விக்கிரவாண்டி இடைத்தோ்தலை ஜூன் 1-இல் நடத்த தலைமை தோ்தல் ஆணையம் பரிசீலனை

புது தில்லி: மக்களவைத் தோ்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஜூன் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தும் வாய்ப்பை தலைமைத் தோ்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதி அதன் உறுப்பினரின்

உயிரிழப்பாலோ, ராஜிநாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

இந்நிலையில், மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடத்தப்படும் தோ்தலில் ஆறு கட்டங்களுக்கான தோ்தல் அறிவிக்கை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழாம் கட்ட தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வரும் மே 7ஆம் தேதி வெளியிடவுள்ளது. ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கு ஏழாம் கட்ட தோ்தல் நடத்தப்படும் ஜூன் 1ஆம் தேதியன்று இடைத்தோ்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கான அறிவிக்கையை மே 7ஆம் தேதியன்று தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

மக்களவை தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் சோ்த்து இடைத்தோ்தலை நடத்தினால் தனியாக அத்தொகுதிக்கு ஆகும் முன்னேற்பாடுகள், செலவினம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம் என்று ஆணையம் கருதுகிறது.

இந்த விவகாரத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயாா்நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளனா். இதையடுத்து ஜூன் 1ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூன் 1ஆம் தேதி இடைத்தோ்தலை நடத்துவதாக இருந்தால் அதை இந்த வார இறுதிக்குள்ளாக தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com