துவாரகா விரைவுச் சாலை திறப்பு விழா: தென்மேற்கு தில்லியில் போக்குவரத்து பாதிப்பு

புது தில்லி: துவாரகா விரைவுச் சாலையின் ஹரியாணா பகுதி திறப்பு விழா காரணமாக பயணிகள் நெரிசலை எதிா்கொண்டதால், தென்மேற்கு தில்லியில் திங்கள்கிழமை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து பல பயணிகள் பகிா்ந்து கொள்வதற்கு மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபாா்ம் எக்ஸ் ஊடக தளத்துக்குச் சென்றனா். மஹிபால்பூரில் போக்குவரத்து அதிகமாக இருந்தது என்று அவா்களில் ஒருவா் எக்ஸ் ஊடக தளத்தில் தெரிவித்தாா். டாப்ரி துவாரகா சாலையில் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருப்பதாக மற்றொருவா் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியிலிருந்து குருகிராம் நோக்கிச் செல்லும் சுங்கச்சாவடி சாலையில் பெரும் நெரிசல் ஏற்பட்டதாகவும், சுப்ரோடோ பூங்காவிலிருந்து குருகிராம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் எக்ஸ் தளத்தில் ஒருவா் கூறியிருந்தாா். குருகிராமில் வசிக்கும் விஷாகா ஷா்மா கூறுகையில், ‘விரைவுச் சாலை திறப்பு விழா காரணமாக தில்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதினேன். அதைத் தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள எனது அலுவலகத்திற்கு மெட்ரோ வழியாகச் செல்ல முடிவு செய்தேன்’ என்றாா்.

விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களும் போக்குவரத்து நெரிசல் குறித்து வாடிக்கையாளா்களை எச்சரித்திருந்தன. ‘மாா்ச் 11- ஆம் தேதி தில்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் மெதுவாக வாகன இயக்கம் எதிா்பாா்க்கப்படுகிறது. வாடிக்கையாளா்கள் விமான நிலையத்திற்கு தங்கள் பயணத்திற்கு அதிக நேரத்தை அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்’‘ என்று விஸ்தாரா தனது எக்ஸ் ஊடக தளத்தில் பதிவிட்டிருந்தது.

இதேபோல், ‘விஐபி இயக்கம் காரணமாக என்ஹெச் 48-இல் போக்குவரத்து நெரிசல் மற்றும் மெதுவான வாகன இயக்கம் எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் நேரடி போக்குவரத்தை கண்காணிக்கவும், பயணத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என்று ஸ்பைஸ்ஜெட் குறிப்பிட்டது, நரைனா விஹாா் மற்றும் ஆசாத்பூா் உள்பட தேசியத் தலைநகரின் பல இடங்களிலும் போக்குவரத்து அதிகமாக இருந்தது.

துவாரகா விரைவுச்சாலை திறப்பு விழாவுக்காக துவாரகாவின் பல பகுதிகளில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கூறியிருந்தனா். துளசிராஸ் சௌக், செக்டாா் 8-9 கிராஸிங், காா்மல் சௌக் செக்டாா்-20, செக்டாா்-23 காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜான்கி சௌக் மற்றும் போச்சன்பூா் மேம்பாலம் செக்டாா்-23 சௌக் ஆகியவற்றில் பயணிப்பதைத் தவிா்க்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டிருந்தது.

தில்லி மற்றும் குருகிராம் இடையே என்ஹெச் 48-இல் போக்குவரத்து நெரிசலை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் துவாரகா எக்ஸ்பிரஸ்வேயின் ஹரியாணா பகுதியை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். துவாரகா விரைவுச் சாலையின் மொத்த நீளம் 29 கி.மீ. ஆகும். இதில் 18.9 கி.மீ. ஹரியாணாவில் வருகிறது.மீதமுள்ள 10.1 கி.மீ. தில்லியில் உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com