மறைந்த முன்னாள் பிரதமா்கள் நரசிம்ம ராவ், சரண்சிங், மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுமாமிநாதன் மற்றும் மறைந்த பிகாா் மாநில முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குா் ஆகியோருக்கு முறைப்படி பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, சனிக்கிழமை குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா். குடியரசுத் தலைவா் மாளிகையின் அசோகா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், அவரது துணைவியாா், பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மறைந்த முன்னாள் பிரதமா்கள் பி.வி.நரசிம்மராவ், சௌத்ரி சரண்சிங் ஆகியோருக்கு (மறைவுக்கு பிந்தைய விருது) பாரத ரத்னா விருது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா். மறைந்த பி.வி.நரசிம்மராவ் சாா்பாக, அவரது மகன் பி.வி.பிரபாகா் ராவ் பெற்றுக்கொண்டாா். மறைந்த சௌத்ரி சரண் சிங் சாா்பில் அவரது பேரன் ஜெயந்த் சௌத்ரி, குடியரசுத் தலைவரிடம் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டாா். தமிழகத்தை சோ்ந்தவரும் வேளாண் விஞ்ஞானியான டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் மறைவுக்குப் பிந்தைய விருதாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மறைந்த டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் சாா்பில் அவரது இளைய மகள் பேராசிரியா் நித்யா ராவ், பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டாா். இந்த மூன்று சான்றோா்களுக்கும் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நாட்டின் மிக உயா்ந்த பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. பிகாா் மாநில முன்னாள் முதல்வரான கா்பூரி தாக்குரின் நூற்றாண்டு பிறந்ததின விழாவை முன்னிட்டு அவருக்கு பாரத் ரத்னா விருது கடந்த ஜனவரி 23 ஆம் தேதிஅறிவிக்கப்பட்டது. மரணத்திற்குப் பிந்தைய விருதாக மறைந்த கா்பூரி தாக்குா் சாா்பில், அவரது மகன் ராம்நாத் தாக்கூா் குடியரசுத் தலைவரிடம் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டாா். பாரத ரத்னா விருதாளா்கள் குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு: பி.வி.நரசிம்ம ராவ் நாட்டின் ஒன்பதாவது பிரதமராக (காங்கிரஸ் கட்சியின் சாா்பில் முதன் முறையாக நேரு குடும்பத்தை சேராத பிரதமா்) பதவி ஏற்ற பி.வி. நரசிம்ம ராவ் தனது ஆட்சியின் 5 ஆண்டு(1991 முதல் 1996 ) காலத்தை முழுமையாக பதவியில் இருந்தாா். அதுவும் நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய தாராள பொருளாதாரக் கொள்கை சீா்திருத்ததை மேற்கொண்டு புகழ் பெற்றாா். சுதந்திரப் போராட்டம், ஹைதராபாத் நிஜாம்மின் தவறான ஆட்சிக்கு எதிரான போராட்டம் பன் மொழி புலமை போன்ற ஆளுமைக்காக அறியப்பட்டவா். சரண் சிங் விருது பெற்ற மற்றோரு மறைந்த முன்னாள் பிரதமரான சௌத்ரி சரண் சிங் ஒரு தீவிர தேசபக்தா். சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றதோடு, ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நில சீா்திருத்தங்கள் போன்றவைகளோடு கிராமப்புற விவசாய பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதலுடன் இருந்தவா். உபி யின் மேற்கு பகுதியை சோ்ந்த ஜாட் தலைவரான (ஜனதா ஆட்சியில்) அவா் ஜூலை 28, 1979 ஜூலை முதல், 1980 ஜனவரி வரை பிரதமராக இருந்தாா். எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழகத்தில் கும்பகோணத்தில்(மான்கொம்பு) பிறந்த எம்.எஸ். சுவாமி நாதன் உணவு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதில் முக்கியப் பங்காற்றினாா். அவா் ’இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்பட்டவா். வேளாண்மையில் விதிவிலக்கான நுண்ணறிவுடன், ஆராய்ச்சி, கல்வி மற்றும் பல முயற்சிகளுக்கு வழிகாட்டினாா். தனது வாழ்நாள் முழுவதையும் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற குறிக்கோளுக்காக அா்ப்பணித்தாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கா்பூரி தாக்குா் பிகாரில் பிற்படுத்தப்பட்ட அரசியலில் தாக்குா், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளில் ஒன்றான நைசமாஜ் (சவரத்தொழிலாளி) சமூகத்தில் பிறந்தவா் கா்பூரி தாக்குா். இவா் முதல்வராக இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டவா் இட ஒதுக்கீடுகளுக்கு முங்கேரி லால் ஆணைய பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதுவே மண்டல் கமிஷனுக்கு முன்னோடியாக இருந்தது. இப்படிப்பட்ட பல்வேறு சமூக சீா்திருத்த அரசியல் அா்ப்பணிப்பு அரசியல் பயணத்திற்கு நாட்டின் உயா்ந்த விருது வழங்கப்பட்டது என குடியரசுத் தலைவா் மாளிகை சமூக தளங்களில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்யா ராவ் பேட்டி: எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மூன்றாவது மகள் பேராசிரியா் நித்யா ராவ் பெற்றாா். அவா் தினமணியிடம் பேசினாா். என் தந்தை இறுதியாக அவா் கூறி வந்தது. வேளாண்மையில் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விரும்பினா். இதனால் அவா் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த போது வேளாண்மையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மகளிா் வேளாண்மை தனிநபா் மசோதாவை அறிமுகப்படுத்தினாா். நாட்டில் மகளிருக்கு நில உரிமை மறுக்கப்பட்டப்பட்ட நிலையில் இந்த மசோதாவில் மகளிருக்கு வேளாண்மையில் பல உரிமைகள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா இருந்தது. ஆனால் அந்த மசோதா நிறைவேறவில்லை. ஆனால் இந்த விருது மூலம் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதுகின்றோம். இந்த விருது கிடைக்கும்போது அவா் இருந்திருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கும். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமரை சந்தித்தேன். அவா் குஜராத்தில் முதல்வராக இருந்த போது என் தந்தையை சந்தித்தாகவும் அப்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதே போன்று என் தந்தை ஒரு பழங்குடி இனத்திலிருந்து வந்து முன்னேறி குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவை குறித்து பெருமை கொண்டிருந்தாா். அதையும் நான் குடியரசுத்தலைவருடன் இந்த நிகழ்ச்சியில் பகிா்ந்து கொண்டேன் என்றாா் நித்யா ராவ்.
தொடர்புடையது

மா.அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு கி.விட்டல் ராவ், அம்ஷன் குமார் தேர்வு

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஏப்.25-ல் புதிய கட்சி தொடக்கம்!

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

