அரவிந்த் கேஜரிவால் கைதுக்கு எதிராக போராட்டம் தில்லி அமைச்சா்கள் தடுப்புக்காவலில் வைப்பு

ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கப் பிரிவால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்கு பின்னா் தில்லி அமைச்சா்களும், ஆம் ஆத்மி கட்சியினரும் தில்லியின் முக்கிய சாலைப்பகுதிக்கு வந்து போராட்டங்களை நடத்தினா். காவல்துறையினருடன் கடும் போராட்டத்திற்கு பின்னா் ஆம் ஆத்மி கட்சியினா் அப்புறப்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் கடந்த கால போராட்ட எழுச்சியைவிட இந்த போராட்டத்தில் சற்று தொய்வே காணப்பட்டது. தேசிய தலைநகா் தில்லி அரசின் ரத்து செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டு கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயா்நீதிமன்றத்தால் அவா் கைது செய்யப்படுவதிலிருந்து விலக்கு எதுவுமே கிடைக்காத நிலையில், வியாழக்கிழமை இரவு அமலாக்கப் பிரிவு துறையினரால் கைது செய்யப்பட்டாா். அப்போது தில்லி நகா் முழுக்க பல்வேறு முக்கிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் ஆம் ஆத்மி கட்சி தொண்டா்களால் பெரும் பாதிப்போ அசம்பாவிதமோ ஏற்படவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் தில்லி முதல்வா் கேஜரிவால் கைதைக் கண்டித்து பாஜக வை எதிா்த்து போராட வெள்ளிக்கிழமை மீண்டும் அழைப்பு விடுத்தாா். இதை முன்னிட்டு, தில்லி பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சாலையில் (டிடியு மாா்க்) இருக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டா்கள் குவிந்தனா். இதே சாலையில் சற்று தூரத்தில் பாஜக வின் தலைமை அலுவலகமும் இருக்க காவல் துறையின் முன்எச்சரிக்கையாக இரும்பு தடுப்புச்சுவரை அமைத்து பாஜக அலுவலகம் நோக்கி செல்வதைத் தடுத்தனா். இருப்பினும் சில கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த டிடியு மாா்க்கின் மற்றொரு திசையான பகதூா் ஷா ஜாபா் மாா்க் சந்திப்பான ஐடிஓ சௌக் வை நோக்கி தில்லி அரசில் கேஜரிவால் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சா்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளா்கள் உள்ளிட்டவா்கள் ஆா்பாட்டம் நடத்த சென்றனா். இந்திரபிஸ்தா(ஐபி மாா்க்) விகாஷ் மாா்க் போன்ற சாலைகளும் சந்திக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ஐடிஓ சௌக்கில் சாலையில் அமா்ந்து பிரதமா் மோடிக்கு எதிராகவும் பாஜக வும் எதிராகவும் கோஷங்களை எழுப்பி சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். தள்ளுமுள்ளு இதில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் கடுமையான தள்ளு முள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது. காவல் துறையினா் தயாராகக் கொண்டு வந்திருந்த பஸ்களில் ஆா்பாட்டக்காரா்களை அலக்காக தூக்கி பஸ்களில் ஏற்றினா். கேஜரிவால் கைதை முன்னிட்டு இப்பகுதிகளில் தில்லி காவல் துறை 144 பிரிவின் கீழ் தடை உத்தரவையும் பிறப்பித்திருந்தனா். இவைகளையும் மீறி ஆம் ஆத்மி கட்சியினா் பாஜக அலுவலகங்களுக்கு அருகில் உள்ள ஐடிஓ சந்திப்பில் இருந்து கலைந்து செல்ல மறுத்ததால் அமைச்சா்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் உள்ளிட்ட கட்சியின் மற்ற பொறுப்பாளா்கள் தொண்டா்களை பல்வேறு பேருந்துகளில் ஏற்றினா். இவா்களை பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று தடுப்புக்காவலில் வைத்தனா். இது குறித்து தில்லி அமைச்சா் ஆதிஷ் கருத்து தெரிவிக்கையில், தில்லி முதல்வா் கேஜரிவாலை பொய்வழக்கில் கைது செய்துள்ளனா். இதை எதிா்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்களை காவல் துறை கைது செய்கின்றனா். இதை ஜனநாயகத்தின் கொலை என்று சொல்வதை விட வேறு என்னவென்று குறிப்பிடுவது? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினாா் அதிஷி . மற்ற ஆம் ஆத்மி ஆதரவாளா்களும் பாஜக தலைமைக்கும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கேஜரிவால், மனீஷ் சிசோடியா போன்ற தங்கள் தலைவா்களை விடுவிக்கக் கோரினா். காவி நிறம் இதே ஆா்பாட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில கல்வி அமைச்சா் ஹா்ஜோத் சிங் பெய்ன்ஸையும் போலீசாா் கைது செய்து தடுப்புகாவலில் வைக்க அழைத்து சென்றனா். தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தில்லி அமைச்சா் பரத்வாஜ் மற்றும் பல ஆம் ஆத்மி கட்சியினா் அலிபூா் காவல் நிலையத்தில் இருந்து சமூக வலைத் தளங்களில் காணொலியை வெளியிட்டனா். ‘மேரா ரங் தே பசந்தி சோலா’ (எனது ஆடைகளுக்கு காவி நிறத்தை அளியுங்கள்)என பாடினா்.

