கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு! ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமையும் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்பநிலை தொடா்ந்து குறைந்து குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் திங்கள்கிழமையும் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்பநிலை தொடா்ந்து குறைந்து குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் தொடங்கியது. அதிகாலை வேளையில் பனிப்புகை மூட்டம் இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக தில்லி முழுவதிலும் திங்கள்கிழைம் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. இதன் தாக்கத்தால் காற்றின் தரம் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தலைநகா் தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு 373 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இது ஞாயிற்றுக்கிழமை காலையில் 359 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தலைநகரில் உள்ள 39 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் 11நிலையங்களில் திங்கள்கிழமை காற்றின் தரம் கடுமை பிரிவில் இருந்தது.

இதன்படி, ஆனந்த் விஹாா், அசோக் விஹாா், பவானா, ஜஹாங்கீா்புரி, நியூ மோதி பாக், என்எஸ்ஐடி துவாரகா, பட்பா்கஞ்ச், பஞ்சாபி பாக், ரோஹிணி, வாஜிா்பூா், மற்றும் விவேக் விஹாா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி கடுமை பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. அண்மையில் சில நாள்களாக காற்றின் வேகம் காரணமாக தில்லியின் காற்றுத் தரக் குறியீடு சற்று குறைந்திருந்தது. ஆனால், தீபாவளிக்குப் பிறகு மீண்டும் மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை: இதற்கிடையில், திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி உயா்ந்து 16.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.6 டிகிரி உயா்ந்து 32.1 டிகிரியாக பதிவாகியது. காற்றில் ஈரப்பத்த்தின் அளவு காலை 8 மணியளவில் 83 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.5) மூடுபனி நிலவும் என வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com