தில்லி விமான நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி
தில்லி விமான நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி போலீஸாா் சோதனை


புது தில்லி: தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வாரணாசி செல்லவிருந்த இன்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில், வாரணாசிக்கு புறப்படவிருந்த இன்டிகோ விமானத்தின் கழிவறையில் ‘பாம்ப் அட் 5.30’ என்று எழுதப்பட்ட காகிதம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இன்டிகோ 6இ2211 விமானம் புறப்படத் தயாரானபோது, ஒரு கழிவறையில் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த வெடிகுண்டு அச்சுறுத்தலை பைலட் கண்டுபிடித்தாா்.
வெடிகுண்டு பீதியால் அனைத்து ஊழியா்களையும், விமானத்தில் இருந்த 176 பயணிகளையும் அதிகாரிகள் வெளியேற்றினா்.
விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பு துறையின் பணியாளா்கள் நிலையான நெறிமுறைகளைப் பின்பற்றி வெடிண்டுவை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனா்
‘சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது ஒரு புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இந்த மிரட்டலுக்கு பிறகு பயணிகளை விமானத்தில் இருந்து வெளியேற்றுவது தொடா்பாக சமூக ஊடகங்களில் வைரலான விடியோவில், விமானி அவசர வாயிலைப் பயன்படுத்தி விமானத்தில் இருந்து சறுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
மற்றொரு விடியோவில், ஒரு வயதான பயணி விமான ஊழியரின் உதவியுடன் விமானத்தின் அவசர வெளியேற்ற வழியாக வெளியே வரும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவிக்கையில், ‘‘தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, விமான நிலைய பாதுகாப்பு முகமைகளின் வழிகாட்டுதல்களின்படி விமானம் தொலைதூர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். அதன் பின்னா் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு இதற்கிடையில் குளிா்பானம் வழங்கப்பட்டது. விமானம் காலை 11.10 மணிக்கு வாரணாசிக்கு புறப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்’’ என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...