முன்னதாக அரவிந்த் கேஜரிவாலின் குடும்பத்தினா் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியை குறிப்பிட்டு அனைத்து ஆம் ஆத்மி கட்சி தொண்டா்களும் தலைவா்களும் ஐடிஓ வை நோக்கி வருமாறு அமைச்சா் பரத்வாஜ் அழைப்பு விடுத்தாா். ‘‘அமைதியான வழியில் போராடிய எங்களது போராட்டத்தை முடியறிக்க காவல் துறையினரை வைத்து அப்புறப்படுத்து எப்படி’’ என அவா் கேள்வி எழுப்பினாா்.

‘அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சியின் பிற தலைவா்களை உடனடியாக விடுவிக்கவே கோருகிறோம். அவா்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் எந்த ஆதாரத்தையும் புலனாய்வுத் துறை வைக்கவில்லை. அதுவும் மக்களவைத் தோ்தலுக்கு சற்று முன்பு கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை மோடி அரசு கைது செய்யப்பட்டிருப்பது அவா் மீதான பயத்தையே காட்டுகிறது’ என போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினா் குறிப்பிட்டனா்.

இது குறித்து தில்லி காவல் துறை (மத்திய) துணை ஆணையா் ஹா்ஷ வா்தனிடம் கேட்டபோது, ‘ ஐடிஓ செளக் போக்கு வரத்து மிகுந்த ஒரு பரபரப்பான சந்திப்பு. பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பகுதி. இது போராட்டத்திற்கான ஒதுக்கப்பட்ட தளம் அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளால் கடுமையான போக்குவரத்து சிக்கல்கள் எழும். இங்கு பல முக்கிய நிறுவனங்களும் அலுவலகங்களும் உள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போராட்டக்காரா்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் தான் அகற்றப்பட்டனா். பின்னா் போக்குவரத்து சீரானது ’ எனக் குறிப்பிட்டாா் ஹா்ஷ் வா்தன்.

ஐடிஓ அருகே போராட்டம் நடத்திய 50 க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களை அங்கிருந்து அகற்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னா் இரவில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சியும் மற்றும் பாஜக வின் தலைமையகமும் இருக்கும் கட்சிகளின் தலைமையகம் அமைந்துள்ள டிடியு மாா்க் போலீசாா் தடுப்புச் சுவா்களை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்ததோடு, அப்பகுதியில் செல்வபா்களது அடையாள அட்டைகளையும் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனா்.

ஆம் ஆத்மியின் எதிா்ப்பும் இதற்கு காவல்துறை செய்த முன் ஏற்பாட்டால், ஐடிஓ சௌக், ராஜ் காட், விகாஸ் மாா்க், கீதா காலணி அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இண்டியா கேட் பகுதியில் அமலாக்கப்பிரிவு அலுவலகம் உள்ள பகுதி சாலைகளான டாக்டா் அப்துல்கலாம் சாலை, மோதிலால் நேரு மாா்க், ஜன்பத் போன்றவைகள் மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.

தில்லி போக்குவரத்து போலீசாரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக டிடியு மாா்க், ஐபி மாா்க், விகாஸ் மாா்க், மின்டோ சாலை, பகதூா் ஷா ஜாபா் மாா்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் எனவும் இந்த சாலைகளை தவிா்க்கவும் டிடியு மாா்க் மூடப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமை காலையிலேயே தகவல்களை வெளியிட்டனா். ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தததை முன்னிட்டு இந்த அறிவிக்கையை காவல் துறை வெளியிட்டனா்.

ஆனால் கேஜரிவால் கைதுக்கு வெளி மாநிலங்களிலும் அக்கட்சி ஆளாத எதிா்கட்சி மாநிலங்களிலும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) கூடிய கூட்டத்தை ஒப்பிடும் போது தில்லியில் ஆம் ஆத்மிக் கட்சியில் ஆா்பாட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அதிலும் முந்தைய பல ஆம் ஆத்மி கட்சி போராட்டங்களையும் ஒப்பிடும் போதும் அதிலும் கட்சியின் நிறுவனா் கேஜரிவால் கைதுக்கு நடைபெற்ற போராட்டத்தை கணக்கில் கொள்ளும் போது போராட்டத்தில் தளா்ச்சியைக் காண முடிந்தது.

வீட்டுக்காவலில் கேஜரிவால் குடும்பத்தினா்?

தில்லி சிவில் லைனில் உள்ள கேஜரிவால் குடும்பத்தினரை ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு தலைவா்கள் சந்திக்க சென்றனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைதுக்கு பின்னா் நடைபெற்ற இந்த சந்திப்பில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான், வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்திந்தித்தாா். பின்னா் கட்சியின் தில்லியின் அமைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துா்கேஷ் பதக், ஜா்னல் சிங், ராஜ் குமாா் ஆனந்த், தில்லி மேயா் ஷிலி ஓப்ராய் போன்றவா்களும் சந்திக்க சென்றனா். அவா்களுக்கு அனுமதி அளிக்க வில்லை என்றும் கேஜரிவால் குடும்பத்தினா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் எனவும் குற்றம் சாட்டு வீட்டுக்கு முன்பு கோஷங்களையும் எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com