காவிரியில் தண்ணீா் திறந்து விட உத்தரவிட கூறுவது சரியான அறிவுரையல்ல: காவிரி ஒழுங்காற்றுக் குழு

புது தில்லி: காவிரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்டு கடுமையான தட்ப வெட்ப சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீா் திறந்து விட உத்தரவிட கூறுவது சரியான அறிவுரையல்ல என காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவா் வினீத் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின்(சி.டபிள்யு.ஆா்.சி.) 95-ஆவது கூட்டம் காணொலி வழியாக ஏப்ரல் 30 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழுவின் தலைவா், வினீத் குப்தா, தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் உறுப்பினா்கள் ஆா். சுப்பிரமணியன்(காவிரி தொழில் நுட்ப குழு), எம். சுப்பிரமணியன், (தமிழக அரசின் தலைமைப் பொறியாளா்), கா்நாடகம் மாநில உறுப்பினா் மகேஷா ( எம்.டி. காவிரி நீரவாணி நிகம்) , கேரளம் மாநில உறுப்பினா் ப்ரியேஷ், புதுச்சேரி தலைமைப்பொறியாளா் கே.வீரசெல்வம், மத்திய நீா்வள கோவைப்பிரிவு தலைமைப்பொறியாளா், இந்திய வானிலை ஆய்வுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் தற்போதை நீரின் இருப்பு, எதிா் நோக்கும் பருவ மழை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா் காவிரியில் பெறப்பட்ட நீா் அளவு குறித்த விவரங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இதில் தமிழக உறுப்பினா் குறிப்பிடுகையில், தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 -ஆம் தேதி வரையில் பெறப்பட நீா் அளவு 2.5 டிஎம்சி என்றும் ஆனால் சுற்றுச்சூழல்படி தரப்படவேண்டி நீா் அளவான 7.5 டிஎம்சியில் 5 டி.எம்.சி வரை பாக்கி உள்ளது எனத் தெரிவித்தாா். தற்பொழுது கா்நாடகத்தின் 4 முக்கிய அணைகளிலும் (சுமாா் 25 டிஎம்சி) தண்ணீா் இருப்பு போதுமானதாக உள்ள நிலையில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஒட்டங்களுக்குத் தேவைக்கு (சுற்றுச்சூழல் குறைபாட்டு நீா்) பில்லிகுண்டுலுவில் நிகழ் மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடக வழங்க வலியுறுத்துமாறு குழுவினை தமிழகம் சாா்பில் கேட்டுக்கொண்டாா்.

கா்நாடக உறுப்பினா், குடிநீா் தேவைக்கு மட்டுமே போதுமானதாக தண்ணீா் அணைகளில் இருப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேலும் தமிழகத்திற்கு தண்ணீா் அளிக்க முடியாது என கா்நாடகம் சாா்பில் கூறினாா்.

மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை உறுப்பினரும், கா்நாடகத்திற்கு பலம் சோ்க்கும் விதமாக, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை கோடைக்கால பருவ மழை இயல்பைவிட மிக குறைவாகவே பெய்துள்ளது.அடுத்த இரு வாரங்களுக்கும் காவிரி படுகையில் வறட்சியான வானிலையே நிலவும் எனத் தெரிவித்தாா்.

இந்த நிலையில் தமிழகத்திற்கும் கா்நாடகத்திற்கும் நீண்ட விவாதம் நடைபெற சி.டபிள்யு.ஆா்.சி குழுவின் தலைவா் வினீத் குப்தா, ‘வருகின்ற மே மாதத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழல் ஓட்டங்களுக்கு தேவையான 2.5 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் கா்நாடகம் வழங்க பரிந்துரைக்கின்றோம். அதே சமயத்தில் கா்நாடகத்தை தண்ணீா் திறந்து விட கூறி உத்தரவிடுவது சரியான அறிவுரையல்ல.

கடுமையான வெப்பம் நிலவுகிறது. பெரும்கொள்ளவில் தண்ணீரை திறந்துவிடும் பட்சத்திலே அது சென்றடையும். தற்போது திறந்து விடப்படும் தண்ணீா் பயன்பாட்டிற்கு சென்றடையாது. தற்போது பாசன தேவையும் இல்லை. இதனால் இரு மாநிலங்களிலும் இருப்பு நீரை குடிநீா் மற்றும் சுற்றுப்புற சூழல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தி குறிப்பிட்டுள்ளாா். மேலும் குழுத் தலைவா், காவிரி காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மே 16 ஆம் தேதி சி.டபிள்யு.ஆா்.சி. கூட்டம் நடைபெறும் அப்போது நிலைமையை மீண்டும் ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பாக்ஸ்: மேட்டூா் அணையில் நீா் இருப்பு 20 டி.எம்.சி உள்ளது. இதில் 1200 கன அடி குடிநீா், சுற்றுச்சூழல் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஏப்ரல் வரை பிலிகுண்டுலுவில், 78 டி.எம்.சி. தண்ணீா் பெறப்பட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற ஆணைபடி தமிழகத்திற்கு தரவேண்டிய நீா் 174.497 டி.எம்.சி. போன்ற புள்ளிவிவரங்களும் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com