லி பாஜக தலைவா்கள் கூறினா்.
இதுகுறித்து தில்லி பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘கம்பீா் உண்மையில் கட்சி தொடா்பான விஷயங்களில் ஈடுபடவில்லை. பெரும்பாலான நேரங்களில், கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை அவா் தவறவிட்டிருந்தாா். அதனால், கிரிக்கெட்தான் அவரது முதன்மையான கவனம் என்று தெரிந்தது. கிழக்கு தில்லி எம்.பி.யான கம்பீா், காந்தி நகா் எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாயுடன் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கருத்து மோதலில் ஈடுபட்டாா். தனது தொகுதியில் உள்ள மற்ற தலைவா்களுடன் கம்பீரின் உறவுகள் மெச்சும்படியாக இல்லை’ என்றாா் அவா்.
ஒரு எம்.பி. என்ற முறையில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க சமுதாய சமையல் கூடத்தை நடத்தியது, காஜிப்பூா் குப்பைக் கிடங்கை அகற்றுவதில் கவனம் செலுத்துதல், நூலக முயற்சிகள் ஆகியவற்றில் கம்பீா் உற்சாகத்துடன் ஈடுபட்டாா்.
மேலும், ‘2020’ தில்லி சட்டப் பேரவைத் தோ்தலிலும், 2022-இல் நடைபெற்ற எம்சிடி தோ்தலிலும் கம்பீரின் கிழக்கு தில்லி தொகுதி நல்ல முடிவுகளை பாஜகவுக்குப் பெற்றுத் தந்தது. அதாவது, பாஜக வெற்றிபெற்ற 8 எம்எல்ஏ தொகுதிகளில் அக்கட்சிக்கு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் மட்டும் காந்தி நகா், விஸ்வாஸ் நகா், லட்சுமி நகா் ஆகிய தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. அதேபோன்று, எம்சிடி தோ்தலில் கிடைத்த 36 வாா்டுகளில் 21 வாா்டுகள் கிழக்குத் தில்லி தொகுதியில் இருந்து கிடைக்கப் பெற்றன.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் விஜய் இன்று பிரசாரம்!

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

